ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பொது மக்கள் பாவனைக்கு இன்று திறப்பு

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பொது மக்கள் பாவனைக்கு இன்று திறப்பு

வாகனங்களுக்கு அனுமதியில்லை; 27ம் திகதி ஜனாதிபதியினால் திறப்பு

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இன்று முதல் மூன்று தினங்களுக்கு பொது மக்கள் பாவனைக்காக திறக்கப்படுவதாக துறைமுகங்கள் நெடுஞ்சாலை திட்ட அமைச்சர் நிர்மல கொதலாவல தெரிவித்தார். இதில் செல்வதற்கு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் கால் நடையாக வந்து பார்க்கவே அனுமதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் 27 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இன்று முதல் 24 ஆம் திகதி வரை கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் சைக்கிளோட்டப் போட்டி, யானை ஓட்டப் போட்டி, சித்திரப் போட்டி உட்பட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இறுதி நாளான 24 ஆம் திகதி துறைமுக நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றின் ஊழியர்கள் பங்கேற்கும் பாதயாத்திரை யொன்றும் இடம்பெறவுள்ளது.

பஸ்சேவை

இதேவேளை, 27ஆம் திகதி முதல் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் அதி சொகுசு, இ. போ. ச. சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள தாக போக்குவரத்து அமைச்சு கூறியது. முதலில் 12 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. தனியார் சொகுசு பஸ்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்பட வில்லை.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் கார், ஜீப் மற்றும் சிறிய ரக வேன்களிடம் 300 ரூபா கட்டணம் அறவிடப்பட உள்ளதோடு லொறி, பஸ்கள் என்பவற்றிடம் 600 ரூபா கட்டணம் அறவிடப்பட உள்ளதாக அறிவிக்கப் படுகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி