ஹிஜ்ரி வருடம் 1433 ஜமாதுல் ஊலா பிறை 28
நந்தன வருடம் சித்திரை மாதம் 09ம் திகதி சனிக்கிழமை
SATURDAY ,APRIL, 21, 2012
வரு. 80 இல. 94

நம்பிக்கைப் பயணத்தின் மறையுண்மையான திருப்பலிப் ப+சை

நம்பிக்கைப் பயணத்தின் மறையுண்மையான திருப்பலிப் ப+சை

வெள்ளப் பெருக்கினின்று உயிர் பிழைத்த நோவா அரராத்து மலைத் தொடர் மீது பீடம் அமைத்து ஆண்டவருக்கு எரி பலி செலுத்தினார். அதில் உளங்களிந்த ஆண்டவர் அவ்வேளையில் இரண்டு வாக்குறுதி அளித்தார்.

“இப்பொழுது நான் செய்தது போல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது” (தொநூ 8:21;9:21) நோவாவில் ஆண்டவர் ஆரம்பித்து வைத்த சாபமோசனம் மற்றும் அழிவினின்று விடுதலை ஆகியன பூர்ணமாக நிறைவேறியது ஆண்டவர் இயேசுவினால் தான். இயேசுவின் சிலுவைப் பலியில்தான்.

ஆண்டவரின் பலி அதுவரை செலுத்தப்பட்ட எல்லா பலிகளின், அவை வழியாக வழங்கப்பட்ட அருளின் உச்சமாகும், அருள் பூர்ணமாக நிறைவேறியதாகும் (மத் 5:17) நோவா பலி செலுத்திய போது வானவில் தோன்றியது (தொநூ 9:12-16) அப்போது மனித உள்ளம் மகிழ்ச்சியடைந்தது. வானவில் ஓர் அடையாளமாகும். இயேசுவின் பலியின் முன் அடையாளம் ஆகம். இயேசுவின் பலி எல்லா இதயங்களையும் அழகுள்ளதாக மாற்றுகின்றது.

விசுவாசிகளின் இதயத்தில் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, நன்மை முதலிய தூய ஆவியின் பலன்கள் நிறைந்திடும். நேவா பேழையின்றி இறங்கி வந்து ஆண்டவருக்குப் பலி செலுத்தியது போல நாமும் நமது வீடாகி பேழையினின்று இறங்கி கோவிலுக்குச் சென்று திருப்பலிப் பூசையில் பங்கு கொள்ளும் போது, வாழ்க்கையில் தோன்றும் பெருங்காற்று, பெரு வெள்ளம் முதலிய எல்லா பிரச்சினைகளுக்கும் பரிகாரம் கிடைக்கும். ஆண்டவர் நம் பக்கம் இருக்கும் புனிதமான நேரம்தான் திருப்பலிப் பூசையின் நேரம்.

திருப்பாடல்களின் ஆசிரியர் பின்வருமாறு சான்று பகர்கின்றார். “ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்சவேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்? எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்; என்னை வெறுப்போர்க்கு நேர்வதைக் கண்ணாரக் காண்பேன்” (திபா 118:6-7). திருப்பலியில் ஆண்டவர் கோதுமை அப்பத்தின், திராட்சை இரசத்தின் வடிவில் வருவது நமக்கு உதவி செய்வதற்காகவே . அவர் ஒருபோதும் நம்மைக் கைவிடமாட்டார் (எபி 13:5). இந்த நம்பிக்கை நமது வாழ்வில் வானவில்லாக இருக்கட்டும். ஆம்! ஆண்டவர் தாம் நமது மகிழ்ச்சி!

ஓரேபு முட்புதர்

விசுவாசிகளின் ஆற்றலும், பாடலும், மீட்பும் ஆண்டவரே என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (118:14). இதை உணர்ந்து கொள்ள ஆண்டவர் ஏற்பாடு செய்யும் திருப்பலியில் பங்குகொள்ள வேண்டும். ஒரேபில் வானதூதர் அடையாளமாக ஒரு பலி பீடத்தைச் செய்தார். ஒரேபு மலையில் முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்து போகவில்லை. அதன் நடுவே தீப்பிழம்பில் ஆண்டவர் மோசேக்குத் தோன்றினார். ஆண்டவர் சொல்ல மோசே தமது மிதியடிகளைக் கழற்றினார்.

ஆண்டவரை அணுகிச் சென்றார். ஆண்டவர் கட்டளையிட மோசே தமது கையில் வைத்திருந்த கோலைத் தரையில் விட்டெறிந்து மீண்டும் எடுத்தார் (விப 3:1- 6;4;1-4). பலிபீடத்தில் ஆண்டவர் அளித்த கோல் மோசேக்கு வல்லமையாக அமைந்தது. பார்வோனைப் போன்ற மன்னர்கள் மோசேக்கு கீழ்ப்படிந்தனர். “இது கடவுளின் கை வன்மையே” என்று எதிரிகள் கூட ஏற்றுக்கொண்டனர் (விப 8:19). ஒரேபு முட்புதர் ஓர் அடையாளமாகும்.

அது பலிபீடமாகும். அது அன்று மோசேக்கு வல்லமை தந்ததுபோல் இன்று இறைவன் தமது ஒரே மகன் வாயிலாகத் தூய ஆவியை அனுப்பித் திருச்சபைக்கு வல்லமை அளிக்கின்றார். விசுவாசிகளான நாம் தூய்மையின்மை அதர்மம் அநீதியாகும் மிதியடிகளை, மன வருத்தம் மனமாற்றத்தால் அவிழ்த்து, நமது கையிலுள்ள கோலான நமது உள்ளம் நமது வாழ்வை ஆண்டவருக்குச் சமர்பித்தால், அவர் அதைத் தூய்மையாக்கி நமக்கு வல்லமையாகத் திருப்பித் தருவார்.

அப்போது நாம் சந்திக்கிறவர்களும், நம்மைச் சந்திப்பவர்களும் இறைவனின் வல்லமையை உணர்ந்து கொள்வார்கள். தம்மிடம் நம்பிக்கை வைப்பவர்களுக்கு வல்லமை அளிக்கப் புதிய ஏற்பாட்டில் ஆண்டவர் ஏற்பாடு செய்திருக்கிற பலிபீடம்தான் திருப்பலிப் பூசை. நாம் முன்பு தோல்வி அடைந்த இடங்களில் இப்போது வெற்றி கிடைப்பது நிச்சயம். திருத்தூதர்களின் வாழ்க்கை இதற்குச் சான்று பகர்கின்றது அல்லவா?

பலி பீடம் அமைத்தால் பதில் கிடைக்கும்

நூற்றாண்டுகளாக மனிதனுக்கு ஒரு புதிராக இருந்த கேள்வி தான் யார் உண்மையான கடவுள்? உண்மையான கடவுள் எங்கே? என்ற கேள்வி. இஸ்ரயேலிலும் இதே கேள்விகள் பிரச்சனையாக இருந்தன. பாகாலா? யாஹ்வேயா? யார் உண்மையான கடவுள்? பலி பீடம் தயாராயிற்று. விடை கிடைக்கக் காத்திருந்தனர். பாகாலின் பொய்வாக்கினர்கள் தயார் செய்த பலி பீடத்தில் எரி பலியை ஏற்க பாகால் வரவில்லை.

இருந்தால் தானே வர முடியும்? ஆனால் எலியா ஆண்டவருக்குத் தயார் செய்த எரிபலியை ஆண்டவர் ஏற்றுக்கொண்டார். உண்மைக் கடவுள்! ஆண்டவரின் நெருப்பு கீழே இறங்கி அந்த எரிபலியைச் சுட்டெரித்தது (1அர 18:20-38). இதைக் கண்டவுடன் மக்கள் அனைவரும் முகங்குப்பிற விழுந்து, “ஆண்டவரே கடவுள்! ஆண்டவரே கடவுள், என்றனர் (1அர 18:19). எனவே, யார் உண்மையான கடவுள்? கடவுள் உண்மையா? அவர் எங்கே இருக்கிறார்? என்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்க பகுத்தறிவாளர்களிடமோ, ஞான சூனியங்களிடமோ செல்வதில் பயனில்லை. கடவுளை அறியாதவர்களிடமோ, மந்திரவாதிகளிடமோ செல்வதில் பயனில்லை.

இயேசு கிறிஸ்து உருவாக்கிய திருச்சபையின் பலி பீடத்திற்கு வர வேண்டும். தெய்வீகமான அனைத்தையும் வெளிப்படுத்தும் இடம்தான் பலிபீடம். பலிபீடத்தின் முன் நின்று உருக்கமாக மன்றாட வேண்டும். இறைவாக்கினர் எலியாவைப் போல் விசுவாசத்தோடு மன்றாட வேண்டும். இறைவா, நீரே எமது கடவுள் என்று வெளிப்படுத்தியருளும் (1அர 18:36-37). திருத்தூதர் தோமா மன்றாட பதில் கிடைத்தது. அதனால்தான் அவர், “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்று அறிக்கையிட்டார் (யோவா 20:28). சீயோன் மாடியறையில் இறுதி இராவுணவு உலகிற்கு அளவு கடந்த வெளிப்படுத்தலாக அமைந்தது.

 கடவுளின் தன்மை அங்கே வெளிப்பட்டது. ஒவ்வொரு மனிதனும் தன்னையே அப்பமாக பிறருக்காக பங்கிட வேண்டும், ஒவ்வொரு குடும்பத்திலும் இப்பகிர்வு நடைபெற வேண்டும். அப்போது அன்று யோர்தானில், தாபோர் மலையில் முழங்கியது போன்ற வானகத் தந்தையின் குரல் கேட்கும் - “இவன் என் அன்பார்ந்த மகன், இவள் என் அன்பார்ந்த மகள்” இவ்வாறு அழைக்கப்படுவதற்காகத்தான் நாம் இம்மண்ணில் பிறந்துள்ளோம். இத்தகுதியை நமக்கு அளிப்பது திருப்பலிப் பூசைதான். நம்மை இறை மக்களாகத் திருப்பலிப் பூசை மாற்றுகின்றது.

சிலுவைப்பீடம் இறை மகனை வெளிப்படுத்துகின்றது

கொல்கொதாவில் சிலுவைப் பீடம் இயேசு உண்மையிலேயே இறை மகன் என்பதை வெளிப்படுத்துகின்றது. அதுவரை இவ்வுண்மையை வானகத் தந்தையாம் இறைவனும் வான தூதர்களும் அறிக்கையிட்டனர் என்றால், இயேசு சிலுவையில் தன்மையே பாவக்கழுவாய் பலியாகக் கொடுத்த போது, இயேசுவைச் சிலுவையில் அறைந்த நூற்றுவர் தலைவன், “இம்மனிதர் உண்மையாகவே இறை மகன்” என்றான் (மாற் 15:39). இயேசுவைக் கடவுளாகக் காணச் சிலுவையருகில் வர வேண்டும்.

திருச்சபை திவ்விய நற்கருணை ஆண்டில் அனைவரையும் சிலுவைப் பீடத்திற்கு அழைக்கின்றது. திருப்பலியில் இயேசுவின் திருமுக தரிசனம் பெறலாம். சிலுவைப் பலியில் அவர் இறை மகன் மட்டுமல்ல, அவர் அனைத்திற்கும் கடவுள் என்பது வெளிப்படும். இயேசு சிலுவையில் தம் உயிரைக் கையளித்த போது, “திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ் வரை இரண்டாகக் கிழிந்தது, நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன.

கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன” (மத் 27:51- 52). இது இயேசுவின் மகத்துவத்தை, அவரது அதிகாரத்தை வெளிப்படுத்துகின்றது. சிலுவைப் பீடத்தில் இயேசு அரசர்க்கெல்லாம் அரசர் என்று நல்ல கள்ளன் அறிந்தான், மனந்திரும்பினான் “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும் போது என்னை நினை விற்கொள்ளும்’ என்று வேண்டினான். அதற்கு இயேசு அவனிடம், ‘நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்’ என்றார்” (லூக் 23:42-43). மெசியா இரகசியத்தை, மீட்பு உண்மையைக் கற்றுக் கொள்ள தலை சிறந்த இடம் சிலுவைப் பீடம்தான், திருப்பலிப் பூசைதான் என்பது இதிலிருந்து தெளிவடைகின்றது. ஆம்! திருப்பலிப்பூசை விண்ணைத் திறக்கின்றது, சொர்க்கத்தைக் காண்பிக்கின்றது!

புது சகோதரத்துவம்

சிலுவைப் பீடத்தில் புது சகோதரத்துவம் வெளிப்படுகின்றது. அதுவரை ஈன்றதால் தாய், பெற்றதால் பெற்றோர், கூடப் பிறந்ததால் சகோதர, சகோதரி என்ற உறவுதான் இருந்தது. ஆனால் சிலுவைப் பீடத்தில் இயேசு தம் தாய் மரியாவிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்று திருத்தூதர் யோவானைக் காண்பித்தார். யோவானிடம், “இவரே உம் தாய்” என்றார். (யோவா 19:25-27). இங்கு மனித உறவு மகத்துவப்படுகின்றது. சாதாரண நிலை அல்ல, அதற்கு அப்பால் அசாதாரண நிலையை உறவு எட்டுகின்றது.

மனிதர் அனைவரும் இறைவனின் பிள்ளைகள். இறைவன் அனைவருக்கும் தந்தை. மனிதர் அனைவரும் சகோதரர்கள் என்பது தெளிவடைகின்றது. இது நிலைத்திருக்கச் செய்வதுதான் திருப்பலிப்பூசை. திருப்பலிப்பூசை நோய் நீக்குகின்றது. இயேசுவின் விலாவில் குத்தியவனின் குருட்டுத் தன்மை நீங்கிற்று இயேசுவின் இரத்தம் நம்மைத் தூய்மையாக்குகின்றது.

பாவக் கறைகளை நீக்கம் செய்கின்றது. நம்மைப் புதுப்பிக்கின்றது. இறைவனுக்கு ஏற்புடையவர்களாக, இறை மக்களாக நம்மை மாற்றுகின்றது. திருப்பலியில் இறை அன்பைத் தூய்த்துணரலாம். ஆண்டவர் தாம் கடவுள் என்பதும் வெளிப்படுகின்றது. அதனால் நமது உள்ளங்களும் எம்மாவு சென்ற சீடரின் உள்ளங்களைப் போல் ஆர்வத்தால் பற்றியெரியும் (லூக் 24:13-35). நம்பிக்கைப் பயணத்தை அதன் இலக்கிற்கு அழைத்துச் செல்லும் மாபெரும் மறையுண்மைதான் திருப்பலிப் பூசை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி