ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,22, 2013

Print

 
தெங்கு விளைச்சலில் அபரிமிதமான முன்னேற்றத்தை நோக்கிய பயணம்

தெங்கு விளைச்சலில் அபரிமிதமான முன்னேற்றத்தை நோக்கிய பயணம்

நாட்டின் சனத்தொகைக்கு ஏற்ப தேங்காயில் தன்னிறைவு காண்பதே எமது இலக்கு

தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சின் மாதாந்த உத்தியோகபூர்வ பத்திரிகையான ‘கப்றுக’ லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பிரதான தினசரிகளான தினமின, தினகரன், டெய்லி நியூஸ் ஆகியவற்றுடன் மும்மொழிகளிலும் இணைப்பு பத்திரிகையாக வெளியாகின்றது.

தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சு அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட்டுடன் (லேக் ஹவுஸ்) இணைந்து வெளியிடும் இப்பத்திரிகையின் ஓராண்டு பூர்த்தியையொட்டி தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார வழங்கிய விசேட பேட்டியை இங்கே தருகின்றேன்.

கேள்வி : தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டு சுமார் மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இக்காலப் பகுதியில் இவ்வமைச்சு ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைச் சுருக்கமாக விபரிக்க முடியுமா?

பதில் : ஆம். தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்திக்கென அமைச்சரவை அந்தஸ்து கொண்ட தனியான அமைச்சு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் 2010 ஆம் ஆண்டில் முதற் தடவையாக ஸ்தாபிக்கப்பட்டது. தெற்கு உற்பத்தியிலும், தெங்கு கைத்தொழில் துறையிலும் அபிவிருத்தியை ஏற்படுத்துவதைப் பிரதான நோக்காகக் கொண்டே இந்த அமைச்சு உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதற்கேற்ப நாம் திட்டங்களை வகுத்து வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இதன் பயனாகக் கடந்த மூன்றாண்டு காலப் பகுதியில் பலவிதமான முன்னேற்றங்களை தெங்குத் துறையில் நாம் அடைந்துள்ளோம்.

குறிப்பாக 2010 ஆம் ஆண்டில் இந்த அமைச்சுக்குரிய கடமைகளை நான் பொறுப்பெடுக்கும் போது இந் நாட்டில் தேங்காய் விலை அபரிமிதமாக அதிகரித்து இருந்தது. இதனால் எமது மக்கள் தேங்காயைப் பெற்றுக்கொள்வதில் பலவிதமான அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்தார்கள். குறிப்பாக தேங்காய் ஒன்றை உடைத்து பாதியாக விற்பனை செய்யும் நிலைமை கூட அன்று ஏற்பட்டிருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணவென குறுகிய கால நீண்ட காலத் திட்டங்களை உள்ளடக்கி தெங்கு துறைக்கென ‘கப்றுக நவோதாவ’ என்ற பெயரில் ஐந்தாண்டு திட்டமொன்றை உடனடியாக வகுத்தோம். இத்திட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் பயனாக குறுகிய காலப் பகுதிக்குள் தேங்காய் விலையை அன்று குறைக்க முடிந்தது.

என்றாலும் தேங்காயின் விலையை நாட்டு மக்களின் நுகர்வுத் தேவைக்கு ஏற்ப தொடர்ந்தும் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அத்துறைகளிலும் பலவிதமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கேள்வி : இந்நாட்டின் தேங்காய் விளைச்சலை அதிகரிக்கவும், தெங்குத் துறையை மேம்படுத்தவும் முன்னெடுக்கப் பட்டுள்ள வேலைத் திட்டங்களை சுருக்கமாகக் கூறுங்கள்?

பதில் : நான் இந்த அமைச்சைப் பொறுப்பை ஏற்ற சமயம் நாட்டில் 10 இலட்சம் ஏக்கர்களில் தெங்கு செய்கை காணப்படுவதாகவும் அவற்றில் ஒரு இலட்சம் ஏக்கரில் தென்னங் கன்றுகள் உள்ளதாகவும் தெங்கு ஆராய்ச்சி நிலையம் எமக்கு அறிக்கை சமர்ப்பித்தது.

என்றாலும் 2010 ஆம் ஆண்டில் 2317 மில்லியன் தேங்காய்களையே அறுவடை செய்ய முடிந்தது. இதனை முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் பெரும் வீழ்ச்சியாகும். இதன் விளைவாகவே அந்த வருடத்தில் தேங்காய் விலை பெரிதும் அதிகரித்தது.

