ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER,30, 2011

Print

 
பிரதமரின் கடிதமொன்றை துரும்பாக வைத்து மோசடியில் ஈடுபட்டார் ராசா

பிரதமரின் கடிதமொன்றை துரும்பாக வைத்து மோசடியில் ஈடுபட்டார் ராசா

புதிய தகவல் அம்பலம்

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த அனைத்தும் பிரதமருக்கும், ப. சிதம்பரத்திற்கும் தெரியும் என நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறையும் கூறி வரும் முன்னாள் மத்மதிய அமைச்சர் ராசா பிரதமர் தனக்கு அனுப்பிய ஒரு ஒப்புகைக் கடிதத்தை வைத்து அனைவரையும் திசை திருப்பியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார் ராசா. அதில் பிரணாப் முகர்ஜியை தான் சந்தித்து மொபைல் உரிமம் குறித்த கொள்கை வகுப்பு குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.

பதிலுக்கு 2008 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் அனுப்பினார். அதில் உங்களது கடிதம் பெற்றேன் என்று கூறியுள்ளார் சிங்.

இதைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி தொலைத் தொடர்புத் துறைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் ராசா. அதில், பிரதமரின் ஒப்புகைக் கடிதத்தை மேற்கோள் காட்டி உரிமம் தொடர்பான கொள்கை முடிவு எடுக்க பிரதமர் அனுமதித்துவிட்டதைப் போல சொல்லி முடிவுகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதாவது பிரதமருக்குத் தான் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் அனுப்பி ஒப்புகைக் கடித பதிலை, பிரதமரின் அனுமதி போல திரித்து தொலைத் தொடர்புத் துறையைத் திசை திருப்பியுள்ளார் ராசா.

மேலும் 122 உரிமங்களை விநியோகிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் தொலைத் தொடர்புக் கொள்கையையும் திருத்தியுள்ளனர். தொலைத் தொடர்பு ஆணையத்தின் ஒப்புதல் பெறாமலேயே இது நடந்துள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]