ஹிஜ்ரி வருடம் 1434 முஹர்ரம் மாதம் பிறை 15
விஜய வருடம் கார்த்திகை மாதம் 03ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, NOVEMBER , 19, 2013
வரு. 81 இல. 275
 

ஆணாகவும் பெண்ணாகவும் புதுமையான இரட்டை வேடங்களில் அசத்திய மந்திரிகுமாரி நாயகி

ஆணாகவும் பெண்ணாகவும் புதுமையான இரட்டை வேடங்களில் அசத்திய மந்திரிகுமாரி நாயகி

மாதுரிதேவி

‘kந்திரிகுமாரி’ மூலம் பெரும் புகழ் பெற்றவர் மாதுரிதேவி. மொடர்ன் தியேட்டர்ஸ், ஜுபிடர் தயாரித்த வெற்றிப் படங்களில் நடித்தவர்.

1927 ஓகஸ்ட் 10ல் சென்னையில் பிறந்த மாதுரிதேவியின் இயற்பெயர்? கிளாரா, தந்தை சூசை, முதலியார் தாயார் மனோ ரஞ்சிதம்.

பெரும்பாலான நடிகைகள், திரை உலகில் புகழ் பெற்ற பிறகுதான் திருமணம் செய்து கொள்வார்கள். அதன்பின் பட உலகை விட்டு ஒதுங்கி விடுவார்கள். அல்லது அம்மா வேடத்தில் நடிப்பார்கள்.

மாதுரிதேவி, திருமணமான பிறகுதான் திரை உலகில் பெரும் புகழ் பெற்றார். கணவர் பெயர் முகர்ஜி. அவர் ஒரு வங்காளி. இருவரும் காதலித்து, திருமணம் செய்து கொண்டர்.

1948 இல் ஜுபிடர் பிக்சர்சார் ‘மோகினி’ என்ற படத்தை தயாரித்தனர். இதில் எம். ஜி. ஆர்., வி. என். ஜானகி, டி. எஸ். பாலையா, மாதுரிதேவி ஆகியோர் நடித்தனர். பாலையாவுக்கு ஜோடியாக மாதுரிதேவி நடித்தார்.

படம் பெரிய வெற்றி பெற்றது. மாதிரிதேவியும் புகழ் பெற்றார்.

1949 ல் ஜூபிடர் பிக்சர்ஸ்சார் ‘கன்னியின் காதலி’ என்ற படத்தை தயாரித்தனர். ‘சந்திரலேகா’வின் ஒளிப்பதிவாளரான கெமரா மேதை’ கே. ராம்நாத், ஜெமினியை விட்டு வெளிவந்து, ‘கன்னியின் காதலி’யை டைரக்ட் செய்தார்.

ஷேக்ஸ்பியரின் கதை ஒன்றைத் தழுவி, இப்படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தில், மாதுரிதேவி இரட்டை வேடத்தில் நடித்தார். பொதுவாக இரட்டை வேடம் என்றால், தாயும் மகளுமாகவோ, அக்கா, தங்கையாகவோ நடிப்பார்கள். ‘கன்னியின் காதலி’யில் ஒரு புதுமை மாதுரிதேவி ஆணாகவும், பெண்ணாகவும் இரட்டை வேடத்தில் நடித்தார்.

பெண்ணாக உள்ள மாதுரிதேவி, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஆண் வேடம் போடுவார். அவரை பெண் என்று அறியாமல் அஞ்சலிதேவி காதலிப்பார்!

(அதனால்தான் படத்துக்கு ‘கன்னியின் காதலி’ என்ற பெயர் சூட்டப்பட்டது.)

உண்மையை வெளிப்படுத்த முடியாமல் மாதுரிதேவி தவிப்பார். கடைசியில் ஒரு தேசத்து இளவரசன் (ஆண் மாதுரிதேவி) வருவார். அவரை தன் காதலன் என்று எண்ணி, மாதுரிதேவி அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வார்.

படம் வெற்றி பெற்றது. மாதுரிதேவியின் இரட்டை வேட நடிப்பை அனைவரும் பாராட்டினர்.

1950 பொங்கல் அன்று வெளிவந்த ‘பொன்முடி’ படம், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. இது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய கதை.

நரம்சிம்மபாரதியும், மாதுரிதேவியும் இணைந்து நடித்தனர். எல்லிஸ் ஆர். டங்கன் டைரக்ட் செய்த இப்படம், வெற்றிப்படமே.

இதே ஆண்டு கடைசியில் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் ‘மந்திரிகுமாரி’ மெகாஹிட் படமாகும்.

கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுத, டி. ஆர். சுந்தரம் டைரக்ட் செய்த படம்.

எம். ஜி. ஆர்., மாதுரிதேவி, ஜி. சகுந்தலா, எஸ். ஏ. நடராஜன், எம். என். நம்பியார் ஆகியோர் நடித்தனர்.

‘கொலை செய்வது ஒரு கலை’ என்று கர்ஜனை செய்யும் வில்லனாக எஸ். ஏ. நடராஜன் நடித்தார். அவருடைய சுயரூபம் தெரியாமல் காதலித்து மணந்து கொள்ளும் மந்திரிகுமாரியாக மாதுரிதேவி நடித்தார்.

‘வாராய்... நீ வாராய்’ என்று பாடியபடி, மாதுரிதேவியை மலை உச்சிக்கு எஸ். ஏ. நடராஜன் அழைத்துச் சென்று கீழே தள்ளிவிட முயற்சி செய்வார். ‘சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வரவேண்டும்’ என்று வரம் கேட்கும் மாதுரிதேவி, அப்படி சுற்றி வரும்போது நடராஜனை கீழே தள்ளி கொன்று விடுவார்!

‘வாராய்... நீ வாராய்’ பாடலும், அந்தக் காட்சியும், அரை நூற்றாண்டுக்குப் பின் இன்னமும் ரசிகர்கள் நினைவில் நிற்கின்றன.

பின்னர் 1951 ல் வெளிவந்த ஜூபிடரின் ‘மர்மயோகி’யில், எம். ஜி. ஆர். அஞ்சலிதேவி ஆகியோருடன் இணைந்து நடித்தார் மாதுரிதேவி. அதே ஆண்டில் மொடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘தேவகி’ படத்தில், வி. என். ஜானகிக்கு தங்கையாக நடித்தார். இப்படத்தில் வி. என். ஜானகிக்கு ஜோடி என். என். கண்ணப்பா, மாதுரிதேவியின் ஜோடி எஸ். பாலசந்தா.

இந்தக் காலகட்டத்தில், ‘நல்லதங்காள்’, ‘நல்ல தங்கை’, ‘புதுவாழ்வு’ உட்பட பல படங்களில் மாதுரிதேவி நடித்தார். இவற்றில் ‘நல்ல தங்காள்’ முதலில் சுமாராக ஓடினாலும், மறு வெளியீட்டில் சக்கை போடு போட்டது. இதில் மனோகர், ஏ. பி. நாகராஜன், ஜி. வரலட்சுமி ஆகியோருடன் மாதுரிதேவி நடித்தார். நல்ல தங்காளை (ஜி. வரலட்சுமி) கொடுமைப்படுத்தும் அண்ணி வேடத்தில் மாதுரிதேவி பிரமாதமாக நடித்தார்.

‘புதுவாழ்வு’, எம். கே. தியாகராஜ பாகவதரின் சொந்தப் படம். அதில் லலிதாவும், மாதுரிதேவியும் இரண்டு கதாநாயகிகளாக நடித்தனர்.

1959 ல் ‘மாலா ஒரு மங்கல விளக்கு’ என்ற பெயரில் சொந்தப் படம் எடுத்தார், மாதுரிதேவி. அவர் கணவர் முகர்ஜி, கதை எழுதியதுடன் டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றார். நாகையா, என். என். கண்ணப்பா ஆகியோருடன் மாதுரிதேவி நடித்தார். படம் தோல்வியைத் தழுவியது. மாதுரிதேவிக்கு பெரிய நஷ்டம்.

பல படங்களில் நடித்து புகழ் பெற்று, நிறைய சம்பாதித்த நட்சத்திரங்களையும், சொந்தப் படங்கள் வீழ்த்தி விடுகின்றன. அதற்கு மாதுரிதேவியும் விலக்கல்ல.

எனினும், அம்மா வேடங்களில் நடிக்க அவர் விரும்பவில்லை. பட உலகை விட்டு விலகினார். பட உலகில் இருந்து ஒதுங்கி வாழ்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன் காலமானார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி