ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 23
ஜய வருடம் மாசி மாதம் 01ம் நாள் வெள்ளிக்கிழமை
FRIDAY, FEBRUARY 13 2015

Print

 
ஜp.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதில் சாதகமான அறிகுறிகள்

ஜp.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதில் சாதகமான அறிகுறிகள்

கடந்த அரசாங்கத்தில் இழக்கப் பட்ட ஐரோப்பாவின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள் சாதகமான நிலைப்பாட்டினைக் காட்டுகிறது.

வரிச்சலுகை இழக்கப்பட்டதனால் இலங்கையிலுள்ள ஆடைத் தொழிற் சாலைகள் பல நெருக்கடி நிலைக்கு முகம் கொடுத்து மூடப்பட்டன. இதன் விளைவாக மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் சார்பில் நான் பரிந்துரைக்கின்றேன்.

இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வாரம் இடைக் கால வரவு செலவுத் திட்டம் குறித்து கைத்தொழில் மற்றும் வர்த்தக அமை ச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ். மியன்னாவெல்ல மற்றும் அவரது உயர் அதிகாரிகள் ஆலோசகர்களுடன் அமைச்சில் இடம்பெற்ற விரிவான கலந்துரையா டல் ஒன்றின் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்ததாவது,

புதிய அரசினால் முன்வைக்கப் பட்ட பரந்தளவிலான இடைக்கால வரவு செலவுத் திட்டம் இலங்கை யில் உள்ள மக்களுக்கு ஏராளமான சலு கைகளை கொண்டுள்ளதுடன் எங்கள் கைத்தொழில் மற்றும் வர்த் தகத் துறைகளுக்கும் பாரிய ளவில் நன்மை பயக்கூடிய தாக உள்ளது. இதற்காக நாங்கள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பாராட்டு கின்றோம்.

2013 ம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான எமது வர்த்தகம் 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நெருக்கமாக இருந்தது என்று நான் அறிந்தேன். ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைகள் நடைமுறையில் இருந்தால் இவ்வர்த்தகம் மிகவும் நன்மையாக இருந்திருக்கும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டால் நாம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் மீண்டும், மீன் ஏற்றுமதியினைத் தொடரலாம்.

எனது அமைச்சின் கீழ் உள்ள வர்த்தக திணைக்களம் மற்றும் பதிவாளர் கம்பனிகள், தற்போது திருப்தி தருகிற நம்பகமான மற்றும் வெளிப்படையான முதலீட்டு செயல்பாட்டினை முன்னெடுத்து செல்கின்றன.

இந்த புதிய பிரிவிற்கு எங்கள் முழு ஆதரவினை வழங்கத் தயாராக இருக்கிறோம். 2010 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையை நிறுத்தியது. இச்சலுகைகள் நிறுத்தப்பட்ட போதிலும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வசதி தொடர்கிறது. ஐரோப்பிய சந்தைகளில் இலங்கையினுடைய ஏற்றுமதிக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகை (குறிப்பாக ஆடை ஏற்றுமதிக்கு) இலவசமாக வழங்கப்பட்டது.

2012 ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான மொத்த வர்த்தகம் 4.94 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்து 2013 ம் ஆண்டு, 4.95 பில்லியன் அமெரிக்க டொலராக சற்று ஒரு நிதானமான வளர்ச்சிப் போக்கினைக் காட்டியது. 2014ம் ஆண்டு ஐரோப்பியத்திற்கான தற்காலிக மொத்த ஏற்றுமதி ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை 32 சதவீத வளர்ச்சியுடன் 10.1 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. நீண்ட காலமாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மிகப் பெரிய ஒற்றை ஏற்றுமதி சந்தையாகவும் இரண்டாவது மிகப் பெரிய வர்த்தக பங்காளியாகவும் திகழ்கிறது.

2014 ம் ஆண்டு, ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை இலங்கையின் தற்காலிக மீன்பிடித்துறை ஏற்றுமதி 9.99 சதவீத வளர்ச்சியுடன் 242 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அலங்கார மீன் ஏற்றுமதி 17.33 சதவீத வளர்ச்சி-யுடன் 11.51 மில்லியன் அமெரிக்க டொலராகவும் கடின ஓடுள்ள மீன் இனத்தைச் சேர்ந்த சமையல் உயிர் வாழ் இனத்தின் தற்காலிக ஏற்றுமதி 29 சதவீத வளர்ச்சியுடன் 51.10 மில்லியன் அமெரிக்க டொலராகவும், சமையல் மீன் 5.25 சதவீத வளர்ச்சியுடன் 179.76 மில்லியன் அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.

அதேவேளை இலங்கையின் 75 நடுத்தர மற்றும் பெரிய அளவிலான மீன்பிடித்துறை ஏற்றுமதி நிறுவனங்களில் 32 நிறுவனங்களுக்கு நீர் வாழ் தாவரங்களின் செயற்பாட்டைப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]