ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
tuesday, August 26, 2014

Print

 
மத்திய மாகாண சபை கலாசார திணைக்களத்தின் ‘சாஹித்திய கலா பிரசாதினி’ விழா

மத்திய மாகாண சபை கலாசார திணைக்களத்தின் ‘சாஹித்திய கலா பிரசாதினி’ விழா

மத்திய மாகாண சபையின் கலாசார திணைக்களத்தினால் ஆண்டு தோறும் நடாத்தப்பட்டு வரும் “சாஹித்திய கலா பிரசாதினி” எனும் பெயரிலான இலக்கிய விழா இம்முறையும் செப்டம்பர் மாதம் 06ம் திகதி முதல் 11ம் திகதி வரை விமரிசையாக நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

இவ்விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் பேராதெனிய கெட்டம்பேயில் அமைந்துள்ள மஹாநாம மத்திய மஹா வித்தியாலயத்தை மையமாகக் கொண்டு மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் நடந்தேற உள்ளன. விழா நடந்தேறும் காலகட்டத்தில் கெட்டம்பே பொதுவிளையாட்டரங்கில் களியாட்ட கண்காட்சியொன்றை நடாத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திணைக்களம் மற்றும் கலாசார அமைச்சின் செயற்பாடுகள் என்பனவற்றைப் பறைசாற்றும் காட்சி கூடங்கள் பலவும் அமைக்கப்பட உள்ளன. மேலும் இங்கு வேறும் பல நிறுவனங்களின் காட்சி கூடங்களும் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்படி விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரியார் திருமதி சிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ கலந்து கொள்ள உள்ளார். இந் நிகழ்வுகளின் போது பெளத்த இந்து, இஸ்லாமிய பாரம்பரிய கலை கலாசார அடிப்படைகளிலான பல்வேறு நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட உள்ளதோடு இவற்றில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவியரும் பங்கேற்பார்கள் எனவும் இது தொடர்பாக கண்டி செயலகத்தில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]