ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

செலிங்கோ லைப்பின் ~பிரணாம' புலமைப் பரிசில் திட்டம் 83 மில்லியன் ரூபாவைத் தாண்டியது

செலிங்கோ லைப்பின் ~பிரணாம' புலமைப் பரிசில் திட்டம் 83 மில்லியன் ரூபாவைத் தாண்டியது

கல்வித் துறையிலும் ஏனைய புறக் கிருத்திய துறைகளிலும் சாதனை படைத்துள்ள இலங்கையின் இளம் தலைமுறையினருக்கு செலிங்கோ லைஃப் நிறுவனத்தால் வழங்கப்படும் புலமைப்பரிசில் இம்முறை மேலும் 150 புலமைப் பரிசில்கள் மேலதிகமாக வழங்கப்பட்டதன் மூலம் 83 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது.

இந்த வருடாந்த புலமைப்பரிசிலின் 12 வது நிகழ்வில் மொத்தமாக செலிங்கோ லைஃப் பிரணாம புலமைப்பரிசில்களை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 1614 ஆகும். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தவர்கள் முதல், கல்வி சாரா செயற்பாடுகளில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த இளைஞர்கள் வரை இதில் உள்ளடங்கியுள்ளனர்.

இந்த வைபவத்தில் பேசிய செலிங்கோ லைஃப்பின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர். ரெங்கநாதன் ஒரு பிள்ளையின் கல்வியில் செய்யப்படுகின்ற முதலீடே அந்தப் பிள்ளைக்கு வழங்க கூடிய மிகச் சிறந்த பரிசாக இருக்கும் என்பதை எல்லா பெற்றோர்களும் அறிந்து வைத்துள்ளனர் என்றார்.

“எவ்வாறாயினும் கல்வியின் பெறுமதி நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில், அதற்கான செலவு பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதற்கான செலவு என்பனவும் அதிகரித்த வண்ணமே உள்ளன” என்று மேலும் கூறிய ரெங்கநாதன், அவற்றுக்கு ஏற்ப பெற்றோர்களின் வருமானம் அதிகரிப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டினார். “எனவே செலிங்கோ லைஃப் எமது எதிர்காலத் தலைவர்களின் கல்விக் செலவுக்குப் பங்களிப்புச் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றது” என்றார்.

“தோல்விகளை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்பதைத் தெரிந்து கொண்டு, அதை வெற்றியின் பாதையில் வழிநடத்தக் கூடிய தலைவர்களே இலங்கைக்கு தற்போது தேவைப்படுகின்றனர். இந்த தலைமைத்துவப் பண்புகள் வீடுகளிலேயே வளர்க்கப்படுகின்றன. பின்னர் அவை பாடசாலைகள் மட்டத்தில் விருத்தி செய்யப்படுகின்றன. இவை விளையாட்டுத் திடல்களிலும் ஏனைய முயற்சிகளின் போதும் சோதனை செய்யப்படுகின்றன” என்று அவர் மேலும் விளக்கினார்.

இந்த வைபவத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞான பிரிவின் பீடாதிபதி பேராசிரியர் மொஹான் டி சில்வா கெளரவ அதிதியாகக் கலந்து கொண்டார். பிள்ளைகளின் சாதனைகளை அங்கீகரித்து ஒரு தனியார் நிறுவனம் இந்தளவு புலமைப்பரிசில்களை வழங்குவது ஒரு அரிதான விடயம் என்று அவர் பேசும் போது கூறினார். “ஒரு ஆசிரியன் என்ற வகையில் இந்த சமூக நலச் செயற்பாட்டை நான் உண்மையில் பாராட்டுகின்றேன். இளைய தலைமுறையின் பண்புகளையும் ஆற்றல்களையும் கட்டியெழுப்ப இது பெரிதும் உதவுகின்றது” என்று அவர் மேலும் கூறினார்.

இம்முறை செலிங்கோ லைஃப் புலமைப் பரிசில் மூலம் 2012ல் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்தாண்டு கால தவணைக் கொடுப்பனவின் அடிப்படையில் 90000 ரூபா வீதம் வழங்கப்பட்டது. 2011 க.பொ.த. சாதாரணத் தரத்தில் சித்தி அடைந்தவர்கள் இரண்டாண்டு காலத்துக்கான மாதாந்த கொடுப்பனவு அடிப்படையில் ஒவ்வொருவரும் 72000 ரூபாவைப் பெற்றுக் கொண்டனர். 2011 க.பொ.த. உயர் தரத்தில் மாவட்ட ரீதியில் முதலாம் இடங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் மூன்றாண்டு காலத்துக்கான தவணைக் கொடுப்பனவின் அடிப்படையில் 126000 ரூபாவைப் பெற்றுக் கொண்டனர்.

இதற்கு மேலதிகமாக இந்தப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் 2ம், 3ம் மற்றும் 4ம் இடங்களைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டது.

அத்தோடு தேசிய மட்டத்தில் விளையாட்டு, கலை, கண்டுபிடிப்பு, புத்தாக்கம் என 2011-2012 காலப்பகுதியில் சாதனை படைத்தவர்களுக்கு 35000 ரூபா வீதமும் வழங்கப்பட்டது.

செலிங்கோ லைஃப் காப்புறுதியாளர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் பிரணாம புலமைப்பரிசில் திட்டமானது கல்வித் துறைக்கு கம்பனி வழங்கும் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கின்றது.

செலிங்கோ லைஃப் வெகுமதித் திட்டத்தில் கம்பனி தலையீடு செய்யும் ஒரு முக்கிய பிரிவாக இது அமைந்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி