ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

அச்சுப் பிரதி

 
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத் தன்மைக்கு ஜப்பான் பாராட்டு

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல்
ஸ்திரத் தன்மைக்கு ஜப்பான் பாராட்டு

ஜனாதிபதியைச் சந்தித்துப்பேச்சு

நூற்றாண்டு காலமாக இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையே நிலவி வரும் கலாசார மற்றும் சமய ரீதியான உறவுகளில் புதிய திருப்புமுனை ஒன்றினை ஏற்படுத்தி ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான பொருளாதார உறவுகளை பலப்படுத்த வேண்டிய தேவை காணப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தினார்.

நேற்று (22) மாலை அலரி மாளிகையில் ஜப்பான- இலங்கை நட்புறவு பாராளு மன்றக் குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு கூறினார். புதிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இங்கு வருகைத் தந்திருந்தனர்.

முக்கியமாக இலங்கை துரித பொருளாதார விருத்தி ஒன்றினை நோக்கி பயணிப்பதாக இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புதிதாக வளர்ச்சியடைந்து வரும் துறைமுகங்களை அண்டி புதிய ஜப்பான் முதலீட்டு வலயங்களை நிறுவுவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை என்பன தொடர்பாக ஜப்பான் தூதுக் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், சுற்றுலா மற்றும் முதலீட்டுத் துறைகளிலே ஜப்பான் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவி வழங்குமென அவர்கள் தெரிவித்தனர்.

புதிய ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட உயர் தூதுக் குழுவொன்றுக்கு இலங்கை வருமாறு இதன்போது அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளிற்கு ஜப்பான் வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் வண சுதுஹும்பல விமலசார தேரர், ஜப்பான்- இலங்கை நட்புறவுச் சங்கத்தின் தலைவர் ஹொரொபுமி ஹிரனோ, உப தலைவர் உள்ளிட்ட பாராளுமன்றக் குழுவினர், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் குனியோ டகாஷாஷி ஆகியோருடன், அமைச்சர்களான ஜீ. எல். பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, பிரியங்கர ஜயரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் உட்பட மேலும் பலர் கலந்துகொண்டனர். (ஏ-k)