ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

அச்சுப் பிரதி

 
ஸ்பெயின் தொடர்ந்தும் முதலிடத்தில் 153வது இடத்தில் இலங்கை

பிஃபா தர வரிசை;

ஸ்பெயின் தொடர்ந்தும் முதலிடத்தில்
153வது இடத்தில் இலங்கை

சர்வதேச உதைபந்து சம்மேளன (பிஃபா) தர வரிசையில் உலக சம்பியன் ஸ்பெயின் தொடர்ந்தும் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அத்துடன் உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரை முன்னேறிய நெதர்லாந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

சர்வதேச உதைபந்து சம்மேளனத்தின் (பிஃபா) புதிய தர வரிசை நேற்று வெளியிடப்பட்டது.

கடந்த ஒரு மாத காலத்தில் நடைபெற்ற 156 சர்வதேச போட்டிகள், மண்டலத்திற்கான 80 தகுதிகாண் போட்டிகள் மற்றும் 76 நட்புறவு போட்டிகள் அடிப்படையில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதில் ஸ்பெயின் தொடர்ந்து முதலிடத்திலும் நெதர்லாந்து இரண்டாவது இடத்திலும் காணப்படுகின்றன.

எனினும் மூன்றாவது இடத்தில் இருந்த ஜேர்மனி 4 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

பதிலாக பிரேஸில் 4 ஆவது இடத்தில் இருந்து 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதேவேளை பிஃபா புதிய தர வரிசையில் 9 நாடுகள் தமது சிறந்த தர நிலையை பதிவு செய்துகொண்டு ள்ளன.

ஸ்லோவேனியா (15), புர்கினா பாசோ (37), பெலாரஸ் (42), ஆர்மேனியா (60), பொட்ஸ்வானா (79), அஸர்பைஜான் (91), மத்திய ஆபிரிக்க குடியரசு (112) மற்றும் பிலிப்பைன்ஸ் (152) ஆகிய நாடுகளே தமது சிறந்த தர நிலையை பதிவு செய்துகொண்டுள்ளன.

இதில் மத்திய ஆபிரிக்க குடியரசு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச உதைபந்தாட்ட அரங்கிற்கு பிரவேசித்து தர வரிசையில் 60 இடங்கள் அதிரடியாக முன்னேற்றம் கண்டுள்ளது.

மத்திய ஆபிரிக்க குடியரசு அண்மையில் நடந்த அல்ஜீரியாவுடனான போட்டியில் வெற்றியீட்டியதன் மூலமே அந்த அணி அதிரடி முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அண்மைக் காலமாக பிஃபா தர வரிசையில் முன்னேற்றம் கண்டுவந்த இலங்கை உதைபந்தாட்ட அணி புதிய தரவரிசையில் 5 இடங்கள் பின்னடைந்துள்ளது.

எனினும் இலங்கை அணியின் தர நிலை புள்ளிகள் தொடர்ந்து 104 ஆகவே நீடித்துவருகிறது.

இதன்படி புதிய தர வரிசையில் இலங்கை 153 ஆவது இடத்தில் காணப்படுகிறது.

பிஃபா தரவரிசையில் முதல் 15 இடத்தில் உள்ள அணிகள், புள்ளி விபரங்ளும்

01. ஸ்பெயின் - 1881

02. நெதர்லாந்து - 1683

03. பிரேசில் - 1493

04. ஜேர்மனி - 1481

05. ஆர்ஜன்டீனா - 1320

06. இங்கிலாந்து - 1205

07. உருகுவே - 1167

08. போத்துக்கல் - 1123

09. குரேசியா - 1086

10. ரஷ்யா - 1061

11. எகிப்து - 1034

12. கிரேக்கம் - 1026

13. நோர்வே - 989

14. சிலி - 931

15. சுலோவேனியா - 926