ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,22, 2013

Print

 
காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் மகான் சேகு முஸ்தபா (ரஹ்)

காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் மகான் சேகு முஸ்தபா (ரஹ்)

காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் மாகான் சேகு முஸ்தபா (ரஹ்) அவர்களின் ஞாபகார்த்த மஜ்லிஸ் 22-10-2013 பேருவளை எலந்தகொட சேஹ் முஸ்தபா பள்ளிவாசலில் சங்கைக் குரிய அஷ்ஷெய்ஹ் அஹம்மத் பின் முஹம்மத் ஆலிம் தலைமையில் நடைபெற்றதை முன்னிட்டு இக் கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

பேருவளையில் பல ஆத்மிக ஞானிகள் வாழ்ந்து மக்களை தரீக்காக்களின் நேரான வழியூடாக வாழ வழிகாட்டி மறைந்தார்கள். அந்த வரிசையில் பேருவளை ஆதம் மரைக்காரின் புதல்வரான மாகான் சேகு முஸ்தபா வலியுல்லாஹ் பிறந்தார். சிறு வயதிலேயே மார்க்க விடயங்களில் ஆர்வமாகவும், நல்லொழுக்கப் பண்பாடுகளுடனும் வாழ்ந்த அன்னார் இந்த நாட்டின் சமய வரலாற்றில் ஓர் உயர்ந்த ஸ்தானத்தைப் பிடித்துக் கொண்டார்.

ஹிஜ்ரி 1301ல் ஜமாத்துல் ஆகிர் மாதம் பிறை 27ல் அதிகாலை சுபஹ் தொழுகையை முடித்து அதே இருப்பில் பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புஹாரித் தக்கியாவில் இருந்த சமயம் இறை தூதர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் கனவு உத்தரவுப் படி தென் அரேபிய யெமன் நாட்டைச் சேர்ந்த சங்கைக்குரிய நாயகம் சேகு அப்துர் ரஹ்மான் இப்னு ஹஸன் இப்னு பாரி அஹ்தலி மெளலானா (ரஹ்) என்ற பெரியார் புனித ஸஹீஹுல் புஹாரி கிரந்தத்தை தனது கையில் எடுத்து ஆரம்பப் பகுதியை பாராயணம் செய்தார். தனது வலப் பக்கத்தில் அமர்ந்திருந்த அரபுத் தமிழ்யுக தந்தை என போற்றப்படும் மாகான் சங்கைக்குரிய சேகு முஸ்தபா வலியுல்லாஹ்விடம் புனித ஸஹீஹுல் புஹாரிக்கிரந்தத்தை கையளித்து இதனை ஒவ்வொரு வருடமும் (வெள்ளிக்கிழமை தவிர) 30 நாட்கள் பாராயணம் செய்து வரும்படி பணித்தார்.

அன்னார் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அரபு இலக்கண, இலக்கிய, பிக்ஹு சட்ட திட்டங்கள் போன்ற இஸ்லாமிய மத அறிவியல் துறையில் மிகவும் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார். இந்தியாவில் உள்ள காயல்பட்டணத்தில் இத்துறையில் அறிவு பெற்று நாடு திரும்பி பேருவளை மாளிகாச்சேனை பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா தலைமை ஸ்தானமாகவும், ஆய்வு கூடமாகவும் அமைத்து இஸ்லாமிய பணிபுரியும் காலத்தில் சங்கைக்குரிய முபாரக் மெளலானா என்ற பெரியாரின் சகவாசம் கிடைத்தது. சங்கைக்குரிய சேகு முஸ்தபா (ரஹ்) அவர்களின் சேவைக்கு இவர்கள் துணை புரிந்து சிறிது காலத் தில் முபாரக் மெளலானா தென்னிலங்கை யில் உள்ள காலி நகரில் இறையடி சேரவே மாளிகாச்சேனை புஹாரித் தக்கியாவில் பணி செய்யும் நல்ல பாக்கியமும் அன்னாருக்கு கிடைத்தது.

மாகான் சேகு முஸ்தபா (ரஹ்) அவர்கள் அறிமுகப்படுத்திய காதிரியத்துன் நபவிய்யா எனும் தரீக்கா ஆன்மீக வழி இன்று 18 ஊர்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. பல அரபுக் கல்லூரிகளும், மத்ரஸாக்களும் சிறப்பாக இயங்குவதுடன் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளுக்கு உயிரூட்டியும் வருவது குறிப்பிடத்தக்கது.

மாகான் சேகு முஸ்தபா (ரஹ்) அவர்கள் மெய்ஞானியாகவும், புலவ ராகவும் திகழ்ந்தார். அன்னாரினால் இயற்றப்பட்ட மீஸான் மாலை அரபுத் தமிழ் கவிதை புகழ்பெற்றுள்ளது.

அன்னார் பல இஸ்லாமிய பத்வா நூல்கள், இஸ்லாமிய சட்ட திட்டங்கள், முனாஜாத்துக்கள் போன்றவற்றை அரபியிலும், அரபுத் தமிழிலும் வெளியிட்டார்கள். அஹ்காமுல் இகம் என்ற பெயரில் அரபுத் தமிழ் அச்சுக் கூட்டத்தை நிறுவி அதன் மூலம் அரபுத் தமிழில் பல ஆக்கங்களை வெளியிட்டார்.

மேலும் புனித அல்குர்ஆனின் பல அத்தியாயங்களை அரபுத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இவ்வாறு பல வகையிலும் மாபெரும் இஸ்லாமியத் தொண்டு புரிந்த சேகு முஸ்தபா (ரஹ்) அவர்கள் புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்ற போது மக்காவில் வபாத்தாகினார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். இப்பெரியாரது ஜனாஸா கதீஜா நாயகி அவர்களின் சமாதிக்கு மேல் பக்கமாக நல்லடக்கம் செய்யப்பட்டது. அரபி அல்லாத ஒருவர் இப் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டமையானது அவரின் நற் கருமங்களுக்கு கிடைத்த பாக்கியமாகும்.

மக்கா, மதீனா போன்ற பகுதிகளில் மகான் சேகு முஸ்தபா (ரஹ்) அவர்களின் சன்மார்க்க அறிவுத்திறன் பலராலும் போற்றிப் புகழப்பட்டது. இலங்கையிலும் இப்பெரியாருக்கு பெருமதிப்பும் கண்ணியமும் வழங்கப்பட்டது.

18ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட பேருவளை மாளிகாச்சேனை புஹாரித் தக்கியாவில் மர்ஹும் சேகு முஸ்தபா (ரஹ்) அவர்கள் புனித ஸஹீஹுல் புஹாரி மஜ்லிஸை ஹிஜ்ரி 1301 முதல் ஹிஜ்ரி 1304 வரை நடத்தினார்கள். இப் புனித மஜ்லிஸ் இன்று வரை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

மகான் சேகு முஸ்தபா (ரஹ்) அவர்களின் ஞாபகார்த்தத்தின மஜ்லிஸ் வைபவங்கள் நாடு முழுவதிலும் 18 ஊர்களில் நடத்தப்பட்டன.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]