ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 09
நந்தன வருடம் பங்குனி மாதம் 09ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAYDAY ,MARCH,22, 2013
வரு. 81 இல. 70
 

நபி (ஸல்) அவர்களின் பெண் மக்கள்

நபி (ஸல்) அவர்களின் பெண் மக்கள்

ஜாஹிலிய்யாக் காலத்தில் ஒரு பெண்ணின் பிறப்பு பெற்றோர்களின் வாழ்வில் கறுப்பு நாளாகவே தென்பட்டது. ஆம், குடும்பத்திலும் சரி, கோத்திரத்திலும் அவ்வாறே இருந்தது. அவர்கள் பெண்களின் பிறப்பைக் கண்டு இழிவடைந்து பயந்து அவர்கள் உயிருடன் புதைக்கப்படும் வரை நிலைமை நீடிக்கும். அப்பெண்கள் விஷயத்தில் கருணையில்லாமல் பாசத்திற்கே இடமில்லாமல் அவர்கள் உயிருடனே புதைக்கப்படுவார்கள். இக்காலத்தின் மத்தியிலேயே நபி (ஸல்) அவர்கள் இம்மார்க்கத்தைக் கொண்டு வந்தார்கள். அது பெண் என்பவள் தாயாக, மனைவியாக, மகளாக, சகோதரியாக யாராக இருப்பினும் அவர்களை இஸ்லாம் கண்ணியப்படுத்தியது. பெண் பிள்ளைகள் நபியின் பாசத்திற்கு உட்பட்டார்கள். அண்ணலாரின் மகள் பாத்திமா (ரழி) அவர்கள் நபியவர்களிடம் வந்தால் பாத்திமாவின் கையைப் பிடித்து முத்தமிட்டு தனது அமர்வில் இருக்கச் செய்வார்கள். அவ்வாறே நபியவர்கள் பாத்திமா (ரழி) அவர்களிடம் சென்றால் நபியவர்களின் கையைப் பிடித்து முத்தமிட்டு அவர்களின் அமர்வில் இருக்கச் செய்வார்.

(நூற்கள் : அபூ தாவூத், திர்மிதி, நஸாயி)

தனது பெண் மக்களுடன் நபி (ஸல்) அவர்கள் பெரும் நேசத்துடன் இருந்தும், 'அபூலஹபின் இரு கரங்களும் அழியட்டும்! என்ற இறைவசனம் இறங்கியதும், அபூலஹபின் மகன்களான உத்பா, உதைபா ஆகியோர்களுக்கு மனைவியாக இருந்த நபிகளாரின் மகள்மார்களான உம்மு குல்தூம், றுகையா ஆகிய இரண்டு பெண் மக்களும் தலாக்சொல்லப்படுவதை பொறுமையாளராக நன்மையை எதிர்பார்த்து பொருந்திக் கொண்டார்கள். அல்லாஹ்வின் பால் அழைப்பதை விட்டு பின்வாங்கவில்லை.

குறைஷிகள், நபியவர்களின் இரு பெண் மக்களையும் தலாக் சொல்லும் வரை எச்சரிக்கை செய்து கொண்டே வந்தார்கள்.

எனினும் நபியவர்கள் இம்மார்க்கத்தை அழைப்பதை விட்டு விடவில்லை. பொறுமையாக நிலைத்திருந்தார்கள். நபியவர் தனது மகள் பாத்திமாவை வரவேற்பதைப் பற்றி ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்? 'நபியவர்களின் மனைவிமார்கள் அவர்களிடம் இருந்தபோது, பாத்திமா (ரழி) அவர்கள் நபியவர்களின் நடையில் எதுவும் பிசகாமல் (தன் தந்தையைப் போல்) நடந்து வந்தார்கள். நபியவர்கள் அவரைக் கண்டு வரவேற்று 'எனது மகளின் வரவு நல்லதாகட்டும்' எனக் கூறினார்கள். பின்பு தனது வலப்பக்கம் அல்லது இடப்பக்கமாக அவரை உட்கார வைத்தார்கள். (நூல் : முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது பெண் மக்களை பாசத்துடன் நேசித்தவைகளில் உள்ளது தான், அவர்களை தரிசித்து அவர்களின் நிலைமைகளை கேட்டறிந்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர்களாக இருந்தார்கள். பாத்திமா (ரழி) அவர்கள் திரிகை சுற்றுவதால் தம் கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்தும் தனக்கென்று ஒருவரை வேலைக்கமர்த்துமாறும் நபியவர்களிடம் முறையிட சென்றார்கள். எனினும் நபியவர்கள் அங்கே இல் லாததால் ஆயிஷா (ரழி) அவர்களிடம் கூறிவிட்டு சென்று விட்டார்கள். நபியவர்கள் (வீட்டுக்கு) வந்த போது பாத்திமா (ரழி) அவர்கள் கூறிய விடயத்தை தெரிவித்தார். ஆயிஷா (ரழி) அவர்கள்.

அலி (ரழி) அவர்கள் கூறுகிறார்கள் நாங்கள் தூங்குவதற்கு சென்ற சமயம் நபியவர்கள் எங்களிடம் வந்தார்கள் நாங்களோ எழும்ப எத்தனித்தோம். 'உங்கள் இடத்திலேயே இருங்கள் எனக் கூறிவிட்டு வந்து எங்களுக்கிடையில் அமர்ந்தார்கள். அவர்களின் கால் பாதத்தின் குளிர் எனது நெஞ்சில் உணரும் அளவுக்கு (நெருக்கமா) அமர்ந்தார்கள் பின்பு, 'வேலையாளை விட மிகச் சிறந்ததொன்றை உங்கள் இருவருக்கும் சொல்லட்டுமா?' எனக் கேட்டுவிட்டு நீங்கள் உங்கள் படுக்கை விரிப்புக்குச் சென்று, தூங்கப் போனால், முப்பத்தி மூன்று தடவைகள் 'ஸ¤ப் ஹானல்லாஹ்' என்று, முப்பத்திமூன்று தடவைகள் 'அல்ஹம்துலில்லாஹ்' என்றும், முப்பத்தி நான்கு தடவைகள் 'அல்லாஹு அக்பர்' என்றும் கூறுங்கள். இதுவே வேலையாளை விட உங்களுக்கு சிறந்ததாகும் எனக் கூறினார்கள். (நூல் : புகாரி)

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய பொறுமையில் அவர்கள் எதற்கும் அலட்டிக் கொள்ளாத தன்மையில் எங்களுக்கு அழகிய முன்மாதிரிகள் உண்டு. நபியவர்கள் வாழும் போதே பாத்திமா (ரழி) அவர்களைத் தவிர ஏனைய ஆண்மக்கள், பெண் மக்கள் எல்லோரும் மரணித்துவிட்டனர். இக்கவலையினால் துவண்ட நபியவர்கள் அல்லாஹ்வின் விதியை ஏற்றுக்கொண்டவர்களாக நன்மையை நாடியவர்களாக பொறுமையுடன் இருந்தார்கள். அவர்கள் எங்களுக்கு ஏற்படும் துன்பங்களில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என மகத்தான வஸிய்யத்தையும் செய்துள்ளார்கள். 'எவருக்கு தீங்கு ஏற்பட்டதோ அவர் 'நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் இன்னும் அவன் பக்கம் நாங்கள் திரும்பிச் செல்வோம், இறைவா, எனக்கு ஏற்பட்ட இந்த கெடுதியால் எனக்கு நன்மையளித்திடுவாயாக அதனைவிட சிறந்ததையே கொடுப்பான்' எனக் கூறினார்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி