ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 

பா.ம.க. வைக் கைப்பற்றுவோம்

பா.ம.க. வைக் கைப்பற்றுவோம்

பா.ம.கவைக் கைப்பற்றி உண்மையான பா.ம.க நாங்கள்தான் என்பதை நிரூபிப்போம் என்ற முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன் கூறினார். பா.ம.கவில் இருந்து வேல்முருகன் நீக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் ஜி.கே. மணி அறிவித்தார்.

அதன் பின்னர், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் வேல் முருகன் கூறியது:-

ராமதாஸையும், வடிவேல் ராவணனையும் ஒருமையில் பேசியதாகக் குற்றஞ்சாட்டி என்னைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். அக்டோபர் 30ம் திகதி நடைபெற்ற செயற்குழுவிலும் இதற்கான விளக்கத்தை சொல்லியிருக்கிறேன். ஆவேசத்தில் இவன் ஆண்டான் என்று சொல்வது போலத்தான் ராமதாஸைத் தெரிவித்தேன். வடிவேல் ராவணனை இப்போதும் நான் மதிக்கிறேன். அவரை ஒன்றும் நான் சொல்லவில்லை. செல்லூர் குமார் என்பவர் தொடர்பாகத்தான் பேசினேன்.

இதை அவர்கள் ஏற்கவில்லை. நிர்வாகக் குழு கூட்டம் நடந்தபோது, தனியறையில் வைத்து, மொத்தம் 24 பேர் என்னை மிரட்டினார்கள். அங்கு எனக்கு நேர்ந்த கொடுமையைச் சொன்னால் தமிழகம் முழுக்கவே சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும். டி.ஜி.பியிடம் இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளேன். நான் எந்த நேரம் தொலைபேசியில் அழைத்தாலும் எடுங்கள் என்று கூறியுள்ளேன். என்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகும் அதற்கு முன்பும் தொடர்ந்து தொலைபேசியில் மிரட்டி வருகின்றனர். இவர்கள் அனைவரும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல் மிரட்டுகின்றனர். அம்பலப்படுத்துவேன்:

ராமதாஸை தகாத வார்த்தைகளால் நான் பேசியதாக சிடி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதைப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடட்டும். நானும் எனக்கு நேர்ந்தவற்றை சிடியாக வைத்துள்ளேன். அவற்றையும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி