ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

போதைப் பொருளற்ற சமூகத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத் திட்டம் இன்று வெலிகந்தையில் ஆரம்பம்

போதைப் பொருளற்ற சமூகத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத் திட்டம் இன்று வெலிகந்தையில் ஆரம்பம்

அமைச்சர் மைத்திரிபால இன்றைய நிகழ்வில் அதிதி

போதைப் பொருள் பாவனையற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய வேலைத் திட்டம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பொலன்னறுவை, வெலிகந்தைவில் இன்று 10ம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் பாவனையற்ற தேசமாக இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனையின் பேரில் 2014ம் ஆண்டு போதைப் பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான வருடமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஜனாதிபதி அவர்கள் இத்திட்டத்திற்கென விசேட கமிட்டியொன்றையும் நியமித்துள்ளார். இதற்கேற்பவே இது தொடர்பான தேசிய வேலைத் திட்டம் சுகாதார அமைச்சரின் தலைமையில் வெலிக்கந்தையில் இன்று ஆரம்பிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுக் கூறினார்.

இந்நிகழ்வில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், அரசாங்க அதிகாரிகள் உட்பட பெருந்தொகையான பொது மக்களும் பங்குபற்றுவர் எனவும் அவர் குறிப்பிட்டார். இத்தேசிய வேலைத் திட்டம் தொடர்பாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகையில்; மது மற்றும் போதைப்பொருள் பாவனை காரணமாக எமது இளம் பராயத்தினர் பெரும் பாதிப்புக்கு முகம் கொடுத்துள்ளனர். அவர்களை அவற்றிலிருந்து விடுவித்து நற்பண்புகள் நிறைந்த சமூகத்தினராகக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே இத்தேசிய வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று போதைப்பொருட்கள், வெவ்வேறு பெயர்களில் காணப்படுகின்றன. அவற்றில் பாபுல், பீடா, பான்பராக் மாவா போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை வெளி நாடுகளிலிருந்து இங்கு கொண்டு வரப்படுகின்றன. அதே நேரம் சில நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துப் பொருட்களும் போதைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை எமது இளம் சந்ததியினரை இலக்கு வைத்து சூட்சுமமான முறையில் பாடசாலைகளுக்கு அருகிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.

அதன் காரணத்தினால் தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் குறித்தும் பாடசாலையைச் சூழ விற்பனை செய்யப்படும் பொருட்கள் குறித்தும் தீவிர கவனம் செலுத்த வேண்டிய ஒவ்வொரு பெற்றோரினதும் பொறுப்பாகும். அது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் போதைப்பொருள் பாவனையற்ற இலங்கையை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கான பாரிய பங்களிப்பாக அமையும் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி