ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 14
விஜய வருடம் ஆவணி மாதம் 06ம் திகதி வியாழக்கிழமைை
THURSDAY, AUGUST, 22, 2013

Print

 
சிரிய இரசாயன தாக்குதல்: பாதுகாப்புச் சபை தீவிர அவதானம்

சிரிய இரசாயன தாக்குதல்: பாதுகாப்புச் சபை தீவிர அவதானம்

நூற்றுக்கணக்கானோரை பலிகொண்ட சிரிய அரசின் இரசாயன தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டு தீவிர அவதானத்திற்கு உரியது என ஐ.நா. அறிவித்துள்ளது.

இந்த இரசாயன தாக்குதலை அடுத்து ஐ.நா. பாதுகாப்புச் சபை இரண்டு மணி நேரம் தனது அவசர கூட்டத்தை நேற்று முன்தினம் நடத்தியது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்தே ஐ.நா. வின் பிரதி செயலாளர் நாயகம் ஜான் எலிசன் இவ்வாறு தெரிவித்தார். எனினும் தாக்குதல் தொடர்பில் தெளிவு பெறப்படவேண்டி இருப்பதாக ஐ.நா. பாதுகாப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த சிரியா சென்றிருக்கும் ஐ.நா. நிபுணர் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்த வேண்டும் என சுமார் 35 உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

சிரிய அரச படைக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் தலைநகர் டமஸ்கஸின் புறநகர் பகுதி மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதல் மூலம் பெண்கள், குழந்தைகள் என 1000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக எதிர்த்தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த சம்பவம் குறித்து தெளிவு பெறப்பட வேண்டி இருப்பதாகவும் இது தொடர்பில் தீவிரமாக அவதானித்து வருவதாகவும் பாதுகாப்புச் சபையின் தற்போதைய தலைவராக இருக்கும் ஐ.நா. வுக்கான ஆர்ஜன்டீன தூதுவர் மரியா கிறிஸ்டினா பெர்சவல் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எதிர்த்தரப்பின் குற்றச்சாட்டை அடிப்படையற்றது என ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் சிரிய அரசு கூறியுள்ளது. இது ஐ.நா. இரசாயன ஆயுத விசாரணைக் குழுவை திசை திருப்பும் நடவடிக்கை என சிரிய அரசு குறிப்பிட்டுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]