வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010


அபிதான சிந்தாமணி வெளிவந்த கதை

அபிதான சிந்தாமணி வெளிவந்த கதை

அபிதான சிந்தாமணியின் ஆசிரியர் ஆ. சிங்கார வேலு முதலியார். 1855 இல் சென்னையில் பிறந்தார். சென்னை பச்சையப்பா உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார். 1890 இல் இந்நூலை உருவாக்க பல்லாயிரம் பக்கங்கள் கைப்பிரதியாக எழுதிச் சேர்ந்தார் சிங்காரவேலு முதலியார்.

இன்றைய அபிதான சிந்தாமணி ஏறத்தாழ 1800 பக்கங்கள் கொண்டது. இரண்டு பத்திகளிலாக மிகப்பொடி எழுத்து. அப்படியானால் எப்படிப் பார்த்தாலும் கடைசிக் கைப்பிரதி 9000 பக்கங்களுக்கு இருந்திருக்க வேண்டும். ஊர் ஊராகச் சென்று சிறு பிரசுரங்களையும் ஏடுகளையும் சேகரிக்க ஆரம்பித்தார். செவிவழிக்கதைகளை திரட்டினார்.

ஸ்தலபுராணங்களை ஓதுவார்களிட மிருந்து கேட்டு எழுதிக்கொண்டார். நாடோடிகளான கதை சொல்லிகள், ஹரிகதைப் பிரசங்கிகள், சோதிடர்கள், மாந்திரீகர்கள், நாட்டு வைத்தியர்கள், பைராகிகள் போன்ற பலதரப்பட்ட மக்களை சந்தித்து தகவல்களை திரட்டிக்கொண்டே இருந்தார்.

சென்னையில் அன்றிருந்த செல்வந்தர்கள், கல்விமான்களை அணுகி அச்சிடுவதற்கு உதவி கோரினார். அவர்கள் இது அவசியப்பணி என்று சொன்னார்களே அல்லாமல் உதவ முன்வரவில்லை.

சென்னையில் இருந்தவர்களிடம் நம்பிக்கை இழந்த சிங்காரவேலு முதலியார் யாழ்ப்பாணத்தை நாடினார். யாழ்ப்பாணம் வழக்கறிஞர் கனகசபைபிள்ளை இதன் ஒரு பகுதியைப் பார்வையிட்டு பாராட்டி பொருளுதவி செய்ததுடன் சென்னை வழக்கறிஞர்களுக்கு இந்நூலை அச்சிட உதவ வேண்டும் என்று ஒரு சான்றிதழும் எழுதியளித்தார்.

அந்தச் சான்றிதழை சிங்காரவேலு முதலியார் பேராசிரியர் சேஷகிரி ராவ் என்பவரிடம் காட்டியபோது ‘நானும் இதேபோல ஒன்று எழுதிக்கொண்டிருகிறேன்’ என்று சொல்லி விட்டு பேசாமல் இருந்துவிட்டார். சென்னை குயுரேட்டரும் பச்சையப்பன் கல்லூரி தருமகர்த்தாவுமான வ. கிருஷ்ணமாச்சாரியிடம் சென்று மன்றாடினார் சிங்காரவேலு முதலியார்.

அவர் சில அச்சுக்கூடத்தவர்களிடம் கேட்டுவிட்டு இதற்கு செலவு நிறைய ஆகுமே என்று சொல்லி போகச் சொல்லிவிட்டார். மனம் சோர்ந்த சிங்காரவேலு முதலியார் தன் நூலை தூக்கி போட்டுவிட்டு சலித்திருந்தார்.

பாண்டித்துரை தேவர் சிங்கார வேலு முதலியாரின் இரண்டாவது அறிக்கையை பார்த்து மதுரையில் இருந்து தேடிவந்து சிங்காரவேலு முதலியாரைப் பார்த்தார்.

அபிதான சிந்தாமணி கைப்பிரதியைப் பார்த்ததுமே பாண்டித்துரைத்தேவர் ஆனந்தக்களிப்பு அடைந்தார். மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அச்சிட்டு வெளியிட முன்வந்தார்.

1910 இல் அபிதான சிந்தாமணியின் முதல் பதிப்பு வெளிவந்தது. பின்னர் அதில் விடுபட்டுப்போன விஷங்களை குறித்துக்கொண்டே வந்த சிங்காரவேலு முதலியார் இரண்டாம் பதிப்பை தயாரித்துக்கொண்டிருக்கும்போதே 1932 இல் மரணமடைந்தார். அதாவது 1890 முதல் கிட்டத்தட்ட நாற்பத்து இரண்டு வருடங்கள். ஒரு முழுவாழ்க்கையையே இதற்காகச் செலவிட்டிருக்கிறார்.

அபிதான சிந்தாமணி எப்படிப்பட்ட நூல்? முதன்மையாக இது ஒரு புராணக் கலைக்களஞ்சியம். இந்நூலில் அனேகமாக எல்லா புராணங்களும் அவற்றின் கதாபாத்திரங்களுக்குக் கீழே ரத்தினச் சுருக்கமாக அளிக்கப்பட்டிருக்கின்றன. பிறமொழிகளில் உள்ள புராணக் கலைக்களஞ்சியங்களில் தமிழ்ப் புராணங்கள் அனேகமாக இருப்பதில்லை.

ஒட்டுமொத்த இந்திய புராணங்கள் அளவுக்கே தமிழில் தனிப்புராணங்கள் உண்டு. அவையெல்லாம் இந்நூலில் உள்ளன. இந்நூலில் உள்ள தகவல்கள் இன்னமும் இந்திய தேசிய கலைக்களஞ்சியங்களில் சேர்க்கப்படவில்லை.

இரண்டாவதாக தொன்மையான சாஸ்திர நூல்கள் மருத்துவ நூல்கள் சோதிட நூல்கள் போன்றவற்றின் தகவல்களும் இந்த நூலில் அகர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக தொன்மையான தமிழ் வாழ்க்கையின் சித்திரம் கற்கக் கற்க முடிவிலாது விரியும். தமிழர் சிற்பவியல் ஆலயங்களைப்பற்றிய தகவல்கள் என இந்நூல் அளிக்கும் தகவல்களுக்கு முடிவே இல்லை.

மூன்றாவதாக தொல் தமிழ் இலக்கியங்களின் தகவல்கள் இந்நூலில் சுருக்கமாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியர்கள் நூல்கள் குறித்த விரிவான தகவல்கள் சுருக்கமான மொழியில் இந்நூலில் உள்ளன. ஆனால் இக்காலகட்டத்தில் தமிழ் நூல் ஆய்வுகள் முதற்கட்டத்தில் இருந்தன என்பதனால் இவை விரிவாகவும் முழுமையாகவும் இல்லை.

மூன்றாவதாக தமிழரின் அன்றாட வாழ்வியல் குறித்து மிக விரிவான சித்திரத்தை அளிக்கிறது அபிதான சிந்தாமணி. சாப்பாடு, திருமணச் சடங்குகள், சாவுச்சடங்குகள், சாதிகள், உபசாதிகள், ஆசாரங்கள், நம்பிக்கைகள், வழக்காறுகள்... நூறு வயது கண்ட ஆயிரம் பாட்டி தாத்தாக்களுக்குச் சமம் இந்த நூல்.

ங்காரவேலு முதலியார் தமிழுக்கு பெருந்தொண்டு புரிந்திருந்தாலும் சாதாரணமானவர்கள் நினைக்கப்படும் அளவுக்குக் கூட அவர் நினைவு கூரப்படுவதில்லை. அவரைப்பற்றிய தகவல்களே கூட அரிதாகவே உள்ளன. அபிதான சிந்தாமணி மிகப்பழைய கல்லச்சுப்பதிப்பே இப்போதும் ஒளிநகலெடுக்கப்பட்டு வெளிவருகிறது. அதை மறுபடியும் அச்சுகோர்த்து பிழைதிருத்தம் செய்து புதிய பதிப்பு கொண்டுவருவதற்கு நம்மிடம் இன்று அறிஞர்கள் இல்லை.

இந்த மாபெரும் நூலை உரிய முறையில் பிழைதிருத்தம் செய்வது எத்தனை பெரும்பணி என்பதை சொல்ல வேண்டியதில்லை. அத்துடன் தஞ்சை தமிழ் பல்கலை போன்றவை வெளியிட்டுள்ள பிழை மலிந்த நூல்களைப் பார்க்கையில் தமிழ் கலிவித்துறையால் அது சாத்தியமா என்ற பிரமிப்பே ஏற்படுகிறது.

தமிழகத்துப் பேராலயங்கள், மாபெரும் ஏரிகள் போன்றவற்றைப் பார்க்கையில் இந்த மகத்தான செல்வங்களை பேணி வைத்துக்கொள்ளக்கூட திறனற்ற தலைமுறையினராக இருக்கிறோமே என்ற சேர்வு ஏற்படுவதுண்டு. ஒவ்வொரு முறை அபிதான சிந்தாமணியைப் பார்க்கும் போதும் அதே நினைவுதான் எழுகிறது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »