ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

ரஜினியின் பெருந்தன்மை

ரஜினியின் பெருந்தன்மை

ரஜினி நடித்த ரகுபதி ராகவன் ராஜாராம், ஆயிரம் ஜென்மங்கள், சதுரங்கம் ஆகிய மூன்று படங்களை டைரக்ட் செய்தவர். துரை, ரஜினியுடன் பழகியபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி துரை கூறியதாவது:- என் இயக்கத்தில் ரஜினி நடித்த முதல் படம் ரகுபதி ராகவன் ராஜாராம். அண்ணன் தம்பிகள் மூவரை சுற்றிப் பின்னப்பட்ட கதை. கதாநாயகியின் முறை மாப்பிள்ளையான வீரய்யன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தார். எஸ்டேட்டில் சைக்கிள் கடை வைத்திருந்த வீரய்யன், யார் வம்புக்கும் போகமாட்டான். வந்த வம்பையும் விடமாட்டான்.

முறைப்பெண்ணை காதலிக்கும் வீரய்யன், அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதை அறிந்து, ஒதுங்கிக் கொள்வான். இந்த நிலையில், முறைப் பெண்ணை ஒருவன் கெடுத்துவிட்டான் என்பதை அறியும் போது துடித்துப் போவான். உன்னைக் கெடுத்தவனை உயிருடனோ, அல்லது பிணமாகவோ உன் காலடியில் போடும் வரை ஓயமாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு வெளியேறுவான். சொன்னது போலவே வில்லனை கொன்று, பிணத்தை முறைப் பெண் முன் கொண்டுவந்து போட்டுவிட்டு பொலிஸில் சரண் அடைவான்.

ஆயிரம் ஜென்மங்கள் படப்பிடிப்பு ஆழியார் இணைப் பகுதியில் நடந்தது. அங்கு மூன்று அறைகள்தான் இருந்தன. ஒரு அறை கதாநாயகி லதாவுக்கு, இன்னொரு அறையில் விஜயகுமார் தங்கினார். மூன்றாவது அறை டைரக்டரான எனக்கும், ரஜினிக்கும் ஒதுக்கப்பட்டது. அந்த அறையில் ஒரு கட்டில் தான். மற்றொருவருக்காக தரையில் “பெட்” விரிக்கப்பட்டிருந்தது. நீங்கள் கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள். நான் தரையில் உள்ள படுக்கையில் படுத்துக்கொள்கிறேன் என்று கூறினேன். அதை ரஜினி ஏற்கவில்லை. நீங்க கட்டிலில் படுங்க. நான் கீழே படுக்கிறேன். என்று கூறி அப்படியே படுத்துக்கொண்டார். அவருடைய பெருந்தன்மை என்னை நெகிழச் செய்துவிட்டது. சீரியசான கெரக்டரில் அறிமுகமாகி, ஸ்டைல் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி, சதுரங்கம் படத்தில் பெண்களைப் பார்த்து பயப்படும் அப்பாவியாக நடித்தார். அவர் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினி தொழில் மீது பக்தி மிக்கவர். குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிடுவார். கடும் உழைப்பாளி. படப்பிடிப்பு நேரங்களில் தான் அடுத்து நடிக்க வேண்டிய சீன் பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பார். அவர் என்னை எங்கு பார்த்தாலும் அன்பாக இரண்டு வார்த்தைகளாவது பேசாமல் போகமாட்டார். இவ்வாறு கூறினார் துரை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி