ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

ஆப்கானின் இறைமை, ஒருமைப்பாட்டை தீர்மானிக்கும் ஜpர்கா மாநாடு நவம்பரில்

ஆப்கானின் இறைமை, ஒருமைப்பாட்டை தீர்மானிக்கும் ஜpர்கா மாநாடு நவம்பரில்

அமெரிக்க படைகள் வெளியேறுவது குறித்து முக்கிய தீர்மானம்

ஆப்கானிஸ்தானில் இன்னும் எஞ்சியுள்ள அமெரிக்கப் படைகளின் எதிர்காலம் குறித்து ஆராய ஜிர்கா மாநாடு கூட்டப்படவுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்க படைகள் தங்குவதற்கு அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இதற்கென விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் சுமார் 3000 பழங்குடி இனத் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தக் கூட்டம் நவம்பர் 18 முதல் 21 ஆம் திகதி வரை தலைநகர் காபுலில் இடம்பெறவுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தை லோயா ஜிர்கா மாநாடு என்பர். ஆப்கானின் பழங்குடி இனத்தவர் இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் இறைமை, ஆளுமை உட்பட முக்கிய தீர்மானங்களை எடுக்குமளவிற்கு சக்தி வாய்ந்த அமைப்பாக லோயா - ஜிர்கா மாநாடு கருதப்படுகிறது. இதுகுறித்து ஆப்கான் ஜனாதிபதி ஹமித் அல் கார்ஸாயி குறிப்பிடுகையில் :-

நாட்டின் தேசிய நலன்மிக்க விடயங்கள் குறித்து தீர்மானிக்க லோயா ஜிர்கா மாநாட்டுக்கு முடியுமென்றார். தலிபான்கள் தலை¨மையிலான அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்ற 2001 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டன.

நேட்டோ படைகள் தலைமையிலான ராணுவ நடவடிக்கையின் பின்னர் தலிபான்கள் தலைமையிலான அரசாங்கம் அகற்றப்பட்டது. பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு ஹமித் கர்ஸாயி தலைமையிலான அரசாங்கம் இரண்டு முறை பதவிக்கு வந்துள்ளது. இதன்பின்னர் நேட்டோ படைகள் ஆப்கானிஸ் தானிலிருந்து படிப்படியாக விலகிக் கொண்டன.

2014 ஆம் ஆண்டுக்குள் நேட்டோ உட்பட அமெரிக்கப் படைகள் முற்றாக விலக்கப்பட வேண்டுமென்று அமெரிக்கா ஆப்கானிஸ்தானிடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. சுமார் 180000 துருப்பினர் ஆரம்ப காலத்தில் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருந்தனர். 2010 ஆம் ஆண்டளவில் படைவிலக்கல் ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் படிப்படியாக படைகள் மீள அழைக்கப்பட்டன. இன்னும் சொற்பளவானவரே எஞ்சியுள்ளனர்.

ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் 2014ற்குள் அனைத்துப் படைகளும் ஆப்கானிஸ் தானிலிருந்து வெளியேற வேண்டும்.

ஆனால் ஆப்கானில் தலிபான்களின் பலத்தையும் போராட்டத்தையும் அடக்குமளவிற்கு அந்நாட்டுப் படைகளின் பலம் இல்லை. இதனால் நேட்டோ படைகளுடன் இணைந்தே ஆப்கானிஸ்தான் படையினர் கடமையாற்றுகின்றனர். அமெரிக்கப் படைகள் முற்றாக வெளியேறினால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும். எனவே சொற்ப தொகையினரை மீண்டும் தங்க ¨வைப்பதா இல்லையா என்பது குறித்து ஆராயவே இந்த லோயா ஜிர்கா மாநாடு கூட்டப்படுகிறது.

தலிபான்களும் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் ஜோன் கெரி சென்ற வாரம் இதுபற்றி பேச ஆப்கான் சென்றிருந்தார். இங்குள்ள படைகளுக்கு விசேட குற்றவியல் விடுபாட்டுரிமையும் வழங்கப் பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி