ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

இது இறவா குரல்...

இது இறவா குரல்...

சாகாவரம் படைத்த பல்லாயிரம் பாடல்களை தமிழர்களுக்குக் கொடுத்து விட்டு கண்ணை மூடி நம்மையெல்லாம் பிரிந்து சென்று விட்டார் டி. எம். எஸ். அந்த சிம்மக் குரலோனின் பாடல்கள் இன்று உலகெங்கும் உள்ள தமிழர்களை கண்ணீர் வெள்ளத்தில் மூழ்க வைத்துள்ளது.

இது தாண்டா குரல்... இப்படித்தாண்டா பாடனும்... இவன் தாண்டா பாடகன் என்று சொல்லிச் சொல்லிப் பெருமைப்படும் ஒரு அபூர்வக் கலைஞன் டி. எம். எஸ். என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் டி.எம். செளந்தரராஜன், பிறப்பால் செளராஷ்டிரர் என்றாலும் கூட ஒட்டுமொத்த தமிழர்களின் உள்ளத்தில் தனி இடம் பிடித்த உண்மையான தமிழன் டி. எம். செளந்தரராஜன், தமிழுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த குரல் டி. எம். எஸ். ஸின் கம்பீரக் குரல்.

பக்தியில் பரவசம்: பக்திப் பாடல்கள் என்றாலும் சரி, சினிமாப் பாடல்கள் என்றாலும் சரி, அந்தந்தப் பாடல்களின் பாவத்தை அப்படியே பிழிந்து தருவதில் டி. எம். எஸ்ஸ¤க்கு நிகர் அவரேதான்.

முருகன் பாடல்களை இவரைப் போல் யாருமே பாடியதில்லை என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் டி. எம். எஸ். ஸின் முருகன் பாடல்கள் இன்று வரை ஒலித்துக் கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் பக்தி ரசம்... பக்திப் பரவசம்..

பாச மலர் படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரிக்கு நிகராக ஒவ்வொரு ரசிகரையும் அழ வைத்தவர் டி. எம். எஸ். மலர்ந்தும் மலராத... பாடலை இப்போது கேட்டாலும் அழுது விடுகிறோம்.

அப்படி ஒரு அருமையான பாடல் அது. அதைவிட டி. எம். எஸ். அதை ரசித்து, நெகிழ்ந்து, உருகிப் போய்ப் பாடிய பாடல்.. சிவாஜி பாடுகிறாரா, இல்லை டி. எம். எஸ். பாடுகிறாரா என்றே தெரியாத அளவுக்கு கரைந்து போன ஒரு கந்தர்வக் குரல் அது... இந்தப் பாடல் இருக்கும் வரை உங்களை நினைத்து அழுது கொண்டே இருப்பார்கள் தமிழர்கள்....

ஐவ்வாது மேடையிட்டு... சர்க்கரையில் பந்தலிட்டு கேட்க கேட்க போதையூட்டும் பாட்டு இது. அதிலும் டி. எம். எஸ். இந்தப் பாடலுக்கு காட்டிய குரல் பாவமும், வார்த்தைகளை உச்சரித்த விதமும், நிச்சயம் எந்த ஒரு பாடகருக்கும் வராத அசாத்திய திறமை என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி ஒரு பாடலை இப்போது பாட எந்தப் பாடகனுமே இல்லை என்று அடித்துக் கூறலாம்.

அப்படி ஒரு அசாதாரணமான, அலாதியான பாடல் இது. அமைதியான நதியினிலே ஓடம்.... அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ராத்திரி நேரத்தில் இந்தப் பாட்டைக் கேட்டுப் பாருங்கள்... எவ்வளவு மன பாரம் இருந்தாலும், மன வேதனை இருந்தாலும், சோகம் இருந்தாலும் அப்படியே பஞ்சு போல பறந்தோடி விடும்... என்ன ஒரு அழகான பாடல். கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்.... அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்... இந்தப் பாடலில் ஒரு காதல் தோல்வியின் விரக்தியை அப்படிக் கொடுத்திருப்பார் டி. எம். எஸ். எழுதிய கண்ணதாசனைப் பாராட்டுவதா.... இல்லை குரலில் அத்தனை பாவத்தைக் காட்டி பாடலுக்கு உயிர் கொடுத்த டி. எம். எஸ். ஸின் குரலைப் பாராட்டுவதா...

தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

அழகான காதல் பாடல்... கேட்க கேட்க மனசெல்லாம் லேசாகி காற்றில் பறக்கத் தூண்டும்... அப்படி ஒருகாதல் குரல் இதைப் பாடிய டி. எம். எஸ்ஸ¤க்கும், பி. சுசீலாவுக்கும். இன்று வரை நாடி நரம்புப் புடைக்கும், காதல் உணர்வுகளைத் தூண்டும் கலாபப் பாடல்... எழுத எழுத அழுகை வருகிறது. டி. எம். எஸ்.... தமிழ் உலகம் உங்களை நிச்சயம் மறக்க முடியாது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி