ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 07
கர வருடம் ஐப்பசி மாதம் 18ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, NOVEMBER,04, 2011


 

Print

 
ஜெயலலிதாவுக்கு தலைவர்கள் கண்டனம்

ஜெயலலிதாவுக்கு தலைவர்கள் கண்டனம்

அண்ணா நூற்றாண்டு நூலகம் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாற்றப்பட்டுள்ளது என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் (எதிர்க்கட்சித் தலைவர்) அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றி அ¨மைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை கண்டு அதிர்ச்சியுற்றேன். இந்த நூலகம் உயர் கல்விக் கூடங்கள் நிறைந்த பகுதியில் அமைந்திருக்கிறது. கல்வியாளர்கள் படிப்பதற்கும்,

ஆராய்ச்சி செய்வதற்கும் ஏற்ற சூழ்நிலை அங்கு அமைந்துள்ளது. இந்த கட்டடத்தை பொறுத்தவரை அமைப்பு முறையை பற்றியோ, கட்டடம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் இருந்தன என்றோ குற்றச்சாட்டு எழவில்லை. அண்ணா பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே அவர் பெயரில் உலகத்தரம் வாய்ந்த ஒரு நூலக கட்டடம் அமைந்திருப்பது பொருத்தமானது.

குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றை அரசு அமைக்க விரும்பினால், ஏற்கனவே இயங்கி வரும் குழந்தைகள் நல மருத்துவமனையை மேம்படுத்தலாலம், அல்லது, புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய குழந்தைகள் நல மருத்துவமனையை திருமழிசையில் புதிதாக அமையவிருக்கும் துணை நகரத்தில் அமைக்கலாம்.

தி.மு.க. ஆட்சியில் இந்த கட்டடம் அமைக்கப்பட்டது என்ற காரணத்தாலேயே, இன்றைய ஆட்சி அதை மாற்றுகிறதோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஆட்சி மாற்றம் காரணமாகவே முந்தைய ஆட்சியில் செய்தவைகள் எல்லாம் இன்றைய ஆட்சியில் மாற்றுவதன் மூலம் மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது. ஆகவே, மக்கள் நலன் கருதி நூலக கட்டடத்தை மாற்றக்கூடாது.

ஜி. ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற அரசு எடுத்துள்ள முடிவை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசின் இந்த தவறான முடிவுக்கு கல்வியாளர்கள், தமிழ் சான்றோர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தி.மு.க. ஆட்சியில் எழுப்பப்பட்ட நூலகம் என்ற காரணத்துக்காகவே, அ.தி.மு.க. அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

சமர்சீர் கல்வியை அ.தி.மு.க. அரசு முடக்க முனைந்த போது தமிழகமே எதிர்த்தது. உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகே அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியது. ஆனாலும், அ.தி.மு.க. அரசு எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. நூலகத்தை மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]