ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

அச்சுப் பிரதி

 
பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க அமைச்சர் சந்திரசேகரனின் இறுதிக் கிரியை

பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க அமைச்சர் சந்திரசேகரனின் இறுதிக் கிரியை

தலவாக்கலை சோக மயம்; அரசியல் பிரமுகர்கள், திருமாவளவன் பங்கேற்பு

காலஞ்சென்ற அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நேற்று பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் தலவாக்கலை லிந்துலை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.

அமைச்சரின் வீட்டிலிருந்து நேற்று நண்பகல் ஒரு மணிக்கு முக்கிய பிரமுகர்கள், மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ எடுத்து வரப்பட்ட அமைச்சரின் பூதவுடல் மாலை மூன்றரை மணியள வில் லிந்துலை நகர சபை மைதானத்தை அடைந்தது.

தலவாக்கலையில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், எம்.பியுமான பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமான், சி. பி. ரத்நாயக்க, சுசில் பிரேமஜயந்த், தி. மு. ஜயரத்ன, திஸ்ஸ வித்தாரன, பிரதி அமைச்சர்களான பெ.

ராதாகிருஷ்ணன், வி. புத்திரசிகாமணி, எம். எஸ். செல்லச்சாமி, மத்திய மாகாண கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன், புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், எதிர்க்கட்சியைச் சேர்ந்தோர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் நகர சபை மைதானத்தில் நேற்று குழுமியிருந்தனர்.

இந்தியாவின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனும் நேற்று அமைச்சரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக லிந்துலை நகர சபை மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்றனர்.

அலை அலையாக வந்த மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். நகர சபை மைதானத்து க்குள் நுழைய முடியாத நிலையில் மைதானத்தை சூழவுள்ள தேயிலை மலைகளின் படிக்கட்டுக்களில் பெருந்திரளான மக்கள் நின்ற வண்ணம் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அமைச்சரின் பூதவுடலுக்கு கண்ணீர் மல்க தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

 அமைச்சரின் இறுதிக் கிரியைகளை முன்னிட்டு ஹட்டன், தலவாக்கலை நகரெங்கும் சோகமயமாக காட்சியளித்தது. கடைகள் பூட்டப்பட்டிருந்ததுடன் வெள்ளைக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.

இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலைக்கு விஜயம் செய்து தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு கொண்டு வரப்பட்ட அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு வீதியின் இரு புறங்களிலும் குழுமியிருந்த ஏராளமான மக்கள் மலர்கள் தூவியும் கண்ணீராலும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

இறுதி அஞ்சலியின் போது அரசாங்கம் மற்றும் அமைச்சரவை சார்பில் அமைச்சர் தி. மு. ஜயரத்ன இரங்கல் உரை நிகழ்த்தினார்.

ஜனாதிபதியின் இரங்கல் உரையினை பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் வாசித்ததுடன் தனது உரையையும் ஆற்றினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் இரங்கல் உரையினை பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர சமரவீர வாசித்தார் மலையக மக்கள் முன்னணி சார்பில் அதன் பொதுச் செயலாளர் எஸ். விஜயகுமாரன் இரங்கல் உரை நிகழ்த்தினார்.

இந்திய அரசாங்கம் மற்றும் தமிழகம் சார்பில் தொல் திருமாவளவன் இரங்கல் உரையாற்றினார்.

இறுதியாக அமைச்சரின் மனைவி திருமதி சாந்தினி சந்திரசேகரன் நன்றியுரை நிகழ்த்தினார்.

அமைச்சரின் பூதவுடலுக்கு பொலிஸ் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. இந்து மதம் மட்டுமன்றி பெளத்த, இஸ்லாமிய மத அனுஷ்டானங்களும் இடம்பெற்றன. பசில் ராஜபக்ஷ எம்.பி. இறுதி வரை இருந்து அரச தரப்பிலான அனைத்து கடமைகளையும் முன்னெடுத்தார்.

அமைச்சரின் பூதவுடல் நேற்று மாலை 6.10க்கு உறவினர்கள், கட்சித் தொண்டர்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் அக்கினியுடன் சங்கமமானது.

அவரது மருமகன் பிரசாத் பூதவுடலுக்கு தீ வைத்தார்.