ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY, 12, 2013

Print

 
இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து சரித் சேனநாயக்க நீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து சரித் சேனநாயக்க நீக்கம்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித் சேனநாயக்க அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இலங்கைக் கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு இதற்கான முடிவை எடுத்துள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கைக் கிரிக்கெட் தலைவர் உபாலி தர்மதாச, இலங்கை அணியின் முகாமையாளர் சரித் சேனநாயக்க அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டமையை உறுதிசெய்தார். ஆனால் அவரது பதவி நீக்கம் குறித்த மேலதிக தகவல்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

சரித் சேனநாயக்காவின் இடத்திற்கு இலங்கையின் மற்றொரு முன்னாள் வீரரான மைக்கல் டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த உபாலி தர்மதாச எனினும் அந்தப் பதவியை ஏற்பது குறித்து அவர் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.

அண்மையில் இலங்கைக் கிரிக்கெட் மஹேல ஜயவர்த்தன ஊடகமொன்றிற்குப் பகிரங்கமக எழுதிய கடிதத்தை வெளியிட மஹேலவிற்கு உதவிய காரணத்திற்காக மஹேலவோடு சேர்த்து விளக்கம் கோரப் பட்ட சரித் சேனநாயக்க அந்தக் காரணத்திற் காகவும் சில தனிப்பட்ட காரணங்களுக் காகவும் தான் பதவியிலிருந்து நீக்கப்படுவ தாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் அதிகாரியொருவர் சரித் சேனநாயக்க மீது குற்றச்சாட்டுக்கள் பலவும் காணப்படுவதாகவும் அவர் தனது பதவியை ஒழுங்காகச் செய்திருக்கவில்லை எனவும் வீரர்கள் அவர் குறித்து முறையிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]