ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 04, 2014

Print

 
குகநாதன் ‘சுடரும் சூறாவளியும்’ கதாநாயகி ஜெயாவை காதலித்து மணந்தார்பீ

குகநாதன் ‘சுடரும் சூறாவளியும்’ கதாநாயகி ஜெயாவை காதலித்து மணந்தார்பீ

‘சுடரும் சூறாவளியும்’ படத்தின் மூலம் பட அதிபராக உயர்ந்த வி. சி. குகநாதன், அந்தப் படத்தின் கதாநாயகி ஜெயாவை காதலித்து மணந்தார்.

வி. சி. குகநாதன் எழுதிய கதைகள் படங்களாக வெளிவந்து கொண்டு இருந்தன. ஆனால் அவரது பெயர் வெளிவரவில்லை.

இந்த நிலையில் எம். ஜி. ஆர். திடீரென ஒருநாள் குகநாதனை அழைத்து, ‘எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா?’ என்று கேட்டார்.

சினிமாவை விரும்புவதாக குகநாதன் கூற, ‘சினிமாவில் எந்தத்துறை உங்களுக்குப் பிடிக்கும்?’ என்று கேட்டார் எம். ஜி. ஆர்.

‘கதை- வசனம் எழுதுவது’ என்று பதிலளித்தார். குகநாதன் ‘அப்படியானால் ஒரு கதை சொல்லுங்கள்’ என்றார் எம். ஜி. ஆர்.

குகநாதன் ஒரு கதையைச் சொன்னார்.

கதையை உன்னிப்பாக கேட்டார். எம். ஜி. ஆர். கதை அவருக்குப் பிடித்துவிட்டது. ‘கதை பிரமாதம்’ என்று அவர் சொன்ன நேரத்தில் டைரக்டர் சாணக்யா அங்கே வந்தார்.

உடனே எம். ஜி. ஆர். இவர் நன்றாக கதை எழுதுகிறார். உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று அவரிடம் சொன்னார்.

தொடர்ந்து ‘ஜேயார் மூவிஸ்’ தயாரித்த படத்திற்கு குகநாகதனை கதை எழுதும்படி சொன்னார். 1968ம் ஆண்டு குகநாதன் ‘புதிய பூமி’ படத்திற்கு கதை எழுதினார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

டாக்டராக இருக்கும் எம். ஜி. ஆர். கிராமத்திற்கு சென்று ஏழை மக்களுக்கு வைத்தியம் செய்வார். அப்போது அந்தப் பகுதியில் இருக்கும் கொள்ளையனை பிடித்துக் கொடுப்பதுதான் கதை.

(புதிய பூமிக்கு கதை எழுதிய போது குகநாதனுக்கு வயது 18. அப்போது அவர் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். பின்னர் ‘பி காம்’ பட்டம் பெற்றார்)

1971ம் ஆண்டு ‘குமரிக் கோட்டம்’ படத்திற்கு குகநாதன் கதை எழுதினார். அதே சமயம் ஏ. வி. எம். மில் இருந்து குகநாதனுக்கு அழைப்பு வந்தது. அதற்காக ஏ. வி. எம். ஸ்டூடியோவுக்குச் சென்று, மெய்யப்பச் செட்டியாரை சந்தித்தார்.

இதுபற்றி குகநாதன் கூறியதாவது:-

ஏவிஎம்மில் இருந்து அழைப்பு வந்ததும் செட்டியார் முன்பாகப் போய் நின்றேன் என்னைப் பார்த்ததும் ‘சிறிய பையனாக இருக்கிறாயே! என்று கூறினார். என் மீது நம்பக்கை இல்லாமல் ‘ஒரு கதை சொல் பார்ப்போம்’ என்றார்.

(தொடரும்)

குகநாதன் ‘சுடரும் சூறாவளியும்’ கதாநாயகி ஜெயாவை காதலித்து மணந்தார்

(கடந்தவாரத் தொடர்)

தொடர்ந்து 2 மணி நேரம் ஒரு கதையைச் சொன்னேன். ஆனாலும் அவருக்கு சந்தேகம் தீரவில்லை. இன்னொரு கதை சொல்லும் கூறினார். அடுத்ததாக ஒரு கதை சொன்னேன்.

கதையைக் கேட்டு முடித்தவர் ‘போய் வா சொல்லி அனுப்புகிறேன்’ என்றார்.

நான் வீட்டுக்குச் சென்று சாப்பிடத் தொடங்கிய போது மீண்டும் ஏ.வி எம். மில் இருந்து அழைப்பு வந்தது.

ஏ. வி. எம். கதை இலாகாவில் 10 ஆண்டுகளுக்கு மாதச் சம்பளத்தில் வேலை பார்க்க, ஒப்பந்தம் செய்து கொண்டனர். அது மட்டுமல்ல; நான் சொன்ன-2 கதைகளையும் படமாக்க இன்னொரு ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.

