ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

திரைப்படப் பாடல்களில் உழைப்பாளிகள்

திரைப்படப் பாடல்களில் உழைப்பாளிகள்

உண்மையில் இந்த சமூகத்தில் படைப்பாளிகள் ஆளும் வர்க்கங்களின் நலனுக்காகவே பணியிலமர்த்தப்பட்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட படைப்பாளிகளைத்தான் பெரும்பாலானவெகு சன ஊடகங்கள் வாய்ப்பளித்துப் பயன்படுத்திக் கொள்ளும் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல தான். இந்த நிபந்தனைகளையெல்லாம் மீறித்தான் உழைப்பவர்களின் குரல் மிகத்துல்லியமாக இல்லா விட்டாலும் உண்மைக்கு மிக அருகில் வந்துசென்றிருப்பதை நாம்மால் உணர்ந்து ரசிக்கவும் போற்றவும் முடிகிறது.

இதிலும் விதிவிலக்க உண்டு. உதாரணம், பட்டுக்கோட்டையார். அவர் மட்டுமே தன்னைத் தொழிலாளிவர்க்கத்தின் கவிஞனென அறிவித்துக் கொண்டு எழுதியவர். அதனாலும் தமிழ் சினிமா பயனடையத்தான் செய்தது, அதே நேரத்தில் தொழிலாளி வர்க்கமும்.

விடுதலைப் போராட்ட காலத்திலேயே மகா கவி பாரதி இப்படி எழுதிவிட்டான்.

இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே

யந்திரங்கள் வகுத்திடுவீரே

கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே

கடலில் மூழ்கி நன்முத்தெடுப்பீரே

அரும்பு வேர்வை உதிர்த்துப் புவிமேல்

ஆயிரந்தொழில் செய்திடுவீரே

பெரும்புகழ் நுமக்கே யிசைக்கின்றேன்

பிரம்ம தேவன் கலையிங்கே நீரே!

உண்மையில் உழைப்போரே படைப்பாளராக இருப்பதால் பிரம தேவன் எனும் பெயர் பொருத்த முடையதுதானே!

பாரதியை அடியொற்றியும் அவரின் தோளில் அமர்ந்தும் இன்னமும் பார்வையை அகல விரிக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன் இப்படி.

சித்திரச் சோலைகளே உமை நன்கு

திருத்த இப்பாரினிலே முன்னர்

எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ

உங்கள் வேரினிலே?

இப்படித் தொடங்கி,

தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு சாட்சியும் நீரன்றோ? - பசி

தீருமென்றால் உயிர் போகுமெனச் சொல்லும் செல்வர்கள் நீதி நன்றோ?

என்று கோபமாகக் கேட்கிறார்.

பாவேந்தரின் இந்தப் பாடலைத் தமிழ் சினிமா பயன்படுத்திக் கொண்டது. அதனால் இப்பாடல் மக்களிடையே பரவியது.

மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே - பசி

வந்திடக் காரணம் என்ன மச்சான்?

- எனும் காதலியின் நியாயமான கேள்விக்கு காதலன் இப்படி பதிலளிக்கிறான்.

அவன் தேடிய செல்வங்கள் வேறயிடத்தினில்

சேர்ந்ததினால் வந்த தொல்லையடி

- பட்டுக்கோட்டையாரின் இந்தத் தெளிவை நாம்

புரிந்துகொள்ள முடிகிறது

“இலக்கியத்திற்கும் கலைக்கும் மூலப் பொருள்களின் சுரங்க மலைபோல உதவு வது மக்களின் வாழ்க்கையாகும்!” - என்றார் மாவோ. அத்தகைய பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் துயரங்கள் மலிந்திருக்கிற இந்த சமூக அமைப்பில் அவற்றைப் பதிவு செய்து, மாற்றத் தைக் கோருகிற பல பாடல்கள் இன்னுமிருக்கின்றன. இதோ ஒன்று:

கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி

கவனம் ஒருநாள் திரும்பும்- அதில்

நல்லவர் வாழும் இனிய சமுதாயம்

நிச்சயம் ஒருநாள் அரும்பும்

சமுதாய மாற்றத்திற்குத் தலைமை தாங்குவதற்கான தகுதி தொழிலாளிக்குத்தான் உண்டு என்பதை இப்பாடல் கோடிகாட்டுகிறதல்லவா?

தருமத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் - என்றான் பாரதி. இங்கே அந்தச் சிந்தனை வேறுவிதத்தில்.. உருசில பேர்கள் ஒருசில நாட்கள் உண்மையின் கண்களை மறைத்துவைப்பார் பொறுத்தவரெல்லாம் பொங்கியெழுந்தே மூடிய கண்களைத் திறந்துவைப்பார். (வாலி, படம் தாழம்பூ) - என்கிறது.

உழைத்து வாழ வேண்டும் - பிறர்

உழைப்பில் வாழ்ந்திடாதே!

ன்று சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அறிவுறுத்துகிறது ஒரு பாடல். அதேபோல, சுரண்டு பவனை இப்படித் தயவுதாட்சண்யமின்றி இன்னொரு பாடல் சாடுகிறது.

ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன்

உலகத்தில் கோழைகள் தலைவன்

உழைப்பவன் உயிரோடு மட்டும் இருந்து, தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தால் அதனால் சிலருக்கு லாபம். ஆனால், அந்த உழைப்பாளியிடம் செல்வம் ஏதும் மிஞ்சி விடக்கூடாது என்பதுதான் சுரண்டலின் அடிப்படை இலக்கணம். தொழிலாளிகள் இதனை உணர்ந்துவிடக் கூடாதென்பதற்காகவே பல்வேறு தத்துவங்களும் நீதிநெறிகளும் கற்பிக்கப்பட்டன.

ஒரு நீண்ட நெடிய வரலாற்றையுடைய இந்த வர்க்க முரணையும் சமுதாயத்தில் இதனால் எழுந்த எல்லாவகைச் சிந்தனை மரபுகளையும் நமது தமிழ் சினிமா தன்னாலியன்ற அளவு பதிவு செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இதை இன்னமும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி