ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

உறங்கிக் கொண்டிருந்த மனைவி பிள்ளைகள் பெற்றோல் ஊற்றி எரிப்பு

உறங்கிக் கொண்டிருந்த மனைவி பிள்ளைகள் பெற்றோல் ஊற்றி எரிப்பு

சந்தேக நபரான கணவன் தப்பியோட்டம்

* 03,08 வயதுடைய சிறுவன், சிறுமிக்கு தீவிர சிகிச்சை

* கல்கிரியாகமவில் சம்பவம்: தாய், மனைவிக்கு எரிகாயம்

ஸாதிக் ஷிஹான், தினகரன் செங்கடகல, தம்புள்ள தினகரன் நிருபர்கள்

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நால்வர் தீ காயங்களுக்குள்ளான நிலையில் மீட்டெடுக்கப்பட்டு தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலேவெல, கல்கிரியாகம கிராமத்தில் நேற்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவரும், அவரது தாய் மற்றும் மூன்று வயது சிறுவன் மற்றும் 8 வயது சிறுமி ஆகிய நால்வரே தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரே பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :-

கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் அவரது இரண்டாவது கணவருக்கும் இடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஆத்திரமுற்ற கணவன் தனது மனைவியும் அவரது தாய் மற்றும் இரு பிள்ளைகளும் கல்கிரியாகம கிராமத்திலுள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் அங்கு அதிகாலை நேரம் சென்று பெற்றோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று அதிகாலை 1.45 மணியளவில் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, கலேவல பொலிஸார் உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து பார்வையிட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டில் நால்வர் தீயில் எரிந்து காயப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர். அவர்களை மீட்டெடுத்த பொலிஸார் உடனடியாக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அந்த வீட்டிலிருந்து அழுகுரல் கேட்டதை அவதானித்த பிரதேசவாசிகள் திரண்டு தீயை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் கல்கிரியாகம பிரதேசத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் இரண்டாவது கணவர் தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபரை தேடிக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கூடுதல் தீ காயங்களுக்குள்ளான இரு பிள்ளைகளும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி க்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி