ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 23
கர வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, OCTOBER,21, 2011


 

Print

 
ஏழு மலையான் அருளால் பூரண குணமடைந்தேன்

ஏழு மலையான் அருளால் பூரண குணமடைந்தேன்

ஏழுமலையான் அருளால் பூரண குணம் அடைந்துள்ளேன் என நடிகர் ரஜினி காந்த் கூறினார்.

சிகிச்சைக்குப் பின்னர் முதன் முறையாக நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய நேற்று முன்தினம் மாலை திருமலைக்கு வந்தார். அங்குள்ள விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

பின்னர் இரவு 7.30 மணி அளவில் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். ரஜினி காந்த் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதால் அவர் மட்டும் மகாதுவாரம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், அவர் சுவாமி தரிசனம் செய்தார். அவருடைய குடும்பத்தினர் வைகுண்டம் வழியாக சென்று தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலில் உள்ள ரங்கநாயகி மண்டபத்துக்கு வந்த அவர்களுக்கு தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சுப்பிரமணியம், இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு ஆகியோர் கோயில் சார்பில் பிரசாதம் வழங்கினர்.

வேண்டுதலுக்காக, துலாபாரத்தில் தனது எடைக்கு எடையாக 85 கிலோ கற்கண்டை காணிக்கையாக ரஜினி காந்த் வழங்கினார். பின்னர் வெளியே வந்த ரஜினிகாந்தை பக்தர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை பொலிஸார் அப்புறப்படுத்தினர். அப்போது ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், "தற்போது நான் நன்றாக உள்ளேன்.

ஏழுமலையான் அருளால் பூரண குணம் அடைந்துள்ளேன். சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். அவருடன் மனைவி லதா, மகள்கள் செளந்தர்யா, ஐஸ்வர்யா, மருமகன்கள் நடிகர் தனுஷ், அஷ்வின், நடிகர் மோகன்பாபு மற்றும் குடும்பத்தினர் வந்திருந்தனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]