உலகில் தேங்காயை அதிகளவில் உணவுக்காக நுகரும் மக்கள் வாழும் நாடாக இலங்கை விளங்குகின்றது. இந்நாட்டில் அறுவடை செய்யப்படுகின்ற தேங்காயில் 95 வீதம் உணவுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது என்றாலும், இந்நாட்டின் சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப இற்றைவரையும் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு ஏற்படவில்லை.

அதனால் சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்குரிய திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம். அந்தவகையில் அடுத்துவரும் ஐந்து வருடங்களில் 32 மில்லியன் தென்னங் கன்றுகளைப் புதிதாக நடுவதற்கு 2010 ஆம் ஆண்டில் திட்டமிட்டோம். அந்தவகையில் கடந்த மூன்று வருட காலப் பகுதியில் 23 மில்லியன் தென்னங் கன்றுகளை நாட்டியுள்ளோம்.

இதேவேளை இந்த அமைச்சை நான் பொறுப்பெடுக்கும் போது அதாவது, 2010 ஆம் ஆண்டு வரையும் தெங்கு பயிர்ச்செய்கை சபை வருடத்திற்கு சுமார் 24 இலட்சம் தென்னங் கன்றுகளையே உற்பத்தி செய்யக் கூடியதாக இருந்தது.

என்றாலும் நாம் முன்னெடுத்த திட்டங்களின் பயனாக 2011 ஆம் ஆண்டில் 40 இலட்சம் தென்னங் கன்றுகளையும் 2012 ஆம் ஆண்டில் 90 இலட்சம் தென்னங் கன்றுகளையும், 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை 85 இலட்சம் தென்னங் கன்றுகளையும் உற்பத்தி செய்தோம். இதன் மூலம் தென்னங் கன்று உற்பத்தியிலும் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்ற தென்னங் கன்றுகள் கப்றுக புரவர, கப்றுகாய் சிப்நெனய், கப்றுகய் பரப்புராய், திவிநெகும உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களின் ஊடாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகின்றன.

இதேவேளை தெங்கு பயிர்ச்செய்கை முகம் கொடுத்துள்ள பலவிதமான நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அவற்றில் மைட்டா வண்டுகளைக் கட்டுப்படுத்தவென அவற்றைக் கொன்று தின்னும் வண்டுகளை உருவாக்கியுள்ளோம். இது விஷேட அம்சமாகும்.

நாம் முன்னெடுத்துவரும் வேலைத் திட்டங்களுக்குக் கிடைக்கப் பெற்றிருக்கும் மற்றொரு வெற்றிதான் தேங்காய் விளைச்சலில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகும். 2010 ஆம் ஆண்டில் 2317 மில்லியன்களாகக் காணப்பட்ட தேங்காய் அறுவடை 2011 ஆம் ஆண்டில் 2868 மில்லியன் வரையும் அதிகரித்தது. அது 2012 ஆம் ஆண்டில் 2900 மில்லியன்கள் வரை உயர்ந்தது.

என்றாலும் 2012 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட வரட்சியின் காரணமாக இவ்வருட தேங்காய் அறுவடையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம். அது 2540 மில்லியன்களாக இருக்கும் என நம்புகின்றோம். அது அடுத்த வருடம் சீரடைந்து விடும் என்றாலும் 2016 ஆம் ஆண்டில், 3650 மில்லியன் தேங்காய்களை அறுவடை செய்வதே எமது பிரதான இலக்கு.

கேள்வி : வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெங்குத் துறையை மேம்படுத்த முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பாக குறிப்பிடுவதாயின்...

பதில் : முப்பது வருட கால யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெங்குச் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்பிரதேசங்களில் தெங்குச் செய்கையை விஸ்தரிப்பதற்குப் பயங்கரவாதம் பெரும் தடையாக இருந்து வந்தது.

அதேநேரம் 1978ல் கிழக்கு மாகாணத்தை சூறாவளி தாக்கியது. இதன் விளைவாக கிழக்கில் தெங்குச் செய்கை பெரிதும் அழிவடைந்தது. எனினும் கடந்த மூன்று தசாப்தங்களாக அதனை மீளக் கட்டியெழுப்பக் கிடைக்கவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் 2009 ஆம் ஆண்டில் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தெங்குச் செய்கையை அப்பிரதேசங்களில் விஸ்தரிப்ப தற்கென பலவிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். தெங்குச் செய்கை விஸ்தரிப்பதற்காக நாட்டின் ஏனைய பிரதேசங்களில் முன்னெடுக்கப் படுகின்ற சகல வேலைத்திட்டங்களும் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் செயற்படுத்த ப்பட்டுள்ளன. இவற்றின் ஊடாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மாத்திரம் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட தென்னங் கன்றுகள் நடப்பட்டுள்ளன.

கேள்வி : தெங்குத்துறைக்கான கடனுதவித் திட்டம் தொடர்பாகக் கூறுவதாயின்,

பதில் : தெங்கு துறைக்கென நேரடி நிதியமொன்று எம்மிடமுள்ளது. அதில் சுமார் 350 மில்லியன் ரூபா பணம் இருக்கின்றது. அப்பணத்தைக் கொண்டு கப்றுக கடனுதவி வழங்குகின்றோம். இக்கடன் அரச வங்கிகள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் கடனைப் பெறுகின்றவர்களின் முதல் வருட வட்டியை நாமே வங்கிகளுக்குச் செலுத்துகின்றோம்.

இதேபோல் தெங்கு கைத்தொழில் துறையை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்படுகின்றது. இக்கடன் திட்டமும் அரச வங்கிகளின் ஊடாகவே முன்னெடுக்கப்படுகின்றது. தெங்கு அபிவிருத்தி அதிகார சபை சிபாரிசு செய்கின்ற கைத்தொழிலாளர்களுக்கு இருபது இலட்சம் ரூபா வரை கடன் வழங்கப்படும். இக்கடனைப் பெறுபவர்கள் அதனை உரிய கால வேளையில் முறையாகத் திருப்பிச் செலுத்தி வருவார்களாயின், அவர்கள் வங்கிக்கு செலுத்துகின்ற வட்டியில் 12 வீதத்தை நாம் மீளச் செலுத்துவோம்.

கேள்வி : இலங்கையின் தெங்கு கைத்தொழில் உற்பத்திகளுக்கு உலக சந்தையிலுள்ள கேள்வி தொடர்பாகக் கூற முடியுமா?

பதில் : இந்நாட்டின் தும்பு சார் உற்பத்திகளுக்கும், தும்பு சோற்றுக்கும், தேங்காய்த் துருவலுக்கும் உலக நாடுகளில் நல்ல கேள்வி நிலவுகின்றது. குறிப்பாக உலகிலேயே மிகவும் சிறந்த ‘கிரிஸ்டல்’ ரக தும்பு இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகின்றது. 2011 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தேங்காய்த் துருவல் இலங்கையின் தேங்காய்த் துருவலை விடவும் அதிக விலை போனது. அது 2013 ஆம் ஆண்டாகும் போது பிலிப்பைன்ஸ் நாட்டின் தேங்காய்த் துருவலை விட இலங்கை துருவலுக்கு உலக சந்தையில் அதிக விலை என்ற நிலையை அடைந்துள்ளது.

ஆகவே தெங்கு சார் உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இத்திட்டத்தின் கீழ் இலங்கை நிர்ணய நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றைச் செய்துள்ளோம். இதன் கீழ் 2014 ஆம் ஆண்டு முதல் சிறந்த உற்பத்திச் சான்றிதழைக் கொண்டிருப் பவர்களுக்கே தெங்கு சார் உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய இடமளிக்கப்படும்.

இதேவேளை இந்நாட்டின் தெங்கு உற்பத்திகளுக்கு உலக சந்தையில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலான கண்காட்சிகளையும் நாம் நடாத்தி வருகின்றோம். அதன் மூலமும் எமது உற்பத்திகளுக்கு நிறைய கேள்விக் கட்டளைகள் கிடைக்கப் பெறுகின்றன.

கேள்வி : நவீன தொழில் நுட்பப் பயன்பாடு தொடர்பாகக் கூறுங்கள்?

பதில் : எமது அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுடனான மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் முதலாவது கூட்டம் கடந்த 07 ஆம் திகதி (ஒக்டோபர் 2013) ஷிறிவீஜிரி மூலம் நடாத்தப்பட்டது.

இவ்வாறு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மேலதிக செலவைக் குறைக்க முடியும். நேர விரயத்தைத் தவிர்க்கலாம். உரிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளவும் முடியும் இந்நடவடிக்கை ஏனைய அமைச்சுக்களுக்கும், நிறுவனங்களுக்கும் நல்ல முன்னுதாரண மாகும்.

கேள்வி : நிறைவாக நீங்கள் கூற விரும்புவதென்ன?

பதில் : தெங்குத் துறையில் பாரிய முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதே எமது இலக்கு. அதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். அவற்றின் பலாபலன்களை இந்நாடு அனுபவிப்பதற்கு ஒருபோதும் நீண்ட காலம் எடுக்காது. அது நாட்டின் சுபீட்சத்திற்கு பாரிய சக்தியாக அமையும் என்றால் மிகையாகாது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]