ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை
THURSDAY, JULY 23 ,2015

Print

 
எளிதாகக் கிடைக்கும் பானமாக மது அமைந்து விடக் கூடாது!

எளிதாகக் கிடைக்கும் பானமாக மது அமைந்து விடக் கூடாது!

இன்றைக்கு மிகவும் இலாபகரமான கைத்தொழில் துறையாக மது உற்பத்தி, விநியோகம் மற்றும் விற் பனைத் தொழில் விளங்குகிறது. தமிழக அரசைப் போல இலங்கை அரசு நேரடியாக மதுபான விற்பனையில் ஈடுபடுவதில்லையாயினும், வரி விதிப்பின் மூலம் பெருந் தொகை நிதி அரசு கருவூலத்தைச் சென்றடைகிறது.

கடந்த மாதம் ஒன்பதாம் திகதி முதல் ஜுலை 08 ஆம் திகதி வரை நாடெங்கும் அனுஷ்டிக்கப்பட்ட தேசிய போதை ஒழி ப்பு மாதம் ஜாஎலையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட போது அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கான வரவு - செலவுத் திட்ட தயாரிப்பின் போது மது வருமானம் ஒரு முக்கிய இடத்தை வகிப்பதாகவும் அரசு வருமானத்துக்கு இன்றிய மையாததாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், 2020 ஆம் ஆண்டில் மதுபான வருமானத்தைப் பயன் படுத்தாத ஒரு வரவு - செலவுத் திட்டத்தைத் தயாரிப்போம் என்று சூளுரைத்தார்.

தேசிய போதை ஒழிப்பு என்பது போதைப் பொருட்களான கஞ்சா, அபின், கொகெய்ன் போன்ற கடும் போதைப் பொருட்களை மட்டும் குறிக்கவில்லை. அரச அனுமதியுடன் தயாரிக்கப்படும் சாராய வகைகள், ஜின், பிறண்டி போன்ற உள்ளூர் தயாரிப்புகள், வெளியூரில் இருந்து இறக்குமதி யாகும் ‘கெளரவ’மான விஸ்கி, ஜின், பிறண்டி போன்ற மது பானங்கள் மற்றும் மென் போதைப் பானமாகக் கருதப்படும் பியர் வகைகளையும் அது குறிக்கிறது.

கள்ளச் சாராயமும் கணிசமான பங்களிப்பை வழங்குகிறது. இவை தவிர, தற்போது பாடசாலைகள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கு அருகே விற்பனை செய்யப்படும் மற்றும் இளைஞர்களை யும் மாணவர்களையும் குறிவைக்கும் போதைப் பொருட்கள் மற்றும் பானங்கள் என்பனவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1839, 1856 காலப்பகுதியில் சீனாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே நடைபெற்ற யுத்தங்கள் அபின் யுத்தங்களாக வரலாற்றில் அறியப்படுகின்றன. சீனாவை பலவீனப்படுத்தும் ஒரு ஆயுதமாக பிரித்தானியா அபினைப் பயன்படுத்தி வெற்றியும் பெற்றது. அமெரிக்க இளைஞர் சமுதாயத்தை போதைப் பழக்கத்துக்கு ஆளாக்கி அவர்களை சீரழிப்பதன் மூலம் அந்நாட்டைப் பலவீனப்படு த்தும் உத்தி பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக அமெரிக்க அரசு ஒரு பிரகடனப்படுத்தாத யுத்தத்தை நடத்தி வருகிறது.

இந்த உதாரணங்கள், ஒரு நாட்டின் எதிர்காலத்தையே போதைப் பாவனையின் மூலம் சீரழித்து விடலாம் என்பதைச் சுட்டுவதால் போதை என்பது சாராயமாக அல்லது பியராக இருக்கட்டும் அல்லது கடும் போதைப் பொருட்களாக இருக்கட்டும், அவை ஒரே மட்டத்திலேயே கவனிக்கப்பட வேண்டும். பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை ‘மென் போதை’ விற்பவர்கள் தானே என எளிதாகக் கருதிவிடக் கூடாது.

ஏனெனில் மென் போதைப் பாவனையில் ஆரம் பித்தே பெரும் குடிகாரர்களாகவும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகவும் மக்கள் மாறிப்போவதால், போதைப் பொருட்களைத் தடுக்கும், ஒழிக்கும் நடவடிக்கை களை முடுக்கிவிடும் அதேசமயம், மென் போதைப் பொரு ட்கள் மாணவர்கள், இளைஞர்கள் கைகளை எட்டுவதைத் தடுக்கும் முறைகள் பற்றி தீவிர கவனம் செலுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.

ஏனெனில் இளமையில் பழகும் பழக்கங்கள் வாழ்க்கை முழுவதும் நிலைத்து விடுவது இயல்பு.

பாடசாலை மாணவர்களைக் குறிவைக்கும் மென்போதைப் பொருட்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் அதேசமயம், நாடெங்குமுள்ள மது விற்பனை நிலைய ங்களில் அமோகமாக விற்பனையாகிவரும் டின் பியர்கள் பற்றி அரசு கவனம் எடுப்பதாகத் தெரியவில்லை. பியர் அருந்துவதில் இருந்தே பெரும்பாலானோர் தமது மதுப் பழக்கத்தை ஆரம்பித்து குடிகாரர்களாக மாறுவதால், வருமுன் காக்கும் நடவடிக்கைகளை எடுப்பதே சரியானதாக இருக்கும்.

பியர் டின்கள் பார்க்கக் கவர்ச்சிகரமாகவும், எட்டு சதவீத மதுசாரத்தைக் கொண்டதாகவும், எளிதாக கையில் எடுத்துச் செல்லக்கூடியதாகவும், இரு நூறு ரூபாவுக்குட்பட்ட விலை கொண்டதாகவும் விளங்குவதால் இந்த பியர் டின்கள் இளை ஞர்கள், பாடசாலை மாணவர்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

நவீன உணவு கலாசாரத்துடன் ஒன்றிப் போகக்கூடிய புதிய மென்போதைப் பானமாக இன்று டின் பியர் பெயர் பெற்று விளங்குகிறது. பெருந்தெருக்கள், கிராம சாலைகள் தோட்டப் பாதைகளின் ஓரங்களில் நசுக்கி எறியப் பட்டுக் கிடக்கும் இந்த டின்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுவது, சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுக்கு அலார மணியோசையாக இருக்க வேண்டும்.

கிராம மற்றும் தோட்டப்புற இளைஞர்கள் டின் பியர் பருகுவதை புதிய கலாசாரமாகவும், ‘கெளரவமான’ குடியாகவும் பார்க்கிறார்கள் என்பது கவனத்துக்குரியது. எனவே, இத்தேசிய போதை ஒழிப்பு மாதத்தின் போது பியர் பானத்தை டின்களில் விற்பதைத் தடை செய்வது பற்றி அரசு ஆலோசிக்க வேண்டும்.

மொத்தத்தில் மது என்பது எளிதில் கைகளுக்கு எட்டும் பான மாக என்றைக்குமே இருக்கக்கூடாது!


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]