ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
Tuesday, August 12, 2014

Print

 
வறிய மாணவருடைய பெற்றோரின் உள்ளக் குமுறல் இது!

வறிய மாணவருடைய பெற்றோரின் உள்ளக் குமுறல் இது!

இலங்கையில் இலவசக் கல்வித் திட்டம் திறம்பட முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையைப் போன்று வேறெந்தவொரு நாட்டிலும் மாணவரின் கல்விக்கான இலவச சலுகைகள் கிடையாது.

பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை மாணவருக்கான கல்வியையும் ஏனைய வசதிகளையும் அரசாங்கம் இலவசமாகவே வழக்குவதென்பது சாதாரண காரியமல்ல. இதற்கென அரசாங்கம் பெருந்தொகைப் பணத்தை ஒதுக்குகின்றது.

பல்வேறு திட்டங்களையும் முன் னெடுக்கின்றது.

இவ்வாறிருக்கையில் பாலர் வகுப்பு தொடக்கம் க. பொ. த. உயர்தர வகுப்பு வரையான மாணவர்களை இலக்கு வைத்து தனியார் ரியூஷன் வகுப்புகள் பெருகி வருவது ஆரோக்கியமானதல்ல. மாணவருக்குக் கற்பிப்பதற்காக அரசாங்கம் போதுமான ஆசிரியர்களை நியமித்து அவர்களது மாதாந்த வேதனத்துக்காக பெருந்தொகைப் பணத்தைச் செலவிட்டு வருகிறது.

ஆனாலும் தனியார் ரியூஷன் வகுப்புகள் நாளாந்தம் பெருகுவதற்குக் காரணம் என்ன? அரசாங்க பாடசாலைகளில் கற்பிக்கும் அதே கல்வித் தகைமையுடைய ஆசிரியர்கள்தான் தனியார் ரியூஷன் வகுப்புகளிலும் கற்பிக்கின்றனர். பாடசாலையில் கற்பித்தல் திருப்திகரமாக இருந்தால் மாணவர்கள் தனியார் ரியூட்டரிகளை ஏன் நாட வேண்டும்? பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தான் ரியூஷன் வகுப்புகளையும் நடத்துகின்றனர்.

அவ்வாறானால் ஆசிரியர் ஒருவர் பாடசாலையில் கற்பிப்பதைப் பார்க்கிலும் ரியூஷன் வகுப்பில் சிறப்பாகக் கற்பிக்கின்றாரா? ஆசிரியர் ஒருவரிடமிருந்து முழுமையான கற்பித்தலைப் பெற வேண்டுமாயின் ரியூட்டரிகள்தான் பொருத்தமான இடமா? எனவே பெற்றோரிடம் பண வசதி இல்லாத வறிய மாணவன் முழுமையான கல்வியைப் பெறுவது முடியாத காரியமா?

இவ்வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டியது இன்றைய நிலையில் அவசியம்.

பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களது பெயரைக் குறிப்பிட்டு சுவரொட்டி மூலம் மாணவருக்கு ரியூஷன் அழைப்பு விடுப்பதை வெளிப்படையாகவே காண்கிறோம். அரசின் மாதாந்த வேதனத்தைப் பெற்றுக் கொண்டு வெளிப்படையாகவே மாணவரிடம் கல்விக்காக பெருந்தொகைப் பணத்தை வசூலிப்பது ஆரோக்கியமும் நியாயமும் அல்ல.

வறிய மாணவர்களின் நிலைமையைக் கருத்திற்கொண்டு இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண வேண்டும். இது பெற்றோரின் உள்ளக் குமுறல்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]