ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,22, 2013

Print

 
தாழமுக்கம் நகர்ந்தது: மழையும் குறைந்தது

தாழமுக்கம் நகர்ந்தது: மழையும் குறைந்தது

மாலை வேளைகளில் மழை இடி, மின்னல் தாக்க எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கம் இந்தியாவின் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்திருப்பதனால் காலை வேளையில் பெய்யும் மழையினளவு ஓரிரு தினங்களில் முடிவுக்கு வருமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும், உருவாகியுள்ள இடைப் பருவப் பெயர்ச்சிக் காலநிலை காரணமாக தொடர்ந்தும் சில தினங்களுக்கு மாலை அல்லது இரவு வேளைகளில் மழையுடன்கூடிய காலநிலை காணப்படுமெனவும் திணைக்களத்தின் கடமை நேர அதிகாரி கூறினார்.

இக்காலப்பகுதியில் நாடு முழுவதும் மின்னல் தாக்கம் கடுமையாகவிருக்கும். ஆகையினால், பொதுமக்கள் இது குறித்து அவதானமாக இருக்கவேண்டு மெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

மாலை அல்லது இரவு வேளைகளில் நாட்டிலும் கடலிலும் அதிக மழை மற்றும் காற்று காணப்படும். மன்னாரிலிருந்து காலியூடாக மாத்தறை வரையிலும் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையான பிரதேசத்திலும் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.

கடலில் தென்மேற்கு திசையில் வீசும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் ஆகும். இது மணித்தியால த்திற்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் அதேசமயம் இடி, மின்னலுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாமெனவும் வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

மலையகத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழை நேற்று குறைவடைந்திருந்தது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]