ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 03
நந்தன வருடம் வைகாசி மாதம் 12ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY ,MAY, 25, 2012
வரு. 80 இல. 123
 

கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும்!

கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும்!

அல்லாஹ¥த்தஆலா மனித சமூகம் ஈடேற்றம் பெறுவதற்கான வழிமுறைகளை அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளான். எனினும் மனிதன் தான் விரும்பியவாறு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு மனம் போன போக்கில் வாழ்ந்து வருகின்றான். இஸ்லாமிய வழிமுறைகளை புறந்தள்ளிவிட்டு நாகரீகம் எனும் போர்வையில் வாழ்ந்து வருவது இறைவனுக்கு நாம் செய்யும் பாரிய துரோகமாகும்.

நீங்கள் ஒட்டகத்தைப் பார்க்கவில்லையா? என்றும் வானத்தை எந்தளவு தூரத்தில் வைத்துள்ளேன் என்றும் மனிதர்களைப் பார்த்து கேள்விகளைக் கேட்கிறான்.

இவ்விரு கேள்விகளிலும் பல்வேறு பதில்கள் அடங்கியுள்ளன.

இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்களில் ஒட்டகம் மிகவும் விசித்திரமான படைப்பாகும். அல்லாஹ¥த்தஆலா இதனூடாக பல்வேறு படிப்பினைகளை எமக்கு கற்றுத் தருகின்றான். அதாவது ஒட்டகத்தின் படைப்பை பற்றி கூறிய அல்லாஹ¥த்தஆலா, மனித வர்க்கம் தாவரவியல் தொடர்பாக கற்றுக் கொள்ள வேண்டுமென்று மறைமுகமாக கூறியுள்ளான்.

அவ்வாறே வானம் எவ்வளவு உயரத்தில் உள்ளது, சூரியனின் பிரகாசம் என்பன தொடர்பாகவும் அல்குர்ஆனில் எடுத்துரைத்துள்ளான். இதனூடாக பெளதீகவியலை கற்றுக் கொள்வதன் மூலம் வானத்தை பற்றியதும் அதன் அமைப்பு பற்றிய பல்வேறு விடயங்களையும் கற்றுக் கொள்ள முடியும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளான்.

இஸ்லாம் கல்வித்துறைக்கு அளித்துள்ள முக்கியத்துவம் இதனூடாக வெளிப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் சீனா தேசம் சென்றாவது சீர்கல்வியை கற்றுக் கொள்ளுமாறு நவின்றுள்ளார்கள். எனவே, முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவரும் கல்வியில் ஆர்வம் காட்ட வேண்டியது அவசியம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் எமது முன்னோர்கள் எந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்கினார்கள் என்பது வரலாற்று நூல்களை வாசிக்கும் போது புலனாகின்றது. திட்டமிடல் துறை என்றால் யூசுப் (அலை) அவர்களையே அனைவரும் கூறுவார்கள். அவரது ஆட்சிக்காலத்தில் பஞ்சம் நிலவிய போது உணவுப்பற்றாக்குறையை எவ்வாறு தீர்ப்பது தொடர்பாக நீண்டகால திட்டமிடல் ஒன்றை சமர்ப்பித்து தீர்வு கண்டார்.

அவ்வாறே பொருளாதாரம் தொடர்பாக துல்கர்னைன் (அலை) அவர்களும் சிறந்து விளங்கினார்கள். மேலும் அலி இப்னு உக்தாத் மற்றும் இமாம் சரக்ஸி அவர்களும் கல்விக்கு வழங்கிய மகத்தான சேவைகள் இன்றும் போற்றப்படுகின்றன. இமாம் சரக்ஸி (அலை) அவர்கள் 8 பாகங்களைக் கொண்ட 250 கிதாபுகளை எழுதியுள்ளார். அவ்வாறே இமாம் தஹறி (அலை) அவர்கள் 75 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தப்kர் ஒன்றை எழுதினார்கள்.

அவர்களைத் தவிர வங்கித்துறையின் தந்தை என வர்ணிக்கப்படும் எகிப்தின் ஹாமித் அவர்களையும், அமெரிக்காவில் கல்வித்துறையில் முதல் 13 இடங்களில் இடம்பிடித்த டாக்டர் அஹமத் பெளதீக மற்றும் இரசாயனத்துறையில் கலாநிதி பட்டங்களை பெற்று அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு வழங்கினார்.

முஸர்ரப், சமீரா மூஸா, கவுன்சிலர் இபாப் குத்ப், பயிற்றுவித்தல் துறையில் அலி ஹம்மாதி என கல்விக்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்தவர்களை நாம் அடுக்கிக் கொண்டே செல்ல முடியும்.

எனவே, இறைவனால் படைக்கப்பட்ட மனித சமூகம் ஈடேற்றம் அடைவதற்கு சிறந்த வழி கல்வியாகும். மார்க்கக் கல்வியுடனான சீர் கல்வியை இம்மையில் பெற்று சிறந்த மனித சமூகமாக வாழ்ந்து மறுமையில் வெற்றி பெறுவோமாக.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி