ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 

ஐரோப்பிய நிதி நிலை கவலை அளிக்கிறது

ஐரோப்பிய நிதி நிலை கவலை அளிக்கிறது

பிரதமர் மன்மோகன்

“யூரோ மண்டல பொருளாதார பிரச்சினை மிகவும் கவலை அளிக்கிறது. இப்பிரச்சினையில் இருந்து வெளிவர, உலக அளவில், சீரான, வேகமான, பொருளாதார வளர்ச்சி காண்பதே ஒரே தீர்வு” என பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்

ஜீ 20 மாநாடு பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் நேற்று முன்தினம் துவங்கியது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். மாநாடு துவங்கும் முன், பிரதமர் மன்மோகன் சிங்கை, பிரிக்ஸ் நாடுகளின் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா- பி.ஆர்.ஐ.சி.எஸ்.) தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், “யூரோ மண்டல பொருளாதார பிரச்சினைக்கு, யூரோ மண்டலத்திற்கு உட்பட்ட நாடுகளே தீர்வு காண வேண்டும்,’ என வலியுறுத்தினர். மேலும், சர்வதேச நிதியத்தின் உதவி கிடைக்கும் பட்சத்தில், அதற்கும் ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினர். “ஜி 20 மாநாடு நடக்கும் இந்த நேரத்தில், இப்பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட நாடுகளின் நிதி வல்லுநர்கள் கலந்தா லோசித்து, தீர்க்கும் முயற்சியில் முனைப்பு காட்ட வேண்டும்’ எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், “யூரோ மண்டல பொருளாதார பிரச்சினை மிகவும் கவலை அளிக்கிறது. இப்பிரச்சினையில் இருந்து வெளிவர, உலக அளவில் சீரான, வேகமான பொருளாதார வளர்ச்சி காண்பதே ஒரே தீர்வு,’ என அவர்களிடம் வலியுறுத்தினார். வரும் 2012ம் ஆண்டு, மார்ச் 29ம் திகதி புதுடில்லியில் நடக்கவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, இந்த தலைவர்க ளுக்கு பிரதமர் மன்மோகன் அழைப்பு விடுத்தார். ஜி-20 மாநாடு இன்றும் தொடர்ந்து நடக்கிறது. யூரோ மண்டல பொருளாதார பிரச்சினை குறித்து மேற்கொள்ளப்படும் முக்கிய முடிவுகள் பற்றி மாநாட்டின் இறுதியில் தெரிய வரும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி