ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

காஷ்மீர் பிரச்சினையில் யாரும் தலையிட அனுமதிக்க மாட்டோம்; பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

காஷ்மீர் பிரச்சினையில் யாரும் தலையிட அனுமதிக்க மாட்டோம்; பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

காஷ்மீர் பிரச்சினையில் யாரும் தலையிட அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். வழியில் லண்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், காஷ்மீர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு அமெரிக்கா தலையிட வேண்டும் என்று ஒபாமாவிடம் வலியுறுத்தப்போவதாக அறிவித்து இருந்தார். நாவஸ் ஷெரீப்பின் இந்த கருத்துக்கு இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்தது.

டி.வி. நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த இந்திய வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித், 'காஷ்மீர் பிரச்சினை பரஸ்பரம் இரு நாடுகள் (இந்தியா, பாகிஸ்தான்) தொடர்புடையது. இதில் வேறு எந்த நாடும் தலையிட அனுமதிக்கமாட்டோம்' என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

"காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதுபற்றி கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை. எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் இந்தப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்ப முயற்சிப்பது கூட வீண் வேளை என்றும் சல்மான் குர்ஷித் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தில் வேறு எந்த நாட்டையும் இந்த பிரச்சினையில் தலையிட அனுமதிக்க முடியாது என்பது தெளிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறித்து குர்ஷித் கவலை தெரிவித்தார். அதே நேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையே இருந்துவரும் போர் நிறுத்த ஒப்பந்தம் இதனால் முறிந்து போகாது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் பொருளாதார உதவி பற்றி கருத்து தெரிவித்த சல்மான் குர்ஷித் "பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் உதவியின்போது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் பாதிக்காமல் பார்த்துக்கொள்ளப்படும் என்ற தனது உறுதிமொழியை அமெரிக்கா மனதில் கொள்ளும் என்று நம்புவதாக குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி