ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER,17, 2013

Print

 
தன்னைத் தான் அறிதல்

தன்னைத் தான் அறிதல்

மனிதன் தன்னை அறியும் படி வைப்பதும் தன்னை அறிய விடாமல் வைப்பதும் மனது தான். எனக்கு எல்லாம் தெரியும், என்னைவிட அறிவாளிகள் யாருமில்லை என்ற ஆணவத்தை உண்டாக்குவதும், கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற அறிவை உணர்த்துவதும் அந்த மனது தான். தன்னை அறிய வேண்டிய மனிதன் முதன் முதலில் வெல்ல வேண்டிய மிகப் பெரிய எதிரி தன் மனது.

மனதை நன்றாக அறிந்து கொண்டவன் தான் உலகை வெல்ல முடியும், எதையும் வெல்ல முடியும் என்பது சான்றோர் கருத்து. மனதில் குற்றம் இல்லாதவனாக இருத்தலே எல்லா அறங்களிலும் அடிப்படையாகும். மனக்குற்றத்தோடு செய்பவை உலகை ஏமாற்றும் ஆரவாரத்தனமே ஆகும்.

கவியரசர் ஒரு பாடலில் சொன்னார்;

ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா

ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா....

பிறக்குமுன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா -

இறந்தபின்னே வரும் அமைதி வந்துவிட்டதா

எவ்வளவு உயர்ந்த நிலை பாருங்கள் வாழும் காலத்திலேயே பேரமைதியுடன் வாழ்வது.

ஆரவாரப் பேய்கள் நம்மை விட்டு ஓடிவிட்டால் மனம் அமைதியைக் காணும், ஆனந்தம் கூடும், பேரின்பம் சேரும், எங்கும் சாந்தி, சாந்தி, சாந்தி மட்டுமே. உடம்பு களங்கப்பட்டிருக்கலாம். ஆனால் மனது கலங்கப்படாதிருக்குமானால் அந்த உணர்வு கூடப் பரிசுத்தமாக ஆகிவிடுகிறது.

திருமூலர் அருளிய திருமந்திரத்திலே

‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகிறான்

தன்னை அறியும் அறிவை அறிந்த பின்

தன்னையே, அர்ச்சிக்கத் தானிருந்தானே!’

‘தானே தனக்குப் பகைவனும், நண்பனும்

தானே தனக்கு மறுமையும், இம்மையும்

தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனும் ஆமே!!’


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]