ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,08, 2013

Print

 
இந்தியா முழுவதும் 2 1/2 கோடி பேருக்கு இலவசமாக கைத்தொலைபேசி

இந்தியா முழுவதும் 2 1/2 கோடி பேருக்கு இலவசமாக கைத்தொலைபேசி

இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கும் இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் 2 1/2 கோடி பேருக்கு இலவச கைத் தொலைபேசிகளை வழங்க முடிவு செய்திருக்கிறது. மின்னணு மயமாவதில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த விலையில், அதே சமயம் தரமான கைத்தொலைபேசிகள் வழங்கப்படும்.

கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு கைத்தொலைபேசிகள் வழங்குவதன் மூலம் சமுதாய பொருளாதாரம் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ. 4,850 கோடி செலவாகும் என்றும், இந்த நிதியை ‘யூனிவர்சல் சேர்வீஸ் அப்ளிகேஷன்’ நிதியம் (யு. எஸ். ஓ. எப்.) வழங்கவுள்ளது

இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு விவசாயம், சுகாதாரம், கல்வி, நிதி சேவை, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகிய தகவல்கள் குறுந்தகவல் மூலம் அளிக்கப்படும். இதன் காரணமாக அவர்களின் வாழ்க்கை தரம் உயரும் என்று அதிகாரிகள் தெரிவித் தனர். மேலும் இது கிராமப்புற தொலை பேசி சேவைகளை அதிகரிப்பதால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் இதன் தாக்கம் தெரியும்.

பொருளாதார சமுதாய சேவைகள் வழங்குவதன் மூலம் அவர்களது வறுமை நிலையும் படிப்படியாக மறையும். அடுத்த 4 ஆண்டுகளில் இந்த கைத் தொலை பேசிகள் வழங்கப்படும் முதல் ஆண்டில் 25 இலட்சம் பயனாளி களுக்கும், 2 வது ஆண்டில் 50 இலட்சம் பயனாளிகளுக்கும் 3 வது ஆண்டில் 75 இலட்சம் பேருக்கும் 4 வது ஆண்டில் ஒரு கோடி பேருக்கும் வழங்கப்படும். இந்த கைத்தொலைபேசியின் விலை 1,820 ரூபா வாகும். இதில் உப பொருட்கள் 3 வருட உத்தரவாதம், சிம் கார்டு ஆகியவற்றுக்காக 1200 ரூபா அடங்கும்.

நிர்வாகம் மற்றும் விநியோக செலவு 320 ரூபாவாகும். இதில் பயனாளிகளின் பங்களிப்பாக ரூபா 300 வழங்க வேண் டும். குறுந்தகவல், குரல் தகவல் ஆகிய வசதிகள் இதில் இருக்கும் இந்த பயனாளிகளை மாநில அரசுகள் தான் தேர்வு செய்யும். வீட்டுக்கு ஒருவருக்கு தான் இவை வழங்கப்படும்.

பெண்களுக்கு குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு தான் இந்த கைத்தொலைபேசிகள் வழங்கப்பட இருக்கின்றன.

வழங்கப்பட்ட பிறகு மாதந்தோறும் ரூபா 30க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இரண்டு வருடங்களுக்கு இந்த சேவை இருக்கும்.

இந்த திட்டத்தை பி. எஸ். என். எல். நிறுவனம் செயல்படுத்தும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று கிராமப்புறங்களில் 2017 ஆம் ஆண்டில் 70 சதவீதம் தொலைபேசி வசதியும், 2020 ஆம் ஆண்டில் 100 சதவீதம் எனவும் உயர்த்துவது தான் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]