புத் 63 இல. 19

விக்ருதி வருடம் சித்திரை மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ஜ. அவ்வல் பிறை 17

SUNDAY MAY 02, 2010

 
.

துரை விஸ்வநாதன்
இவ்வார ஆளுமை

துரை விஸ்வநாதன்

இப்படித்தான் வாழ வேண்டும் என்று எமக்கு வழிகாட்டிச் சென்ற முன்னோடிகள் பல பேர் இருக்கின்றார்கள். நேர்மை, பேச்சுத் தவறாமை என்று விடாப்பிடியான கொள்கைகளுடன் வாழ்ந்து மறைந்த உத்தமர்களில் ஒருவர் ‘துரைவி’.

நாட்டின் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கியவர். தொழிலதிபர்களுக்கு இலக்கியத்தில் ஆர்வம் காட்டப் போதிய நேரமிரும்பதில்லை. ஆனால் இவர் ஒரு சிறந்த இலக்கிய ஆர்வலர்.

எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் நம்மை அணுகினாலே ஏதும் கேட்க வருகின்றார்களோ என்று பணம் படைத்தவர்கள் ஒளிந்து கொள்ளும் காலத்தில் அவர்களைத் தேடி வந்து உதவி செய்த பண்பாளர் துரை விஸ்வநாதன்.

இன்று மலையக இலக்கியம் இல்லாமல் ஈழத்து இலக்கியம் பூரணத்துவப்படாது என்ற நிலை தோன்றியுள்ளது. ஆனால், அவ்வாறு அதனை உள்ளடக்குவதற்கான ஏற்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படாத போதே, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர் துரைவி. மலையக எழுத்துக்கள் பெருமளவில் ஓரம்கட்டப்பட்ட போது, மலையக மக்களின் விழிப்புக்காக எழுத்து தொடங்கிய நடேசையர் முதல் இளம் எழுத்தாளர்கள் வரையுள்ளோரின் கதைகளைத் தேர்ந்தெடுத்து, மலையக சிறுகதைகள் என்ற பெயரில் துரைவி பதிப்பகத்தின் முதலாவது நூலாக வெளியிட்டார்.

33 மலையக எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.

இரண்டே ஆண்டுகளில் துரைவி பதிப்பகத்தில் இருந்து மலையகம் பற்றிய ஏழு நூல்கள் வந்திருக்கின்றன.

328 பக்கங்களில் 33 மலையக எழுத்தாளர்களின் (‘மலையகச் சிறுகதைகள்’ தொகுதி), மலையகத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான தெளிவத்தை ஜோசப்பின் மூன்று குறுநாவல் படைப்பிய ‘பாலாவி’. உழைக்கப் பிறந்தவர்கள், சாரல் நாடலின் ‘மலையகம் வளர்த்த தமிழ்’, ‘சகல பாலையாவின் கவிதைகள், ருபராணி ஜோசப்பின் ‘ஒரு வித்தியாசமான விளம்பரம்’ அந்தனி ஜீவாவின் ‘மலையக மாணிக்கப்பிள்ளை’ என்பன இந்த ஏழு நூல்.

அதுமாத்திரமன்றி, சில காலங்களுக்கு முன்னர் தனது பெற்றோர்களின் நினைவாக, தினகரன் அனுசரணையுடன் சிறுகதைப் போட்டியொன்றையும் நடாத்தியுள்ளார்.

இலங்கையர் இலக்கிய வரலாற்றில், சிறுகதைப் போட்டிக்கு பரிசுத் தொகையாக, ஒரு இலட்சத்து ஓராயிரம் வழங்கப்பட்டது அதுவே முதல்தடவையாகும்.

தனது இலக்கியப் பணிகளில் மலையக இலக்கிய உலகில் மட்டுமல்லாமல், ஈழத்து இலக்கியம் பரப்பிலும் துரைவி அழியா இடம்பிடித்திருக்கிறார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.