ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 04
கர வருடம் ஆனி மாதம் 22ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, JULY,07, 2011

Print

 
ஏழு துணை நடிகர்கள் மருத்துவமனையில் அனுமதி

ஏழு துணை நடிகர்கள் மருத்துவமனையில் அனுமதி

ரமணா, கஜினி ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், ஏ. ஆர். முருகதாஸ் இவர் சொந்த பட நிறுவனம் தொடங்கி, எங்கேயும் எப்போதும் என்ற பெயரில் ஒரு புதிய படத்தை தயாரித்து வருகிறார் ஜெய் அஞ்சலி ஜோடியாக நடிக்கும் இந்த படத்தை சரவணன் டைரக்டு செய்கிறார்.

படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டன. இறுதிக்கட்ட படப்பிடிப்பு, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் நடந்தது. துணை நடிகர் நடிகைகள் 150 பேர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி கொண்டிருந்தன.

அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகிகளுக்கும், படப்பிடிப்பு குழுவினருக்கும் இடையே படப்பிடிப்பு கட்டணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு குழுவினரை வெளியே போகும்படி. ஆஸ்பத்திரி நிர்வாகிகள் கூறியதாகவும், படப்பிடிப்பு குழுவினர் வெளியேற மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து அந்த இடத்தில் யாரோ ஆசிட்டை எடுத்து வந்து வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த துணை நடிகர் நடிகைகள் 7 பேருக்கு வாந்தி மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக அந்த 7 பேரும் பக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக படப்பிடிப்பு குழுவினர் வளசரவாக்கம் பொலிஸில் புகார் செய்து இருக்கிறார்கள்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]