ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

தெற்கு சூடானில் போராட்டக்காரர்கள் தாக்கியதில் 41 பேர் மரணம்

தெற்கு சூடானில் போராட்டக்காரர்கள் தாக்கியதில் 41 பேர் மரணம்

கடந்த 2011ம் ஆண்டு சூடானில் ஏற்பட்ட ஒரு கொடூரமான உள்நாட்டுக் கலவரத்தாலும், அமெரிக்கத் தலைவர்களின் முயற்சியாலும் தெற்கு சூடான் உதயமானது. ஆயினும் இன்னமும் அங்கு கலவரங்கள் ஓய்ந்தபாடில்லை.

இன வன்முறைகள் நிறைந்து காணப்படும் ஜோங்க்லெய் மாநிலத்தில் பொதுமக்கள் தாக்கப்படுவது தொடர்ந்த வண்ணமே உள்ளது.

நேற்று முன்தினம் இம்மாநிலத்தில் உள்ள முர்லே பழங்குடி இனத்து இளைஞர்கள் உதவியுடன் போராளிகள் தலைவர் டேவிட் யாயாவின் விசுவாசிகள் எனப்படுபவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 41பேர் பலியானதாகவும், 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் அம்மாநிலத்தின் செயல் தலைவரான ஹுசைன் மார் தெரிவித்துள்ளார்.

இவர்களில் பலரின்நிலை கவலைக் கிடமாக உள்ளதாகவும் கூறிய மார், தெற்கு சூடானில் உள்ள ஐ.நா. குழு காயமடைந்தவர்களை மாநிலத் தலைநகரான போரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகத் தெரிவித்தார். மற்றும் சிலர் நாட்டின் தலைநகரான ஜூபாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

போராளிகள் தாங்கள் வைத்திருந்த தானியங்கி ஆயுதங்கள் மூலம் கண்மூடித்தனமாக சுட்டனர் என்றும், ஆயிரக்கணக்கான கால்நடைகளை திருடிச் சென்றனர் என்றும் ஹுசைன் மார் தெரிவித்தார்.

எண்ணெய் வளம் மிக்க தெற்கு சூடானிலிருந்து எதியோப்பியா வழியாக நிறுவப்படும் எண்ணெய்க் குழாய்களைத் தடுக்கவே சூடான் அரசு இந்தப் போராளிகளை ஆதரிப்பதாக தெற்கு சூடான் குற்றம் சுமத்துகின்றது. ஆயினும், சூடான் அரசு இதனை மறுத்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி