வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக மாறுவோம்!

அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக மாறுவோம்!
 

பிறப்பிலிருந்து இறப்பு வரைக்குமான ஒரு குறுகிய பயணம்தான் நம் வாழ்க்கை. நாம் நேரான வளைவான பாதைகளில் குறுக்கும் நெடுக்குமாக துன்பங்களையும் இன்பங்களையும் சந்தித்துச் சென்று கொண்டிருக்கிறோம்.

எமது பாதைகளில் எம்மவர்களின் மரணங்களையும், ஏழைகளின் அழுகுரலையும் இரக்கமற்றவர்களின் கொடூரச் செயல்களையும் கண்டு கடந்தும் சென்று கொண்டிருக்கிறோம்.

உண்மையில் நாம் எங்கே போகிறோம்? எதை அடைவதற்காக இந்தப் பயணம்? எமது இலட்சியம் என்ன? மரணம் தான் இதன் முடிவா? நாம் மரணத்தை அடையவே பயணிக்கின்றோமா? உலகில் நாம் பிறந்தது இறப்பதற்குத்தான் என்றால் ஏன் நாம் பிறந்தோம்? ஒரு தாயின் உதர வலியில் அழுகைச் சத்தத்துடன் பிறந்த நாம் அதே அழுகைச் சத்தத்துடன் விடைபெறுவதில் என்னதான் அர்த்தமுள்ளது? நேற்றுப் பிறந்து, இன்று வளர்ந்து, நாளை மடியும் சுயநல வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? இக்கேள்விகள் எம் இதயத்திலிருந்தே எழுகின்றன.

அவை எம் இதயத்தையே சல்லடை போடுகின்றன. விடைகளை இதயத்திடமே தேடுகின்றன. ஆம்! வெறுமனே பிறந்து சருகென மறைவதில் என்ன பயன்? நாளை எம் மரணத்தின் பின் எம் நினைவாக சில கடதாசிகள் வண்ணம் பூசிக்கொள்ளலாம். ஏன்? அது கூட இல்லாமல் போகலாம் அதன் பின்னர் நாம் மறக்கப்பட்டு விடுவோம்! நாமும் இந்த உலகில் வாழ்ந்தோம் என்ற அடையாளம் தொலைக்கப்பட்டு விடும்.

வாழ்வின் வினோதமான விதிகளில் இதுவும் ஒன்று. மரணம் எமது பூவுலக வாழ்வின் முடிவு என்பதை நாம் அறிவோம். ஆனால் அது அடுத்த தலைமுறையின் ஆரம்பம் என்பதைத்தான் நாம் மறந்து விட்டோம். நாளைய தலைமுறை எங்கள் வாழ்வின் அடையாளங்களைத் தொலைத்து விடாதிருக்க எம்மிடம் ஏதாவது இருக்கிறதா? நாளைய தலைமுறைக்குக் கொடுப்பதற்கு அல்லது அவர்களுக்காய் விட்டுச் செல்வதற்கு எம்மிடம் ஏதாவது இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது எம்மிடம் அழகான வாழ்க்கை இருக்கிறது. உயிரினும் மேலான இலட்சியம் இருக்கிறது. இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி என்றுமே அடி பிறழாத கொள்கை இருக்கிறது. மனித நதியின் வாழ்க்கைப் பயணம் மரணமென்னும் கடலோடு ஒரு நாள் சங்கமித்துவிடும் என்று எமக்குத் தெரியும்.

பேசிய வார்த்தைகள், பார்த்த பார்வைகள், பழகிய காலங்கள், தாய், தந்தை, மனைவி, கணவன், பிள்ளையென நீண்டு செல்லும் உறவின் அத்தனை தோற்றப்பாடுகளும் மரணக்கடலில் மறைந்து விடும் என்றும் எமக்குத் தெரியும். ஆனால் சாதனைகளோ, இலட்சியங்களோ, கொள்கைகளோ மரணமெய்துவதில்லை. அவற்றைக் காலம் தன் முதுகில் சுமந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும்.

முயற்சி செய்பவனே மனிதன். முயற்சியற்றவன் வெறும் விலங்கு. சாதிக்க வேண்டும் என்கிற வெறி மோதிக் கை பார்த்து விடுவோம். என்கின்ற துணிச்சல் எம் நாடி நரம்புகளுக்குத் தேவைப்படுகின்றன. இலட்சியம் தீயாக நெஞ்சில் எரிந்து கொண்டிருக்க வேண்டும். எம் செயல்கள் அதற்கு நெய்யாக மாறி அந்த நெருப்பை வளர்க்க வேண்டும்.

இரக்கமுள்ள இதயம் வேலை செய்ய கூடிய கைகள் சிந்தனை ஆற்றல் படைத்த மூளை இவையே நமக்குத் தேவை. இலட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகள் செய்தால் இலட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான்” என்று உறுதிபடக் கூறுகின்றார் சுவாமி விவேகானந்தர்.

இப்போது எமக்குத் தெளிவாகின்றது. பிறப்பும், இறப்பும் எமக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தின் எல்லைக் கோடுகளோ இடையில் வாழும் வாழ்க்கை எமது இலட்சியத்தை அடையக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமே! இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவவிடுவோமா?

“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது! அதனிலும் அரிது கூன் குருடு செவிடு நீங்கிப் பிறத்தல்!” என்றாள் ஒளவை. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கக் குறைகளோடு பிறந்து கொண்டிருக்க, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் அங்கங்களை இழந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்க, எமக்குக் கிடைத்த இந்த அழகிய வாழ்க்கையை அர்த்தமற்றதாக்க நாம் முனைவோமா?

“நான் ஒரு வேட்டைக்காரனாக இருந்தால் காண்டாமிருகத்தை வேட்டையாடுவேன். ஒரு கொள்ளைக்காரனாக இருந்தால் அரசனின் பொக்கிஷத்தைக் கொள்ளையடிப்பேன். எறும்புகளை வேட்டையாடுவதாலும் பிச்சைக்காரனிடம் கொள்ளையடிப்பதிலும் என்ன பயன் இருக்கிறது?” என்றார் சுவாமி விவேகானந்தர்.

அதுபோல் எமக்கு கிடைத்த இந்த வாழ்க்கையில் எமது இலட்சியத்தை அற்பப் பொருட்களுக்கன்றி உயர்ந்த எண்ணங்களுக்காய் உருவாக்கிக் கொள்ளுவோம். தடைகளைப் பற்றி யார் கவலைப்படுவது? பொங்கிப் பெருகி அணையுடைத்து வரும் காட்டாறு பாறைகளைப் பற்றிக் கவலைப்படுவதுண்டா?” நெஞ்சு புண்பட்டு வேகும் போதும் துன்பப் புயல் நம்மைச் சுற்றி நாலா புறங்களிலும் வீசும்போதும் இனி வாழ்க்கையில் ஒளியையே காண முடியாதா என்று தோன்றும் போதும் நம்பிக்கையும் துணிவும் கிட்டத்தட்ட நம்மை விட்டு அகன்றுவிட்ட போதும் அப்படிப்பட்ட ஒரு பெரிய ஆன்மீகப்புயல் சூழ்ந்த நிலையின் நடுவில் தான் பிரம்மத்தினுடைய ஒளி நமது உள்ளத்தினுள் பிரகாசிக்கிறது.

“ஆடம்பர வாழ்க்கையின் மடியிலே தாலாட்டப்பட்டு வளர்ந்தவன் ரோஜா மலர்ப்படுக்கையில் படுத்திருப்பவன் எப்போதுமே ஒருதுளி கண்ணீர் சிந்தாதவன் எவனோ அவன் என்றைக்காயினும் சான்றோனாக ஆகியிருக்கிறானா? இத்தகையவன் என்றைக்காயினும் தனக்குள் இருக்கும் பிரம்மத்தை மலரச் செய்திருக்கிறானா?” என்று கேட்கிறார் சுவாமி விவேகானந்தர்.

எந்த இலட்சியம் கரடானதும் செங்குத்தானதுமான பாதையினைக் கொண்டதோ எந்த இலட்சியம் வேதங்களில் “அஹம் பிரம்மாஸ்மி” நான் பிரம்மமாகிறேன்” என்றும் “தத்துவமஸி! தத்துவமஸி!” “நீயே அது! நீயே அது” என்றும் அழைக்கப்படுகிறதோ அந்த இலட்சியம் தான் “தனக்குள் இருக்கும் பிரம்மத்தை மலரச் செய்தல்” ஆகும்.

எவனொருவன் எல்லோரிலும் இறைவனைக் காண்கிறானோ அவனே தனக்குள் இருக்கும் கடவுளையும் உணர்ந்து கொள்கிறான். எவனொருவன் மற்றவர்களுக்குச் சேவை செய்கிறானோ அவனே தனக்குள் இருக்கும் கடவுளுக்கும் சேவை செய்தவனாகிறான்.

கண்களைத் திறக்கின்றோம். உலகம் தெரிகிறது. கண்களை மூடுகின்றோம்; உலகம் தெரியவில்லை. எல்லாம் எமக்குள் இருக்கிறது. வாழ்வும் சாவும், சுகமும் துக்கமும், அன்பும் வெறுப்பும், அறிவும் அறியாமையும் எமக்குள்ளேயே இருக்கின்றன. தூசி படிந்த கண்ணாடி துடைக்கத் துடைக்க எப்படி விம்பத்தைத் தெளிவாகக் காட்டுகிறதோ அதுபோல் மற்றவர்களுக்காய்ச் செய்யும் சிறு நல்ல செயல்களும் எமது இதயக் கண்ணாடியை அழகாகத் துடைத்து எமக்குள் இருக்கும் கடவுளைக் காட்டுகின்றன. இதுதான் மகத்தான உண்மை.

இறுதியாக மனிதர்களின் மரணம் கூறும் செய்தியும் அதுவே! அது எமக்குக் கிடைத்த இந்த அழகிய வாழ்க்கையெனும் நாடகத்தின் திரை மூடப்படுமுன் இயலுமானவரை அடுத்தவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் எமக்குள் இருக்கும் கடவுளை உணர்ந்து கொள்வதும் அடுத்த தலைமுறைக்கு சிறந்த வழிகாட்டியாக வாழ்வதுமே ஆகும்.

“தேடிச் சோறு நிதம் தின்று -

பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி -

மனம்

வாடித் துன்பமிக வுழன்று -

பிறர்

வாடப் பல செயல்கள் செய்து

- நரை

கூடிக்கிழப்பருவம் எய்திக் -

கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும்

- இந்த

வேடிக்கை மனிதரைப் போலே

- நானும்

வீழ்வேனென்று நினைத்தாயோ?”

மகாகவி பாரதியார்


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
»