ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE,21, 2011

Print

 
125வது விம்பிள்டன் டென்னிஸ் நேற்று ஆரம்பம்;: முன்னணி வீரர்கள் களத்தில் பலப்பரீட்சை

125வது விம்பிள்டன் டென்னிஸ் நேற்று ஆரம்பம்;: முன்னணி வீரர்கள் களத்தில் பலப்பரீட்சை

உலகின் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நேற்று ஆரம்பமானது.

125வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் மிக நீண்ட பாரம்பரியமிக்க இத்தொடரில், 7வது முறையாக சம்பியன் பட்டம் வென்று வரலாறு படைக்க காத்திருக்கிறார் ரோஜர் பெடரர்.

பெண்கள் பிரிவில் செரினா வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் சாதிக்கலாம். லண்டனில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் 1877ல் துவங்கியது. அப்போது ஆண்களுக்கான ஒற்றையர் போட்டி மட்டுமே நடந்தது.

1884ல் பெண்களுக்கான ஒற்றையர் போட்டி அறிமுகமானது. தொடர்ந்து இரட்டையர், கலப்பு இரட்டையர் போட்டிகள் இடம் பெற்றன. முதல் உலகப் போர் (1915-1918) இரண்டாம் உலகப் போர் (1940-1945) நடந்த கால கட்டத்தில் போட்டிகள் நடக்கவில்லை. தற்போது 125வது ஆண்டு கொண்டாட்டங்களுடன் நேற்று போட்டி ஆரம்பமானது.

புல் தரை களமான விம்பிள்டனில் அமெரிக்காவின் பீட் சாம்ராஸ் வீழ்த்த (7முறை சாம்பியன்) முடியாத வீரராக விளங்கினார் இவரை தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அசத்துகிறார்.

6 முறை பட்டம் வென்ற இவர் கடந்த ஆண்டு செக் குடியரசின் தாமஸ் பொடிக்கிடம் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இதற்கு பரிகாரம் தேடும் விதமாக இந்த ஆண்டு 7வது முறையாக பட்டம் வென்று சாம்ப்ராஸ் சாதனையை சமன் செய்ய காத்திருக்கிறார். இவருக்கு நடப்பு சாம்பியனும் உலகின் முதல் வீரருமான ஸ்பெயினின் நடால் வழக்கம் போல் சவால் கொடுக்கலாம். இவர்களை தவிர டோகோவிச், ஆன்டி முர்ரே, சோடர்லிங், ரோடிக் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் களத்தில் உள்ளனர்.

சகோதரிகள் ஆதிக்கம்:

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சம்பியனான செரினா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் ஆதிக்கம் செலுத்தலாம். சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்ற சீனாவின் லி நாவும் சாதிக்க வாய்ப்பு உண்டு. இவர்களை தவிர உலகின் முன்னணி வீராங்கனையான டென்மார்க்கின் வோஸ்னியாக்கி, ரஷ்யாவின் ஷரபோவா, கஸ்னட்சோவா போன்றவர்கள் கோப்பை கைப்பற்ற முயற்சிக்கலாம்.

இந்தியாவை பொறுத்தவரை பெண்கள் ஒற்றையர் பிரிவில் சானியா மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இவர், இரட்டை பிரிவில் ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவுடன் சேர்ந்து விளையாடுகிறார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் பயஸ்-பூபதி சாதிக்கலாம்.

இதே போல இந்தியாவின் போபண்ணா - குரேஷி (பாகிஸ்தான்) முத்திரை பதிக்கலாம். ஒற்றையர் பிரிவில் சோமதேவ தேவ்வர்மன் எழுச்சி காண வேண்டும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]