ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 
ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரங்களை பகிர முடியாது

ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரங்களை பகிர முடியாது

தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு விழாவில் அநுரகுமார திஸாநாயக்க

ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரங்களைப் பகிரமுடியாது என்பதை ஜே.வி.பி இனிமேலும் ஏற்றுக்கொள்ளாது என்பதை உறுதிப்படுத்துவதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் கொள்கைகளை மாற்றி அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான புரட்சியை மேற்கொள்ளவேண்டிய தேவையே தற்பொழுது நாட்டில் உருவாகியிருப் பதாகவும் அவர் கூறினார்.

பொதுத் தேர்தலுக்கான ஜே.வி.பியின் தேர்தல் விஞ்ஞாபனம் மனசாட்சியின் உடன்படிக்கை என்ற தொனிப் பொருளில் நேற்று வெளியிடப்பட்டது. கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜே.வி. பியின் விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

ஜே.வி.பியின் பிரதம செயலாளர் ரில்வின்சில்வா, ஜே.வி.பியின் வேட் பாளர்கள், மதத் தலைவர்கள், கல்விமான்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்த இந்த விசேட மாநாட்டில் சிறப்புரையாற்றிய அநுரகுமார திசாநாயக்க கூறுகையில்,

இனிமேலும் உலகத்தில் அதிகாரங்களைப் பகிர்வதற்கு ஆயுதப் புரட்சி தீர்வாகாது. இராணுவம் விருத்தியடைந்துள்ளது, அறிவு விருத்தியடைந்துள்ளது, நவீன ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரங்களைப் பகிரமுடியும் என்பதை நாம் இனிமேலும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என உறுதிப்படுத் துகிறேன். கடந்த காலங்களில் ஜே.வி.பி ஆயுத போராட்டங்களில் தலையிடவேண்டி ஏற்பட்டது. இது தொடர்பில் நாம் உண்மையில் கவலையடைகிறோம். மேடைகளில் மாத்திரமன்றி மனசாட்சிக்கு உட்பட்டதாக கவலையடைவதுடன், அதிர்ச்சியடைகின்றோம்.

இனிவரும் காலங்களில் பிரச்சி னைகளை கருத்துக்களால் மோதுவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

எந்தவொரு கட்சியினரையும் கருத்துக் களால் மோதுவதற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

‘மனசாட்சியின் உடன்படிக்கை’ என்ற தேசியவேலைத்திட்டத்தின் ஊடாக பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி அதனை அடிப்படையாகக் கொண்டு சகல துறைகளிலும் முன்னேற்றங்களைக் கொண்டுவரக்கூடிய திட்டங்களை முன்வைத்துள்ளோம்.

சுதந்திரத்தின் பின்னர் சுமார் 67 வருடங்கள் நாட்டை ஆட்சிசெய்த கட்சிகள் நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றத் தவறிவிட்டன. நாட்டை முன்னேற்றுவதாயின் பொருளாதார வளர்ச்சியை கைப்பற்றவேண்டும். இதனூடாக உலக சந்தையில் நாட்டுக்கென பங்களிப்பொன்றை ஏற்படுத்தவேண்டும்.

இவற்றுக்கான சகல வேலைத் திட்டங்களும் எம்மிடம் உள்ளன.

இதற்கு தலைமை வழங்கக்கூடிய ஒரேயொரு கட்சி ஜே.வி.பி மட்டும்தான். பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அவசியம். சகல இன மக்களையும் சமமாக மதித்து, அவர்களின் மத மற்றும் கலாசார உரிமைகளுக்கு இடமளிக்கும் வகையிலான சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவது அவசியம்.

வெளிநாட்டுக்கொள்கை, முதலீடு, பொருளாதார அபிவிருத்தி, கல்வி உள்ளிட்ட சகல துறைகளையும் முன்னேற் றக்கூடிய திட்டங்களை மனசாட்சியின் உடன்படிக்கையில் உள்ளடக்கியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி