ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை
THURSDAY, JULY 23 ,2015

Print

 
தனது இசைஞானத்தை வெளிக்காட்டாமல் அடக்கமான சாதனை படைத்த எம்.எஸ்.வி

தனது இசைஞானத்தை வெளிக்காட்டாமல் அடக்கமான சாதனை படைத்த எம்.எஸ்.வி

உலக இசையை தமிழில் புகுத்திய பெருமைக்குரியவர்

vம். எஸ். விஸ்வநாதனின் நினைவுகள் அவரது ரசிகர்களின் உள்ளங்களில் அலைபாய்ந்தபடியே உள்ளன. அவர் இசையமைத்த பாடல்கள் நெஞ்சை விட்டு நீங்கப் போவதில்லை என்பது ஒரு புறமிருக்க அவரைச் சுற்றியே வட்டமிடுகின்றன.

மனயங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என்ற இயற் பெயர் கொண்ட எம். எஸ். விஸ்வநாதன் பாலக்காட்டில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில் 1928 இல் பிறந்தார். அவரது பெற்றோர் பெயர் மனயங்கத் சுப்பிரமணியன், நாராயணி குட்டி.

“இசையில் மகா பாண்டித்தியம் பெற்ற எம். எஸ். வி. கல்விக்காக பள்ளிக்கூடப் பக்கமே கால் வைத்தது கிடையாது. ஆனால் அவரது பேச்சுத் தெளிவும், திகைப்பும் நிறைந்தது. பல மொழி அறிந்த வித்தகர்.

4 வயதில் தந்தையை இழந்தவர். கண்ணனூரில் தாத்தா வீட்டில் வளர்ந்தார். பள்ளியில் படித்ததில்லை. தியேட்டர்களில் நொறுக்குத் தீணி விற்பார். நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார். 13 வயதில் திருவனந்தபுரத்தில் தனது முதல் மேடைக் கச்சேரியை நடத்தினார் எம். எஸ். வி.

“அன்பு மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள். லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை.

எத்தனை சோதனைகள் வந்தாலும் இஷ்ட தெய்வமான முருகனை, எந்தக் கணமும் பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் ‘முருகா முருகா தான்.

குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்நாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தண்டசனை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறைவேற்றியவர்.

நடிகர், பாடகராக வரவேண்டும் என்பது அவரது விருப்பம். அது நிறைவேறவில்லை. சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்தார். 1950 களில் எஸ். எம். சுப்பையா நாயுடு மற்றும் சி. ஆர். சுப்பாராமன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பிறகு, இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் குழுவில் இவர் ஆர்மோனியக் கலைஞராகவும், டி. கே. ராமமூர்த்தி வயலின் கலைஞராகவும் சேர்ந்தனர்.

“தன் குரு எஸ். எம். சுப்பையா நாயுடு இருக்கும் போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, தன் வீட்டிலேயே இறுதிக் கடமைகள் செய்தார்.

சுப்புராமனின் திடீர் மறைவால் பாதியில் நின்ற அவரது படங்களை இவர்கள் இருவரும் முடித்துக் கொடுத்தனர். “தேவதாஸ்”. “சண்டி ராணி” படங்களின் இணை இசையமைப்பாளர்களாக அறிமுகமாயினர். ‘பணம்’ திரைப்படத்தில் ஆரம்பித்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ வரை 700 திரைப்படங்களுக்கு இணைந்து இசையமைத்தனர்.

எம். எஸ். விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளனர். ஆனால் எத்தனை படம் என்பதை துல்லியமாகப் பதிவு செய்து வைத்துக் கொள்ளவில்லை.

1952 இல் தொடங்கி 1965 வரையான 13 ஆண்டுகளில் இருவரும் இணைந்து காலத்தால் மறக்க முடியாத பல காவியப் பாடல்களைப் படைத்தனர். இருவரும் இணைந்து 100க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இது ஒரு மிகப் பெரிய சாதனையாகும். இசையமைத்த 75 படங்களில் பெயர்கள்தான் பதிவுகளில் இடம்பெற்றுள்ளன.

டி. கே. ராமமூர்த்தியைப் பிரிந்த பிறகு தனியாக 700ற்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்தார் எம். எஸ். விஸ்வநாதன். கடைசியாக அவர் இசையமைத்த படம் சுவடுகள்.

எம். ஜி. ஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பிரிந்த இருவரும் மீண்டும் 1995 இல் சத்யராஜ் நடித்த ‘எங்கிருந்தோ வந்தான்’ படத்தில்தான் இணைந்தனர்.

தமிழ் தவிர, மலையாளத்தில் 74 படங்களுக்கும், தெலுங்கில் 31 படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

‘கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த எம். எஸ். வி., ‘காதல் மன்னன்’ ‘காதலா... காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நகைச்சுவையிலும் கொடி கட்டியவர் எம். எஸ். வி.

பீம்சிங் . கிருஷ்ணன் பஞ்சு, திருலோகசந்தர், கே. பாலச்சந்தர் ஆகிய 4 இயக்குநர்களிடம் அதிகம் பணிபுரிந்துள்ளார். தமிழ். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் 1,200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 1951 இல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம். எஸ். வி.யின் இசை ராஜ்யம்தான்.

“நெஞ்சில் ஓர் ஆலயம்” படத்தில் இடம்பெற்ற முத்தான முத்தல்லவோ பாடலை 20 நிமிடத்தில் இசையமைத்தார். “தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என 1,200 திரைப்படங்களுககு இசையமைத்துள்ளார்.

காலத்தால் அழியாத பல காவியப் பாடல் தந்த எம். எஸ். விஸ்வநாதனின் மனைவி ஜானகி கடந்த 2012 ம் ஆண்டு மறைந்தார்.

“கடந்து வந்த பயணத்தில் அவர் இசையமைப்பதை, பாடுவதை மட்டுமே சிரத்தையாய் மேற் கொண்டாரே தவிர, அவற்றைப் பதிவாக ஆவணப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படவில்லை.

“தனது இந்த சாதனை யை அவர் எந்த மேடையிலும் காட்டிக் கொண்டது கூட இல்லை.

எம். எஸ். வி. அறிமுகப்படுத்திய பாடகர்களாக இவர்களைக் குறிப்பிடலாம்.

* ஜெயச்சந்திரன் - திரைப்படம் - மணிப்பயல்

* வாணிஜெயராம் - திரைப்படம் - தீர்க்கசுமங்கலி

* வசந்தா - திரைப்பமம்- சுமதி என் சுந்தரி

* எம். எல். ஸ்ரீகாந்த் - உத்தரவின்றி உள்ளே வா

* ஜி. கே. வெங்கடேஷ் - பாவ மன்னிப்பு

* கல்யாணி மேனன் - சுஜாதா

* புஷ்பலதா - ராஜபாட் ரங்கதுரை

* சாவித்திரி - வயசுப் பொண்ணு

* ஷேக் முஹம்மது- அபூர்வ ராகங்கள்

* சோபா சந்திர சேகர்- நம்நாடு

எம் . எஸ். வி. அறிமுகப்படுத்திய கவிஞர்கள்

* புலமைப்பித்தன்

* முத்துலிங்கம்

* நா. காமராசன்

* ரோஷானாரா பேகம் (குங்குமப்பொட்டின் மங்கலம் பாடல்- குடியிருந்த கோயில்)

கமல், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார்.

* காதலா காதலா

* காதல் மன்னன்

* தகதிமிதா

* அன்பே வா (புதியது)

* மஹாராஜா

* தில்லு முல்லு (ரீமேக்) ஆகியவை அவர் நடித்த படங்கள்.

எம். எஸ். வி. இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து சில படங்களில் பணியாற்றியு ள்ளார்.

* மெல்லத் திறந்தது கதவு,

* செந்தமிழ் பாட்டு

* விஷ்வ துளசி

ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட இளையராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம் எனக் கூறலாம்.

கண்ணதாசனைப் போன்று வாலியுடன் ஏராளமான படங்களில் எம். எஸ். வி. இணைந்து பணியாற்றியுள்ளார்.

அப்பாடல்களும் படங்களும் வருமாறு:-

* சந்ரோதயம் ஒரு பெண்ணானதோ..... (சந்திரோதயம்)

* ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..... (அன்பே வா)

* ஒன்னா இருக்கக் கத்துக்கணும் (அன்புக் கரங்கள்)

* கண் போன போக்கிலே கால் போகலாமா.... (பணம் படைத்தவன்)

* காத்திருந்த கண்களே... (மோட்டார் சுந்தரம்பிள்ளை)

* தரைமேல் பிறக்க வைத்தான் ..... (படகோட்டி)

* கொடுத்ததெல்லாம் கொடுத்தான் (படகோட்டி)

* காற்று வாங்கப் போனேன்.... (கலங்கரை விளக்கம்)

* ஏன் என்ற கேள்வி .... (ஆயிரத்தில் ஒருவன்)

* மன்னவனே அழலாமா.... (கற்பகம்)

* நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா..... (உயர்ந்த மனிதன்)

* மெல்லப்போ மெல்லப்போ ..... (காவல் காரன்)

* ஆண்டவனே உன் பாதங்களில்.... (ஒளி விளக்கு)

* வண்ணக்கிளி சொன்ன மொழி .... (தெய்வத்தாய்)

* நான் அனுப்புவது கடிதம் அல்ல.... (பேசும் தெய்வம்)

* நல்ல இடம் நீ வந்த இடம் .... (கலாட்டா கல்யாணம்)

* அங்கே சிரிப்பவர்கள் (ரிக்ஷாக்காரன்)

* சொல்லத்தான் நினைக்கிறேன்.... (சொல்லத்தான் நினைக்கிறேன்)

* நிலவு ஒரு பெண்ணாகி .... (உலகம் சுற்றும் வாலிபன்)

* ஒருதாய் வயிற்றில் .... (உரிமைக் குரல்)

* மல்லிகை முல்லைப் பூப்பந்தல்.... (அன்பே ஆருயிரே)

* ஒன்’றும் அறியாத பெண்ணோ... (இதயக் கனி)

* நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்..... (நம் நாடு)

* கண்ணன் எந்தன் காதலன் ... (ஒரு தாய் மக்கள்)

* நான் அளவோடு ரசிப்பவன் (எங்கள் தங்கம்)

* வெற்றி மீது வெற்றி வந்து .... (தேடி வந்த மாப்பிள்ளை)

* மாதவி பொன் மயிலால் தோகை.... (இரு மலர்கள்)

* நான் ஆணையிட்டால் (எங்க வீட்டுப் பிள்ளை)

* பொங்கும் கடலோசை.... (மீனவ நண்பன்)

* இதோ எந்தன் தெய்வம் .... (பாபு)

தமிழ் சினிமாவில் மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ. சி. திருலோகசந்தர், கே. பாலசந்தர் என இந்த நான்கு இயக்குநர்களிடம் வேலை பார்த்திருக்கிறார். அது தமிழ் சினிமாவின் பொற்காலம் ஆகும்.

சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்த மெல்லிசை மன்னர் உச்சஸ்தாயில் பாடிய பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை. ‘பாசமலர்’ படத்தில் ஆரம்பித்து இந்தப் பாட்டுக் கச்சேரி.

உலக இசையை தமிழில் புகுத்திய பெருமை இவரையே சாரும். எகிப்திய இசையை பட்டத்து ராணி பாடலிலும், பெர்சியன் இசையை நினைத்தேன் வந்தாய் நூறு வயது பாடலிலும், ஜப்பானிய இசையை பன்சாயி காதல் பறவைகள் பாடலிலும், லத்தீன் இசையை யார் அந்த நிலவு பாடலிலும், ரஷ்ய இசையை கண் போன போக்கிலே கால் போகலாமா பாடலிலும், மெக்சிகன் இசையை முத்தமிடும் நேரமெப்போ பாடல்களின் மூலம் கொண்டு வந்தவர்.

வி. குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி எம். எஸ். வி. தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாமல் அடக்கமாக இருந்தவை.

சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி ஆன்மீக இசையில் இருந்த எம். எஸ். வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டு பாடி இருக்கிறார்கள்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]