ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

புற்றுநோயால் அவதிப்படுகிறார் நாகேஸ்வரராவ்

புற்றுநோயால் அவதிப்படுகிறார் நாகேஸ்வரராவ்

தமிழ் மக்களால் தேவதாஸை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த தேவதாஸ் தான் அக்கினேனி நாகேஸ்வரராவ், ஆந்திராவின் சிவாஜி என்று இவரை அழைப்பார்கள். மகன் நாகார்ஜுனா, பேரன் நாகசைதன்யா ஆகியோர் சினிமாவில் கதாநாயகர்களாக கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்கள். 90 வயதை தாண்டியும் இப்போதும் நடித்துக்கொண்டிருக்கிறார் நாகேஸ்வரராவ். அவருக்கு இப்போது புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வயதிலும் யாருடைய துணையும் இன்றி தன்னிச்சையாக தன் தேவைகளை தானே கவனித்துக் கொள்ளும் சக்தியோடு வலம் வந்த நாகேஸ்வரராவை புற்று நோய் தாக்கி இருப்பது ஆந்திராவையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஆனால் அவர் அசரவில்லை. தனக்கு புற்று நோய் இருப்பது தெரிந்ததும் அதை ரகசியமாக வைக்காமல் ஊடுகங்களை கூட்டி அறிவித்தார்.

இங்கு அவர் கூறியதாவது : ‘எனக்கு புற்று நோய் இருப்பதை டொக்டர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நான் அதற்காக பயப்படவில்லை. இந்த நோய் எனக்கு மன தைரியத்தையும், வலிமையையும் கொடுத்திருக்கிறது.

ஒவ்வொரு நொடியையும் இப்போதும் அனுபவித்து வாழ்கிறேன். இந்தபுற்று நோயால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. நான் டொக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்க போவதால் எனது ரசிகர்களோ எனது நலம் விரும்பிகளோ, உறவினர்களோ என்னை எந்த விதத்திலும் தொடர்புகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் ஆசீர்வாதத்தால் நான் நூறு வயதை தாண்டி வாழ்வேன்’ என்று கூறியிருக்கின்றார்.

நாடக நடிகராக தன் வாழ்க்கையை தொடங்கிய நாகேஸ்வரராவ் 1941 ஆம் ஆண்டு தாம்பத்தினி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 256 படங்களில் நடித்துள்ள அவர், தேவதாஸ், ஓர் இரவு, மாயக்கண்ணி, பூங்கோதை, மாதர்குல மாணிக்கம், எங்கவீட்டு மகராணி, அலாவுதீனும் அற்புத விளக்கும், வாழ்க்கை ஒப்பந்தம் உட்பட 15 தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக இட்டாரு மித்ரு என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தவர் இவர்தான். சிவாஜி நடித்த நவராத்திரி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் 9 வேடங்களில் நடித்தார். ஆந்திரத்து எம். ஜி. ஆர்., என். டி. ராமராவ் என்றால் சிவாஜியாக இருந்தவர் நாகேஸ்வரராவ், சொந்த வாழ்க்கையில் ஒழுக்கம், தொழில் நேர்மை, கடுமையான உழைப்பு இவையே அவரை 90 வயது வரை கொண்டு வந்திருக்கிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி