ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

ஐ. தே. க. சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கட்சியிலிருந்து விலக முடிவு

பெரோஸா முஸம்மிலுக்கு வேட்புமனு மறுப்பு விவகாரம்

ஐ. தே. க. சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கட்சியிலிருந்து விலக முடிவு

பெரோஸா முஸம்மிலுக்கு வேட்புமனு வழங்காமை தொடர்பாக ஐ. தே. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் பதவிகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.

இதனால் கட்சியின் கொழும்பு மாவட்ட தேர்தல் பணிகள் ஆரம்பத்திலேயே சீர்குலைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெரோஸா முஸம்மில் ஐ. தே. கட்சிக்காக மூன்று தசாப்தங்கள் சேவையாற்றியவர். உறவுமுறை இங்கு கருத்திற் கொள்ளப்படவில்ல¨.

அவரின் சேவைக்காக அவருக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்க வேண்டுமென ஐ. தே. க. அக்கிராசனரும், தலைமைச்சபை உறுப்பினருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார். நியமனம் வழங்கப் படா மையினால் அக்கிராசனர் பதவியிலிருந்தும், தலைமைத்துவச் சபையிலிருந்தும் ராஜினாமா செய்ய பீர் ஹாஷிம் தீர்மானித்துள்ளதாக சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமது மனைவிக்கு நியமனப் பத்திரம் தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கா மையினால் விரக்தி அடைந்துள்ள கொழும்பு மேயரும், ஐ. தே. க. செயற் குழுவிலிருந்து ராஜினாமாச் செய்யத் தயாராக இருப்பதாக இதே வட்டாரங்கள் தெரிவித்தன. பெரோஸா முஸம்மிலுக்கு நியமனம் வழங்கப்படா விட்டால் தான் வேட்புமனு அட்டவணையில் கைச்சாத்திடுவதில்லை யென ஐ. தே. க. பொதுச் செயலர் திஸ்ஸ அத்தநாயக்காவும் இதற்கு முன்னர் ஆதரவாளர்களிடம் கூறி இருந்ததாக இதே வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய கொழும்பு ஐ. தே. க. முகாமையாளர் பீ. எம். சீ. ஞானசேன இருபது வருட காலமாகத் தாம் வகித்த பதவியிலிருந்து நேற்று ராஜினாம செய்து ராஜினாமா கடிதத்தை எதிர்க் கட்சித் தலைவருக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேட்புமனு நெருக்கடி நிலைமையை எதிர்கொள்ள இயலாமல் எதிர்க் கட்சித் தலைவர் திடீரென இந்தியா சென்று பல்வேறு விகாரைகளில் பூஜை நடத்தி வருவதாக சிறிகொத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன்னரும் மத்திய மாகாண சபைக்கு வேட்புமனு தயாரிக்கும் போது வேட்புமனுச் சபையின் எதிர்ப்புக்கு மத்தியில் ஆசாத் சாலிக்கு வேட்புமனு நியமனம் வழங்க ரணில் விக்கிரமசிங்ஹ ஏகமனதாக தீர்மானித்தார்.

ஆனால் மேல் மாகாண சபை வேட்புமனு தயாரிப்பில் அவர் அந்த நிலையை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மைத்திரி குணரத்ன, ஷிரான் லக்திலக்க ஆகியோர் ரணிலுக்கு எதிராக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்து வருவதாகவும் இந்த வட்டாரங்கள் தொடர்ந்து தெரிவித்துள்ளன. (எப். எம்.)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி