வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

புரோட்லண்ட் நீர் மின் திட்டம் சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

புரோட்லண்ட் நீர் மின் திட்டம்
சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

நவம்பரில் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

35 மெகா வோட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய புரோட்லண்ட் நீர் மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக இலங்கை மின்சார சபைக்கும் சீன தேசிய உதிரிப்பாக கூட்டுத்தாபனத்திற்குமிடையில் நேற்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. மின்சார சபை சார்பாக அதன் தலைவரும் சீன கூட்டுத்தாபனம் சார்பாக பொது முகாமையாளரும் கைச்சாத்திட்டனர்.

களனி கங்கையினூடாக மேற்கொள்ளப் படும் இறுதி நீர் உற்பத்தி நிலையமான புரோட்லண்ட் திட்டம் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதோடு 2014ஆம் ஆண்டில் தேசிய மின் கட்டமைப்புடன் 35 மெகா வோட் மின்சாரம் இணைக்கப்பட உள்ளது.

புரோட்லண்ட் நீர் மின் திட்டத்திற்கு 102 மில்லியன் டொலர் மதிப்பீடு செய்யப்பட்ட போதும் சீன கம்பனி 82 மில்லியன் டொலருக்கு இதனை நிர்மாணிக்க முன்வந்ததாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க கூறினார். மொரகொல்ல மற்றும் கிங்கங்கை நீர்மின் நிலையங்களும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் சொன்னார்.

அது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், புரோட்லண்ட் மின் உற்பத்தி நிலையம் கிதுல்கலையில் நிர்மாணிக்கப்படும். 114 மீட்டர் நீளமும் 24 மீட்டர் உயரமும் கொண்டதாக இது அமைக்கப்பட உள்ளதோடு 3.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப் பாதை நிர்மாணிக்கப்படும்.

எரிபொருள் ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு அலகிற்கு 25 ரூபா செலவாகிறது. நீர் மின் உற்பத்திக்கு ரூ. 2.50 தான் செலவாகிறது. எனவே நீர் மின் உற்பத்தித் திட்டங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தவும் முன்னர் அமைக்கப்பட்ட நீர் மின் உற்பத்தி நிலையங்களை திருத்தியமைக்கவும் உள்ளோம்.

புதிய லக்ஷபான உற்பத்தி நிலையம் 14 மெகாவோட் மின் உற்பத்தி செய்யும் வகையில் 6970 மில்லியன் ரூபா செலவில் திருத்தவும் பழைய லக்ஷபானவை 3.2 கெமாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் 4200 மில்லியன் ரூபா செலவிலும் திருத்தப்படும்.

இது தவிர உக்குவலை, போவதென்ன ஆகிய நிலையங்கள் திருத்தப்படுகிறது. உமா ஓயா திட்டம் ஈரான் உதவியுடன் திருத்தப்படும். கட்டம் கட்டமாக நீர் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி அளவு அதிகரிக்கப்படும்.

சமனலவெவ நீர் திட்டமும் விரைவில் திருத்தப்பட்டு உற்பத்தி அதிகரிக்கப்படும். (ரு – து)


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »
»