ஹிஜ்ரி வருடம் 1430 துல்கஃதா பிறை 09
விரோதி வருடம் ஐப்பசி மாதம் 11ம் திகதி புதன்கிழமை

அச்சுப் பிரதி

 
தர்ஹாநகர் ஆலிம் ஸாஹிப் அப்பா தைக்காவில் 147வது ம'hயிகுமார் கந்தூரி

தர்ஹாநகர் ஆலிம் ஸாஹிப் அப்பா தைக்காவில் 147வது ம'hயிகுமார் கந்தூரி

27.10.2009ம் திகதி, தர்ஹாநகர் ஆலிம் ஸாஹிப் அப்பா தக்கியாவில் நடைபெற்ற 147வது மஷாயிகுமார் கந்தூரியை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டுகின்றது.

இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் பின், இஸ்லாம் இறைநேசர்களின் மூலமே பரவியது. பாதுகாக்கப்பட்டது. இது இஸ்லாமிய உக வரலாறு இதன் அடிப்படையில் ‘ஆலிம் ஸாஹிப் அப்பா’ அவர்களது இஸ்லாமிய பிரசாரம் குறிப்பிடத்தக்கது.

வையகம் போற்றும் இறையருள் பெற்ற ஆத்மீக ஞானிகள் அனந்தம் அவர்களின் வரிசையில் அஷ்ஷெய்கு குதுபுஸ்ஸமான் ஹஸன் இப்னு உஸ்மான் மக்தூமி (றழியல்லாஹ¥ அன்ஹு) அவர்கள் சிறப்பிற்குரியவர்கள். அவர்கள் ‘ஆலிம் ஸாஹிப் அப்பா’ எனச் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார்கள். இவர்களது தர்ஹா, களுத்துறை மாவட்டத்தில்,தர்ஹா நகர் எனும் ஊரில் அமைந்துள்ளது.

தர்ஹா நகரை பிறப்பிடமாக கொண்ட ஷெய்கு உஸ்மான் இப்னு பரீத் குமஸ்தர் அவர்களிற்கும் காலிச் சோலை ஜம்புகொடை கிராமத்தைச் சேர்ந்த பாத்திமா எனும் அன்னைக்கும் ஹிஜ்ரி 1200 இல் கி. பி. 1785ல் அஷ்ஷெய்கு ஹஸன் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் செல்வப் புதல்வராக பிறந்தார்கள்.

இவர்கள் பிறந்து இற்றைக்கு 230 வருடங்களாகின்றன. இவர்கள் தந்தை வழியில் ஹழ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களது 43 வது தலைமுறையைச் சார்ந்தவர்களாகும்.

இவர்கள் தாயின் கர்ப்பத்திலிருக்கும் போது தந்தை ஒரு கனவு கண்டார். ‘தம் மடியில் இரு புறாக்கள் வந்தமர்ந்தன. ஒன்று பறந்து விட்டது மற்றையது என் கரத்தில் அகப்பட்டது’ அதற்கு ‘தஃபீர்’ கனவுக்குரிய விளக்கத்தை, மனைவி பாத்திமா இவ்வாறு கூறுகிறார்.

‘நானும் என் வயிற்றிலுள்ள சிசுவும் தான் அவ்விரு புறாக்களாகும். பறந்தது நான், உங்கள் கையில் சிக்கியது என் வயிற்றிலுள்ள குழந்தையாகும். இக்குழந்தை பிறந்து ஒன்பதாம் நாள், நான் இறையடி சேர்வேன் அதற்குச் சான்றாக எம் முற்றவெளியிலுள்ள ஆலவிருட்சம் இலைகள் உதிர்ந்து பசுமையிழந்து காணப்படும். அதே சமயம் என் பிள்ளை அல்லாஹ்வின் ஆத்மீக ஞானியாகவும். உயர்தர இறை நேசச் செல்வராகவும, புகழோடு திகழ்வார்’ எனவும் முன்னறிவிப்புச் செய்தார்.

இவ்வாறான கனவிற்கு விளக்கமளித்த தீர்க்கதரிசன அறிவிப்புக்கள், தவறாது நடந்தேரியது குறிப்படத்தக்கது. அவர்கள் அல்லாமா அஷ்ஷெய்கு கமாலுத்தீன் திமைரி (ரஹ்) ‘ அவர்கள் ஹயாத்துல் ஹயவானுல் குப்றா’ எனும் நூலின் முதற்பாகத்தில் புறாக்கள் சொற்பனம் பற்றிக் கூறும் பொழுது, அதனைக் காண்பது உற்ற தோழன் அல்லது உற்றார்களின் குடும்ப விடயங்களை அது அறிவிக்கும் என்கிறார்.

நோயாளியின் தலைமேல் கண்டால் அது அவரின் மரணத்தைக் குறிக்கும். ஒருவரிடமிருந்து புறா பறந்து மீளாவிட்டால் அது அவனது மனைவியை விவாகரத்துச் செய்வதை அல்லது இறப்பதைத் தெரிவிக்கும் என ‘தஃபிர்’ விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆனால் ஆலிம் ஸாஹிப் அப்பா அவர்களது தாய் கற்றறிந்த மாதுவல்ல.

எனினும் அளவர்களது தாய் இறைஞனப் பேரொளி மூலம் அறிவு பெற்றவர். இல்ஹாம் எனும் உள்ளுணர்வு வாயிலாக அல்லாஹ் அவர்களை இறைநேசராக ஆக்கியுள்ளதை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

தந்தையின் பராமரிப்பில் இவர்கள் ஆரம்பக் கல்வியைப் பெற்றார்கள். காயல்பட்டணத்தைச் சேர்ந்த நஹ்வி ஆலிம் என புகழ்பெற்ற ஷெய்கு லெப்பை அப்துல் காதிர் நைனாப் புலவர் ஆலிமிடம், ஆலிம் அப்பா ஸாஹிப் கற்றார்கள்.

அறபு, இலக்கணம், இலக்கியம், தஃப்ஸிர், பிக்ஹு, சட்டக்கலை, தஸவ்வுப், ஆன்மீகத் தத்துவக்கலை, அல்காயித் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை, உஸ¤லுத்தீன் – மார்க்கச் சட்ட அடிப்படை, தஸவ்வுப் ஆத்மீக ஞானிகளின் தரீக்கா வழிமுறைபோன்ற சகல கலைகளையும் அவர்கள் கற்றுத் தேர்ந்தார்கள்.

இவர்களது பேராசிரியர் அல்லாமா அஷ்ஷெய்கு நஹ்வி ஆலிம் (ரஹ்) அவர்கள், சென்னை வள்ளாரப்பேட்டையில் குணங்குடிமஸ்தான் ஸாஹிப் எனும் அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் அவர்களது அடக்கஸ்தலத்திற்கு அருகாமையில் சமாதியுற்றுள்ளார்கள். அது பலரும் ‘ஸியாரத்’ செய்யுமிடமாகவும் அமைந்துள்ளது.

இவர்களது பிறப்பு கல்விச் செல்வம் ஆகியவற்றை, அல்லாமா அஸ்ஸெய்யித் முஹம்மத் மாப்பிள்ளை ஆலிம் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் ‘மவாஹிபுர ரஹ்மான்’ எனும் வரலாற்று நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

வர்த்தகராக இருந்த இவர்கள். கதீபாகவும் கடமையாற்றினார்கள். காலிக்கோட்டை ஜும்ஆப் பள்ளியிலும், கண்டி மீராமக்காம் ஜும்ஆப் பள்ளியிலும் கதீபாகச் சேவைபுரிந்துள்ளார்கள்.

மக்களுடன் சேர்ந்து வாழும் பொழுதுதான் அவர்களை மார்க்க வழியில் அழைக்கலாம். ஒதுங்கி வாழ்வது நபி (ஸல்) அவர்களின் பண்பல்ல. எனவே சமூகத்துடன் சேர்ந்து வாழ்ந்து அவர்களைத் திருத்தும் உயர் பண்பு இவர்களின் அணிகலனாகும். ஏழைகளுடனும் இறைநேசர்களுடனும் இவர்கள் கூடி வாழ்ந்தார்கள்.

அவர்கள் துறைபோகக் கற்ற பேரறிஞராகத் திகழ்ந்தார்கள். எனினும் அல்லாஹ்வுடைய பரிபூரணமான காமிலான ஒரு ஷெய்கு தேவை என்ற ஷரீஆ வழிமுறையை ஏற்று பின்வருமாறு ஈடுபட்டார்கள்.

‘ஸ¤ரா யாஸின்’ ஓதும் நோக்கத்தை அடையச் செய்யும் ‘ஸம்ஸம்’ நீர் குடிக்கும் குறிக்கோளை பெறச் செய்யும் எனும் நாயக வாக்கிற்கிணங்க சுமார் 12 வருடமாக யாஸின் ஸ¤ராவை ஓதி வந்தார்கள்.

காலையிலும் நபி (ஸல்) அவர்களின் பேரிலும் இரு யாkனை ஓதி அதனை ‘ஈஸால் ஸவாபு’ என்ற முறையில் அவர்களுக்கு அதன் நன்மைகளைச் சேர்த்து வந்ததுடன் தம் தேவையை அல்லாஹ்விடம் இதன் மூலம் வேண்டி நின்றார்கள்.

ஆலிம் ஸாஹிப் அப்பா அவர்களின் பிரார்த்தனை அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்களுக்குரிய ஷெய்குமார்களை அவர்களிருக்குமிடத்திற்கு அல்லாஹ் அனுப்பி வைத்தான். இது அவர்களது சிறந்த இறைபக்தியையும் உயர்ந்த தகுதியையும் சுட்டிக் காட்டுகிறது.

அஸ்ஸெய்யித் ஹஸனுல் அத்தாஸ் பாஅலவி (றழி) அவர்கள், முதல் அஷ்ஷெய்கு ஹஸன் (றழி) அவர்களின் ஷெய்குவாவர். இவர் ஜாவாவிலிருந்து வந்து காலித் துறைமுகம் அடைந்தார்கள். இவ ர்கள் நபி (ஸல்) அவர்களின் குடும் பத்தைச் சார்ந்தவர்கள்.

அஸ்ஸெய் யது அப்துல்லாஹ் இப்னு அலவிய் யுல் ஹத்தாத் (றழி) அவர்களின் உஸ்தாதும் ஷெய்குமாகிய குதுப்புஸ்ஸமான் கெளது அஷ்ஷெய்யத் உமர் இப்னு அப்துர் ரஹ்மானுல் அத்தாஸ் பாஅலவி (றழி) அவர்களின் புதல்வராகும்.

அஷ்ஷெய்கு ஹஸன் (றழி) அவர்கள் முதலில் இவர்களைச் சந்தித்து பைஅத் தீட்சை பெற்றார்கள். முஹயித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றழி) அவர்களது காதிரிய்யா தரீக்காவான வழிமுறைகளையும் திக்ர் முறைகளையும் ஷெய்கு அவர்களிடம் பெற்றுக் கொண்டார்கள்.

’ராதிபுல் அதாயிய்யா பீ வbபதித் தரீக்கத்தில் காதிரிய்யா’ எனும் மாஷாயிகுமார் ராதிபை அத்தாஸ் பாஅலவி (றழி) அவர்கள் மூலமே ஆலிம் ஸாஹிப் அவர்கள் பெற்றுள்ளார்கள்.

இஸ்லாமிய சமயப் போதனைகளை நிகழ்த்திய நபிமார்களும், வலிமார்களும் இயற்கைக்கு மாறான அற்புதங்களைக் காட்டி உள்ளார்கள். அல்லாஹ் இஸ்லாத்தை பரப்பி பாதுகாக்க வல்லவன். அதனை நபிமார்கள். வலிமார்கள் வாயிலாகவே செயல்படுத்துகின்றான்.

நபிமார்கள் நிகழ்த்தும் அற்புதங்களை ‘முஃஜிஸா’ எனவும் வலிமார்கள் காட்டும் அற்புதங்களை ‘கறாமத்’ என்றும் அறபியில் அழைக்கப்படும். இந்த அடிப்படையில் ஆலிம் ஸாஹிப் அப்பா அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் அனந்தம்.

ஆலிம் ஸாஹிப் அப்பா அவர்கள் இலங்கையில் எட்டுத் திக்குகளிலும் இஸ்லாமிய சமய சேவையை மேற்கொண்டார்கள். குறிப்பாக காலி, அம்பாந்தோட்டை, மாவனல்லை, ஹிங்குல, கனேதன்னை, கண்டி, கொழும்பு, களுத்துறை, மக்கூன், பேருவல, துந்துவ, தர்காநகர் ஆகிய பிரதேசங்களில் கடமையாற்றியுள்ளார்கள்.

இறுதியாக தமது முரீதின்கள் – சீடர்கள் பின்பற்றி நடப்பதற்காகவும் தமது தரீக்கா வழிமுறை மறுமை நாள் வரை நீடிக்கும் எனக்கூறி அதனை நிலைப்படுத்துவதற்காகவும் 4 கலீபாக்களை நியமித்தார்கள்.

1. அளுத்காமத்தைச் சேர்ந்த அவர்களது மருகர் செய்கு அப்துல் காதிர் ஆலிம் (றழி) அவர்கள்

2. பேருவல அல்லாமா அஷ்ஷெய்கு இஸ்மாயில் பர்பலி அவர்கள்

3. களுத்துறை நைநார் முஹம்மது ஆலிம் அவர்கள்

4. கொழும்பு அப்துல் கபூர் ஆலிம் அவர்கள்

மேற்குறித்த 4 பேர்களின் கிலாபத்தில், பேருவல அல்லாமா அஷ்ஷெய்கு இஸ்மாயில் பர்பலி அவர்களது கிலாபத் அவர்களது பேரரான அஷ்ஷெய்கு ஹம்ஸா ஆலிம் அவர்களுடன் முடிவுற்றது.

ஆலிம் ஸாஹிப் அப்பா அவர்கள் ஹிஜ்ரி 1283ஆம் ஆண்டு, முஹர்ரம் பிறை ஏழில் செவ்வாய்க்கிழமை அவர்களது 83ஆம் வயதில் இறையடி சேர்ந்தார்கள். ஆலிம் ஸாஹிப் அப்பா அவர்கள் அழுத்காமத்தில், துல்கஃதா பிறை 8ல் மஷாயிகுமார் கந்தூரியை ஆரம்பித்து வைத்தார்கள்.

இது அவர்களது ஷெய்குவின் ஷெய்காகிய அஷ்ஷெய்யிது அஷ்ஷெய்கு ஜிப்ரி மேளலானா (றழி) அவர்கள் வபாத்தான தினமாகும். இதன்படி 147 வருடங்களாக இக்கந்தூரி தர்கா நகரில் நடைபெறுகின்றமை சிறப்புக்குரியதாகும்.

வல்ல அல்லாஹ், நபிமார்கள், மஷாயிகுமார்கள் கிரக்கத்தால் எல்லா முஸ்லிம்களுக்கும் அருள் புரிவானாக நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவானாக, ஆமீன்.