ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

அச்சுப் பிரதி

 
சாவா மூவா பேராடுகள்

சாவா மூவா பேராடுகள்

அச்சிடப்பட்ட அல்லது எழுதப் பட்ட எழுத்துகளின் மீது கண்களையும், கவனத்தையும் வேகமாக பயணிக்கச் செய்து படிக்கும் போது ‘சாவா மூவா பேராடு’ என்ற வார்த்தை எதிர்ப்பட்டால், அது படிப்பதற்கு சற்று கரடுமுரடானதாகவும், அர்த்தமற்றது போலவும் தோன்ற வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் பரிசோதனைச் சாலையில் பூதக் கண்ணாடி வழியாக அணுவின் முலக்கூறை உற்றுப் பார்த்து தேடுவது போல ‘சாவா மூவா பேராடு’ என்ற வார்த்தையையும் பதம்பிரித்துப் பார்த்து நிதானமாக உள்நோக்கினால் அந்த வார்த்தையில் பொதிந்து இருக்கும் ஓராயிரம் அர்த்தங்கள் பிரசவம் ஆகும்.

சாவா - மூவா - பேராடு

அதாவது மரித்தலும் இல்லாத மூப்பும் இல்லாத ஆடு என்று இதற்கு பொருள்.

அது என்ன விந்தை?

படைக்கப்பட்ட மனிதன், விலங்குகள் உட்பட எல்லா உயிரினங்களும் காலம் செல்லச் செல்ல மூப்பு அடைவதும், இறுதியில் மரணத்தில் லயிப்பதும் இயற்கை விதித்த மாற்ற முடியாத நியதி ஆயிற்றே?

நமது மூச்சின் ரகசியம் முழுவதையும் அறிந்து அதன் மூலம் மரணத்தை மூவாயிரம் ஆண்டுகள் வரை தள்ளிப் போட்டு வாழ்ந்ததாக கூறப்படும் திருமூலரைக்கூட மரணம் விட்டு வைத்ததாக தெரியவில்லையே?

அப்படி இருக்க ‘மே மே’ என்று கத்துவதைத் தவிர வேறு எதையும் அறியாத அப்பாவி ஆடுகள் மட்டும் எப்படி மூப்பு அடையாமலும், மரணத்தை சந்திக்காமலும் சிரஞ்சீவியாக வாழ முடியும் என்று வியப்பு தோன்றுகிறது அல்லவா?

உயிரினங்கள் அனைத்துக்கும் மூப்பு, அதன் பின் மரணம் என்று இயற்கை விதித்த கோட்பாட்டை ஆடுகள் விஷயத்தில் மட்டும் மாற்றியமைத்ததால் தான் சாவா மூவா பேராடு என்ற சொற்றொடர் ஏற்பட்டது.

இந்த அதிசயம் மன்னர் ராஜராஜன் காலத்தில் தான் நடைபெற்றது.

பத்து ஆடுகளைக் கொண்டு வந்து நிறுத்தி ‘ஓம் மந்திரக்காளி! இந்த ஆடுகள் அனைத்தும் முதுமையும் அடையாமல் இறந்தும் போகாமல் அப்படியே வாழட்டும்’ என்று வரம் கொடுக்கும் திறன் மன்னர் ராஜராஜனுக்கு வாய்த்து இருந்ததா?

ஒரு வகையில் இந்த கேள்விக்கு ‘ஆம்’ என்பதே சரியான பதில் ஆகும்.

மன்னர் ராஜராஜனின் இந்த மாயாஜால வித்தை நடைமுறையில் இருந்தது எப்படி என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அவரது காலத்திற்குள் கூடு பாய்ந்து சென்று தேடிப் பார்க்கலாம்.

கண்களை கூசச் செய்யும் மின் விளக்குகள் இல்லாத அந்தக் காலம் செல்வச் செழிப்பான பெரிய மாளிகையில் ஆங்காங்கே எண்ணெய் விளக்குகள் இருளை விரட்ட முயற்சி செய்து கொண்டு இருந்தன. ஆனால் அந்த மாளிகைக்கு சொந்தக் காரரான அந்தப் பெண்ணின் முகத்தில் இருள் படர்ந்து ஓடிய கவலை ரேகைகளை விரட்ட யாரும் இல்லை.

அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்சினைகளோ?

நிம்மதி தேடி அந்தப் பெண், தஞ்சைப் பெரிய கோயிலுக்கு நடையை கட்டுகிறார்.

அங்கே கோவிலில் 55 அடி சுற்றளவு கொண்ட பீடத்தில் 13 அடி உயரத்துக்கு பிரமாண்டமாக காட்சி அளித்த சிவலிங்கத்தை வணங்கி, ‘இறைவா எனது கவலைகைளை எல்லாம் தீர்த்துவை. நான் உனக்கு ஆண்டு முழுவதும் நெய் விளக்கு ஏற்றி காணிகை செலுத்துகிறேன்’ என்று மனமுருக விண்ணப்பிக்கிறார்.

அங்கே அதிகாரியாக இருப்பவரிடம் தனது எண்ணத்தை அவர் தெரிவிக்கிறார்.

உடனே அந்த அதிகாரி ‘ஆண்டு முழுவதும் இறைவன் சந்நிதியில் நெய் விளக்கு ஏற்ற இத்தனை காசு செலவாகும்’ என்று கூறி அந்தப் பெண்ணிடம் இருந்து உரிய பொற்காசு களை பெற்றுகொள்கின்றார்.

அத்துடன் இந்த பரிவர்த்தனை முற்றுப்பெற்றிருந்தால் அந்தப் பெண் கொடுத்த காசுக்கு உரிய அளவு நெய் வாங்கி அதை விளக்காக எரித்து முடிந்த அளவில் இந்த சம்பவம் நீர்த்துப் போய் இருக்கும்.

ஆனால் மன்னர் ராஜராஜன் ஆட்சியில் சிறு துரும்பு அசைந்தால் கூட அது மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ‘சா மூவா பேராடு’ திட்டம் உருவானது.

மன்னரின் இந்த மகத்தான திடடம் எப்படி நிறைவேறியது என்ற அதிசயத்தைத் தொடர்ந்து காணலாம்.

கோயிலில் நெய் விளக்கு ஏற்றுவதாக நேர்த்தி செய்துகொண்ட பெண், கோவில் அதிகாரியிடம் அதற்கு உரிய தொகையை செலுத்துகிறார். கோயில் கணக்கர் அந்தப் பணத்தை வரவு வைத்துக் கொள்கிறார்.

அதே சமயம், உழுவதற்கு நிலம் இன்றி வாழ்க்கை சக்கரத்தை நகர்த்திச் செல்ல வழி இல்லாமல் தவிக்கும் ஏழை பற்றிய தகவல் சேகரிக்கப்படுகிறது. உடனே அந்த ஏழைத் தொழிலாளி கோயிலுக்கு அழைக்கப்படுகிறார்.

அவரிடம் கோயில் அதிகாரி ‘கோவிலில் நெய் விளக்கு ஏற்ற நாள் ஒன்றுக்கு ஆழாக்கு நெய் கொடுக்க வேண்டும். அத்துடன் உனது வாழ்க்கைச் செலவுக்கும் வழி பார்த்துக்கொள்ள வேண்டும். எத்தனை ஆடுகள் இருந்தால் இது உனக்கு சாத்தியம் ஆகும்? என்று கேட்கிறார்.

‘ஐயா 06 பெண் ஆடுகளும், இவற்றுடன் கடா மற்றும் குட்டி ஆடுகளும் இருந்தால் அவற்றை வைத்து நான் பிழைத்துக் கொள்வேன். அத்துடன் கோயிலுக்கும் நான் தினமும் ஆழாக்கு நெல் கொடுக்க முடியும்’ என்று அந்த தொழிலாளி கூறுகிறார்.

உடனே கோவில் அதிகாரி மனச்சுமையை இறக்கி வைப்பதற்காக தனது பணச் சுமையின் ஒரு பகுதியை இறக்கி வைத்துச் சென்ற பெண்ணிடம் இருந்து பெற்ற பொற்காசுகளைக் கொண்டு, ஏழை தொழிலாளி விண்ணப்பித்தபடி ஆடுகளை வாங்கி அவரிடம் ஒப்படைக்கிறார்.

அப்போது மன்னர் ராஜராஜன் உத்தரவுப்படி அந்த ஏழைத் தொழிலாளியிடம் ஒரு நிபந்தனையைக் கோவில் அதிகாரி தெரிவிக்கிறார்.

‘இதோ நீ கேட்ட ஆடுகள். இவற்றை வளர்த்து அது போடும் குட்டிகளை விற்று உனது வாழ்க்கைச் செலவுகளை கவனித்துக் கொள்வதுடன் நாள் தோறும் கோவிலுக்கு ஆழாக்கு நெய் கொடுத்துவிட வ§ண்டும். உனது கணக்கில் இந்த ஆடுகள் பற்றிய விவரம் நிலுவையில் இருக்கும். ‘எத்தனை ஆண்டுகளுக்குப் பின் கேட்டாலும் இதே அளவிலான ஆடுகளை நீ கோயிலில் ஒப்படைக்க வேண்டும். அதாவது இப்போது கொடுக்கப்படும் ஆடுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வயது என்ன இருக்கிறதோ அதே போன்ற அளவிலான ஆடுகளை கோயிலுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும்’ என்று கோயில் +திகாரி நிபந்தனை விதிக்கிறார்.

அந்த ஏழைத் தொழிலாளி, தனக்கு இலவசமாக வழங்கப்பட்ட ஆடுகளை உற்சாகமாக தனது வீட்டுககு ஓட்டிச் செல்கிறார். சில நாட்களிலேயே அந்த ஆடுகள் பல்கிப் பெருகி விடுகின்றன.

தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைப்படி அவர் கோயிலுக்கு நாள் தோறும் ஆழாக்கு நெய் வழங்கி விடுகிறார்.

அந்த நெய், கவலை குடிகொண்ட பணக் கார பெண்ணின் துயரத்தைத் தீர்க்கும் மருந்தாக, இறைவன் சந்நிதி முன் விளக்காக எரிந்து வெளிச்சம் காட்டுகிறது.

அதே சமயம் பல்கிப் பெருகிய ஆட்டுக்குட்டிகளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தால், இருள் சூழ்ந்து இருந்த அந்த ஏழைத் தொழிலாளியின் வாழ்விலும் வெளிச்சம் ஒளி விடுகிறது.

சமுதாயத்தில் ஒரு நிலையான இடத்துக்கு முன்னேறிய அந்தத் தொழிலாளி தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைப்படி ஏற்கனவே தனக்கு வழங்கப்பட்ட அதே அளவிலான அதே வயதுடைய ஆடுகளை கோயிலுக்கு திரும்பச் செலுத்திவிடுகிறார்.

அதாவது சில ஆண்டுகளுக்குப் முன் ஏழைத் தோழிலாளியிடம் வழங்கப்பட்ட ஆடுகள் அதே அளவில் மூப்பு அடையாமலும் மரணம் அடையாமலும் மீண்டும் கோயிலுக்கு திரும்ப வந்துவிட்டன.

மன்னர் ராஜராஜனின் இந்த அற்புத பொருளாதார திட்டம் என்ற ஒரு கல் கொண்டு வீசப்பட்டதில் வீழ்ந்த ‘மாம்பழங்கள்’ எத்தனை என்பதைப் பார்ப்போம்.

* மனதில் கவலையுடன் வந்த பெண்ணின் நேர்த்திக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

* கோவிலில் இறைவன் சந்நிதி முன் நாள்தோறும் நெய் விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி தொய்வின்றி நடைபெற்றது.

* அந்தப் பெண் வழங்கிய நிதியைக் கொண்டு வாங்கப்பட்ட ஆடுகள் மூலம், ஏழைத் தொழிலாளி ஒருவரின் வாழ்க்கை மேம்பட்டடது.

* எல்லாவற்றுக்கும் மேலாக முதலீடாக கிடைத்த அதே அளவிலான ஆடுகள், வேறு ஒருவரின் வாழ்க்கைக்கு உதவுவதற்காக மீண்டும் கோவிலுக்கே வந்து சேர்ந்தன.

ஆடுகள் மட்டும் அல்லாமல், பசுக்களும் இதே பாணியில் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டன.

இறை பணியை, இல்லாதவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு திருப்பிவிட்ட இந்த அதிசய திட்டம் செயற்படுத்தப்பட்ட விதம் தஞ்சைப் பெரிய கோயில் கற்சுவர்களில் எழுத்தோவியமாக காலம் கடந்தும் சாகாவரம் பெற்று காட்சி அளித்துக் கொண்டு இருக்கின்றன.