அதில் ஒரு கதையை, 1968ம் ஆண்டு என். டி. ராமராவ் நடிக்க ‘சிட்டி செல்லலு’ என்ற பெயரில் தெலுங்கில் படமாக எடுத்தனர். படத்திற்கு கதை, திரைக்கதையை நானே எழுதினேன். அதன் பின்னர் தெலுங்கப்பட வாய்புகள் எனக்கு குவிந்தன.

79 தெலுங்குப் படங்களுக்கு கதை எழுதினேன். அதில் 30 படங்களை டைரக்ட் செய்தேன். ஒரு படத்தைத் தவிர மற்றவை எல்லாம் வெற்றிப்படங்கள்.

இவ்வாறு குகநாதன் கூறினார்.

கிருஷ்ணன்0 பஞ்சு இயக்கத்தில் சிவாஜி நடித்த ‘உயர்ந்த மனிதன்’ படத்திற்கு சில காட்சிகளுக்கு குகநாதன் வசனம் எழுதினார். அப்போது குகநாதனின் எழுத்து சிவாஜியைக் கவர்ந்தது. அதனால், ‘தங்கைக்காக’ படத்திற்கு கதை வசனம் எழுத குகநாதனுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்.

பின்னர் 1970ம்ஆண்டு ‘எங்க மாமா’ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதினார். ஏ. வி. எம். தயாரித்த ‘அன்னையும் பிதாவும்’ இந்தியில் எடுக்கப்பட்ட ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்களுக்கு திரைக்கதை- வசனம் எழுதினார்.

இந்த நிலையில் ஏவி. மெய்யப்ப செட்டியார். வி. சி. குகநாதனை சொந்தமாகப் படம் தயாரிக்கும்படி கூறினார்.

அதன் பேரில், ஏவி. எம். சித்ரமாலா கம்பைன்ஸ் என்ற பேனரில் 1970ம் ஆண்டு ‘சுடரும் சூறாவளி’யும் என்ற படத்தை தயாரித்தார். படத்திற்கான கதை, திரைக்கதை, வசனத்தையும் குகநாதன் எழுதினார். பிரபல கன்னட டைரக்டர் புட்டண்ணா கனகல் இந்தப் படத்தை டைரக்ட் செய்தார். படத்தில் ஜெமினி கணேசன், முத்துராமன் ஆகியோர் நடித்தனர்

எஸ். ஐ. டீ. ஏ. கல்லூரியில் ‘பி. சி. படித்து வந்த மாணவி ஜெயாவை, கதாநாயகியாக வி. சி. குகநாதன் அறிமுகப்படுத்தினார்.

ஜெயாவுக்கும், குகநாதனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

படம் வளர வளர குகநாதனுக்கும், ஜெயாவுக்கும் இடையே காதலும் வளர்ந்தது. இவர்களது காதலுக்கு இருவீட்டுப் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

படம் வெளிவந்த நேரத்தில், குகநாதன், ஜெயாவை திருவேற்காடு குருமாரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து வாழ்க்கை துணைவியாக ஏற்றார்.

திருமணத்திற்குப் பிறகும் ஜெயா படங்களில் நடித்தார். ‘ராஜபார்ட் ரங்கதுரை’யில், சிவாஜியின் தங்கையாகவும், ‘பெத்தமனம் பித்து’ படத்தில் கதாநாயகியாகவும், ‘கனிமுத்துப்பாப்பா’ ‘தெய்வம்’, ‘திருவருள்’ ‘ஆறிலிருந்து 60 வரை’ ‘புவனா ஒரு கேள்விகுறி’ ‘காசி யாத்திரை’ ‘தெய்வக் குழந்தைகள்’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார்.

1973ம் ஆண்டு ‘நாம் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம்’ என்று குகநாதனிடம் சிவாஜி கூறினார். அதன்படி ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படத்தை குகநாதன் தயாரித்தார். கதையையும் அவரே எழுதினார்.

நாடக நடிகராக இருக்கும் சிவாஜி தனது தம்பியை பட்டணத்தில் படிக்க வைப்பார். ஆனால் சிவாஜியின் தம்பியோ, தான் ஒரு பணக்காரன் என்று பொய் சொல்லி, ஒரு பெண்ணை மணந்து கொள்வதுதான் கதை படம். மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன் பின்னர் விக்டோரியா மூவிஸ் என்ற பேனரில், ‘கனிமுத்து பாப்பா’ என்ற படத்தை தயாரித்தார். படத்திற்கு கதை வசனத்தை குகநாதனே எழுதினார். இந்தப் படத்தின் மூலம் எஸ். பி. முத்துராமன் டைரக்டர் ஆனார்.

தொடர்ந்து குகநாதன் கதை- வசனம் எழுதிய ‘பெத்த மனம் பித்து’ ‘காசி யாத்திரை’ ‘அன்புத் தங்கை’ ‘நல்ல பெண்மணி’ ‘தெய்வக் குழந்தைகள்’ ஆகிய படங்களை எஸ். பி. முத்துராமன் டைரக் செய்தார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]